Dailyhunt
மனசாட்சி: நம் ஆத்மாவின் உண்மையான அடையாளம்!

மனசாட்சி: நம் ஆத்மாவின் உண்மையான அடையாளம்!

Kalki Online 5 months ago

"மனசாட்சிக்கு பயந்து நடந்துக்கொள்ளுங்கள்..." மனசாட்சி இருந்தால் இப்படிச் செய்வீர்களா...?" இதைப்போன்ற வாசகங்கள் பாமர மக்கள் முதல் படித்த அறிவார்ந்த மனிதர்கள் வரை அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படுத்துவதைக் காண்கிறோம்.

"அது சரியில்லை என்று என் மனதிற்குத் தெரியும்," அல்லது "நீங்க சொல்வதை என்னால் செய்ய முடியாது...!அது தவறென்று ஏதோவொன்று எனக்குள் சொல்லிக்கிட்டே இருக்கின்றது" என்று நீங்கள் எப்போதாவது கூறி இருக்கிறீர்களா...?

அப்படிச் சொல்லி இருந்தால் அதுதான் உங்கள் மனசாட்சியின் குரல். இது சரி அது தவறு என்று உங்களுக்குள் சொல்லுகிற, உங்களை ஆதரிக்கின்ற அல்லது உங்களை குற்றப்படுத்துகின்ற ஓர் உணர்வு மனசாட்சி என்பது நமக்குள் இயல்பாகவே இருக்கிறது. நம்முடைய மனசாட்சி நமக்கு உதவவேண்டுமென்றால், நாம் அதற்கு செவிசாய்க்க வேண்டும்.

நம்முடைய போக்கில் ஏதேனும் தவறு இருக்கிறதென நம் மனசாட்சி அல்லது உள்மனம் நமக்கு எச்சரிக்கை கொடுக்கலாம். அந்த எச்சரிப்புக்குச் செவிசாய்ப்பது தவறான செயலால் வரும் கெட்ட விளைவுகளைத் தவிர்க்க மட்டும் அல்லாமல், நம்முடைய மனசாட்சி தொடர்ந்து தகுந்த முறையில் செயல்படுவதற்கும் உதவுகிறது.

அமெரிக்காவின் ஜனதிபதியாவதற்கு முன்பு ஆபிராகம் லிங்கன் அவர்கள் வழக்கறிஞராகத் திகழ்ந்தார். அவர் புகழ்பெற்ற வழக்கறிஞராக விளங்கியதற்குக் காரணமே அவரது நேர்மைதான். உண்மைக்குப் புறம்பான எந்த வழக்கையும் ஏற்பதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

இதற்கு அவரிடம் காரணம் கேட்டதற்கு,
''உண்மையில்லை என்று தெரிந்த ஒரு வழக்கை நான் வாதத்துக்கு ஏற்றால், ஒவ்வொரு வினாடியும் நான் பொய்யன் என்பதை என் மனசாட்சி உரக்கமாக சொல்லிக் கொண்டிருக்கும்'' என்றார்.

தளராத உறுதியும் நம்பிக்கையும்: வெற்றிக்கான நேர்வழி!

மனசாட்சிதான் - நம் உண்மையான முகம்...! நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய உதவும். உங்களுடைய மனசாட்சி கொடுக்கும் எச்சரிப்புகளை அசட்டை செய்து விடாதீர்கள். நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டும் என்றால், நாம் அதற்கு செவிசாய்க்க வேண்டும். நம் அனைவருக்கும் மிகப்பெரிய நீதிபதி நம் மனசாட்சி. சரிதானே!

-பாலாஜி கணேஷ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online