Dailyhunt
மன்னார் வளைகுடாவின் மர்மம்: நிறம் மாறும் ஐவிரல் சங்கு!

மன்னார் வளைகுடாவின் மர்மம்: நிறம் மாறும் ஐவிரல் சங்கு!

Kalki Online 9 months ago

மிழ்நாட்டில் ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரையுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் அதிகமாக வாழும் வித்தியாசமான உடல் அமைப்பைக் கொண்ட சங்கு வகைகளில் சிலந்தி சங்கு (Spider conch) எனும் ஒரு வகை இருக்கிறது.

இது பார்ப்பதற்கு சிலந்தியைப் போல் இருப்பதாலும், ஐந்து விரல்களைக் கொண்டு இருப்பதாலும் இதனை சிலந்தி சங்கு என்றும், ஐவிரல் சங்கு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர்.

'ஸ்ட்ரோம்பிடே' எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிலந்திச் சங்குகளின் விலங்கியல் பெயர் லேம்பிஸ் (Lambis) எனப்படுகிறது. ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறத்தில் காணப்படும் இந்த சிலந்திச் சங்குகள் அவை நகரும் இடத்தின் நிறத்திற்கேற்ப, அதன் மேற்புற ஓட்டின் நிறத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதால் இவை எளிதில் மற்றவர் கண்களுக்குத் தெரிவதில்லை. இதன் மூலம் சிலந்தி சங்குகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன.

ஓடவே தெரியாத 5 உயிரினங்கள்: ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்!

இச்சங்கின் கால் பாதத்தின் உதவியால், அதன் கனமான ஓட்டைத் தூக்கிக் கொண்டு இடம் பெயர்ந்து இரை தேடிக் கொள்கின்றன. ஐவிரல் சங்கு என்று அழைக்கப்படும் இவற்றில் ஆண் சிலந்தி சங்கின் சிறு விரல்கள் கீழ் நோக்கி வளைந்தும், பெண் சிலந்தி சங்கின் சிறு விரல்கள் மேல்நோக்கி வளைந்தும் காணப்படுகின்றன. 'மாங்குரோஸ்' எனப்படும் சதுப்பு நிலக் காடுகளிலும், பவளப்பாறைகள் பகுதிகளிலும் இவை அதிகமாகக் காணப்படுகின்றன.

உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டலக் கடல்களில் அதிகமாக இவை வாழ்ந்தாலும், தீவுப் பகுதிகளின் கரையோரங்களில் சுமார் 5 மீட்டர் ஆழத்திலும் கூட இவை வசிக்கின்றன. கடலிலுள்ள பாசி வகைகளில் ஒரு வகையான சிவப்பு நிறப் பாசிகளைத் தின்று உயிர் வாழும் இவ்வினங்கள் ஆழம் குறைவான இடங்களில் வசிக்கின்றன.

வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்: காபூலை மூழ்கடிக்கும் பேரழிவு!

குறைந்தபட்சம் 18 செ.மீ. முதல் 29 செ.மீ. நீளம் வரை இது வளரும். அதிகக் கனமுடையதாகவும், அளவில் பெரியதாகவும் இருக்கும் இந்தச் சங்கின் பின்புறம் இயற்கையாகவே மிகவும் பளபளப்பாக இருக்கும்.

இந்தச் சங்கின் மேற்புற ஓடு வெள்ளை நிறத்திலும், பழுப்பு நிறப் புள்ளிகளைக் கொண்டதாகவும் இருக்கும். இச்சங்கினுள்ளே இருக்கும் பூச்சி போன்ற உயிரினம் சுவை மிகுந்த இறைச்சியாக மீனவ மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இதன் இறைச்சியை எடுத்த பிறகு, அதன் மேல் ஓடு சுத்தப்படுத்தப்பட்டு மேலும் பளபளப்பாக்கி அலங்காரப் பொருளாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவ்வினம் பெரும்பாலும் கடற்கரையோரங்களில் அதிக எண்ணிக்கையில் வாழ்வதால் வேகமாக அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது என்பது வருந்தத்தக்கதாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online