Dailyhunt
மனித வாழ்வு ஒரு வரம்!

மனித வாழ்வு ஒரு வரம்!

Kalki Online 3 weeks ago

னித வாழ்வு ஒரு வரம். அதில் கற்றல், ஊக்கம், உயர்வு ஆகியவை அடக்கம். ஊக்கத்திற்கு அடிப்படை மூன்று முத்துக்கள்; அவை சிந்தனை, தெளிவு, தேடல்.

சிந்தனை

சிந்தனை நன்றாக இருக்க, நாம்தான் நம் சிந்தனையை நயமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும். முதற்கண் நம்முள் நாமே ஊக்கத்தை வளர்க்க வேண்டும். சிறந்த புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும்; சான்றோர் கூற்றுகளைக் கேட்டு, அவற்றை ஆய்வு செய்து, நம் சிந்தனையைக் கூர்மையானதாக ஆக்க வேண்டும்.

முடியுமா? முடியாதா? தடகள ஓட்டத்தில் கிடைத்த வெற்றிப் பாடம்!

தெளிவு

தெளிவு பெற நம் மனம் அமைதி நிலையில் இருக்க முயல வேண்டும். வெறுப்பு, பொறாமை போன்ற குணங்களை அறவே தவிர்க்க வேண்டும். நம் செயல்பாட்டில் ஏற்படும் தவறுகளைத் திருத்திக் கொள்வதில் தயக்கம் இருக்கக் கூடாது. "மாற்றம் ஒன்றே மாறாதது" என்பதால், மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது. தன்னம்பிக்கையைக் கைவிடக்கூடாது; தன் பணிகளை ரசித்துச் செய்யும்போது தெளிவும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

தேடல்

மனித வாழ்வே தேடலில் தான் பிறந்தது. 'ஆ' என்ற சத்தத்தைக் கேட்டு ஒலியை உணர்ந்தான்; பச்சை இறைச்சியைச் சுட்டுப் பார்த்துச் சுவையை ருசித்தான். தேடலின் விளைவே திறன்மிகு வாழ்க்கை. விஞ்ஞானியின் தேடல் விண்ணுலகைக் கைவசப்படுத்தியது. பாயும் மீனைப் பார்த்துப் படகினைப் படைத்தோம்; ஒளியின் வேகம் ஒலியை மிஞ்சும் என மின்னலும் இடியும் உணர்த்தக் கண்டோம். எனவே, தேடலின் விளைவே முன்னேற்றம்.

அடுத்தவர்களுக்காக உங்களைத் தொலைக்காதீர்கள்: உங்கள் நேரமும் உழைப்பும் உங்களுக்கானது!

முட்டுக்கட்டைகள்

ஊக்க உணர்விற்கு முட்டுக்கட்டைகளும் உண்டு. அவையே சோம்பல், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தோல்வி அச்சம்.

  • சோம்பல்: "ஒன்றே செய்க, நன்றே செய்க, அதையும் இன்றே செய்க" என்பது மூத்தோர் சொல்லமுதம். நாளை என்று தள்ளிப்போடாமல் சோம்பலை அறவே தவிர்க்க வேண்டும்.

  • எதிர்மறை எண்ணங்கள்: "எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்" என்ற மனப்பாங்கை வளர்த்துக்கொண்டால், எதிர்மறை எண்ணங்கள் ஆதவனைக் கண்ட பனி போல மறைந்துவிடும். மனம் சொல்லும் வார்த்தைகளின் ஆழத்தைப் புரிந்துகொண்டால், எண்ணங்கள் நேர்மறையாகவே இருக்கும்.

  • தோல்வி அச்சம்: தோல்வி பயம் என்பது ஓர் ஆரோக்கியமற்ற உணர்வு; இலக்குகளை அடைய விடாமல் முடக்கும் ஒரு தடைகல். சுய பச்சாதாபத்தைத் தவிர்த்தல் என்ற உத்தியைக் கொண்டு இந்த அச்சத்தைப் போக்கலாம். மேலும், "வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி" என்ற மனப்பக்குவத்தை ஏற்று சுய ஊக்கத்தை வளர்க்கலாம்.

ஊக்கம் என்பது ஓர் உயர்ந்த தத்துவம். அது விடாமுயற்சி, உத்வேகம், மன எழுச்சி ஆகியவற்றின் கூட்டு உணர்வு. இதைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று உறுதிகொள்வோம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online