Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
குதிர், தொம்பை, பத்தாயம், குலுமை இவையெல்லாம் என்னவென்று தெரியுமா?

குதிர், தொம்பை, பத்தாயம், குலுமை இவையெல்லாம் என்னவென்று தெரியுமா?

Kalki Online 1 year ago

குதிர், தொம்பை, பத்தாயம், குலுமை - இதெல்லாம் என்னவென்று யோசிக்கிறீர்களா? ஒரு காலத்தில் நம் விவசாயிகள் அதிகமாகப் பயன்படுத்திய சேமிப்புக் கலன்கள்தான்!

தந்திரக்கார வியாபார உலகம், நம்மிடம் இருந்து பறித்தெடுத்த எத்தனையோ நல்ல விஷயங்களில் இவையும் அடக்கம்! நம்முடைய பணத்துக்கு மட்டுமல்ல; சூழலுக்கும் வேட்டு வைக்காத இதுபோன்ற பொருட்களெல்லாம் நம்மைவிட்டு அகன்றதோடு, அவற்றின் பெயர்கள்கூட புழக்கத்தில் இருந்து மறைந்து கொண்டிருக்கின்றன!

இந்தச் சூழலில், பாரம்பர்யத்தை மறக்காமல் இப்படிப்பட்ட சேமிப்புக் கலன்களை ஆங்காங்கே ஓரிருவர் பராமரித்துப் பயன்படுத்திக் கொண்டிருப்பது ஆறுதலான விஷயம்.

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு குதிர், அடுக்குப் பானையெல்லாம் கட்டாயம் இருக்கும். அடுக்குப் பானையில்தான் உப்பு, புளி, மிளகாய் போட்டு வைத்திருப்போம். அதில் விதைகளைக்கூட சேமிச்சு வைக்கலாம். உப்பைப் போட்டு முட்டைகளை வெச்சா கெட்டுப் போகாது. அப்படியே குளுகுளுனு இருக்கும். இப்பவெல்லாம் துருப்பிடிக்காத எஃகு பொருட்கள் வந்த பிறகு அடுக்குப் பானையெல்லாம் போயே போச்சு.

அறுவடை பண்ணிட்டு வரும் நெல், தானியங்களைக் கொட்டி வைக்கிறதுக்கு குதிர் இருக்கும். ஒவ்வொண்ணும் பத்து, பன்னிரண்டு அடி உயரம் வரை கூட இருக்கும். வரகு, வைக்கோல், களிமண்ணைச் சேர்த்து, ஊறவெச்சு குதிர் செய்வாங்க. அது மேல சாணிப்பால் போட்டு மெழுகிடுவாங்க. அதுக்குள்ள தானியங்களைக் கொட்டி வெச்சா வருஷக் கணக்கா கிடக்கும். கூடவே வேப்பிலை, நொச்சியிலை இதையெல்லாம் போட்டு வெச்சுட்டோம்னா பூச்சி, பொட்டு அண்டாது. அப்படித்தான் இந்த குதிர பராமரிச்சு வைக்க வேண்டும்.

வீட்டுத் தேவைக்குத்தான் குதிர். பெரிய அளவுல அம்பது, அறுபது மூட்டைனு சேமிக்கணும்னா பத்தாயம் கட்டி வெச்சுருப்பாங்க. மாம்பலகை மாதிரியான பலகைகளை வெச்சு தயார் பண்ணியிருப்பாங்க. ஒவ்வொரு விவசாயி வீட்டுலயும் ஒண்ணு, ரெண்டு பத்தாயம் கண்டிப்பாக இருக்கும். அறுவடை முடிஞ்சதும் அதுல நெல்லைக் கொட்டி வெப்பாங்க. வருஷக் கணக்குல கிடக்கும். தேவைப்பட்டப்ப எடுத்துப் பயன்படுத்துவாங்க. இப்பொழுது இருக்கும் தலைமுறைகளுக்கெல்லாம் இது தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.

அறுவடை செய்யறப்பவே விதைக்காகனு கொஞ்சம் கதிரை முத்த விடுவோம். அதை அறுத்து வெயில்ல காய வெச்சு, வைக்கோலுக்குள்ள சுத்தி, அதுக்கு மேல சாணியைப் போட்டு மெழுகி பத்திரப்படுத்தி வைப்போம். இதுக்கு பேரு கோட்டை. அமாவாசை அல்லது சிவராத்திரி அன்னிக்கு விதை நெல்லைக் காய வெச்சு, மறுநாள்தான் இப்படி கோட்டை கட்டுறது பழக்கம். இப்படிச் செய்யுறதால நெல்லோட முளைப்புத் திறன் அதிகமாகும். ஒரு வருஷம் வரைக்கும் விதை நெல்லுக்கு வீரியம் குறையாது. இதுவே பெரிய அளவுல விதை நெல் சேமிக்கணும்னா அதுக்கு சேர் கட்டி வைக்கிறதுனு இன்னொரு முறையும் இருந்துச்சு. வீரிய விதை, அது, இதுனு வந்த பிறகு காசு கொடுத்து சிறுகட்டு சிறுகட்டாக (packet) வாங்க ஆரம்பிச்சாங்க. கோட்டையைக் கோட்டை விட்டுட்டாங்க.

கள்ளத்தனம் புரிவதில் கை தேர்ந்த வில்லத்தனம் கொண்ட 10 விலங்குகள் தெரியுமா?

விதைக்காக சேமிக்கற தானியங்களில் மணல் இல்லைனா, சாம்பல் கலந்து வைக்கலாம். துவரையை செம்மண்ணோடு கலந்து வைப்பாங்க. பெரும்பாலும் அடுக்குப் பானையை அடுப்புக்கு மேலதான் தொங்க விட்டிருப்பாங்க. அடுப்புல வர்ற புகையே, பூச்சி விரட்டியா பயன்படும். தரையில் வட்டமாகவோ, சதுரமாகவோ குழியெடுத்து அதுல தானியங்களைக் கொட்டி, சாக்கு போட்டு, கல்லால் மூடி வெச்சு சேமிக்கிற பழக்கமும் இருந்திருக்கு.

இப்படி ஒண்ணொண்ணுக்கும், ஒவ்வொரு யுக்தியைக் கண்டுபிடிச்சு பயன்படுத்தியிருக்காங்க நம்ம முன்னோர்கள். ஒவ்வொரு பகுதியிலயும் ஒவ்வொரு மாதிரியான சேமிப்புக் கலன்களையும் பயன்படுத்தியிருக்காங்க. ஆனா, அது மாதிரியான சேமிப்புக் கலன்களையெல்லாம் வடிவமைக்கிறதுக்கு கூட இன்னிக்கு ஆளேயில்லை.

ஆம், எவ்வளவு பாரம்பரிய முறைகளை இழந்து இருக்கிறோம் என்று நினைக்கும் போது மனசு வலிக்கிறதுதானே.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online