Dailyhunt
நவபாஷாண முருகப்பெருமானை தெரியும்; நவபாஷாண பைரவரை தெரியுமா?

நவபாஷாண முருகப்பெருமானை தெரியும்; நவபாஷாண பைரவரை தெரியுமா?

Kalki Online 1 year ago

சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவர் பைரவர். இவர் சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

அந்த வகையில் சித்தர் போகர், பழநி தண்டாயுதபாணி சிலைக்கு முன்பு உருவாக்கிய நவபாஷாண பைரவர் பற்றி இப்பதிவில் காண்போம்.

சிவகங்கையின் கண்டரமாணிக்கம் எனும் ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவு ஆட்டோ பயணம்செய்தால் பெரிச்சியில் உள்ளது சுகந்தவனேஸ்வரர் கோயில். சிவகங்கை பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி செய்தபோது பெற்ற வெற்றியின் காணிக்கையாக சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்து தகுந்த இடம் தேட, மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், பெரிச்சிக்கோயில் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாகவும், அங்கேயே ஒரு கோயில் அமைக்கும்படியும் கூற, அதன்படி அமைந்ததுதான் சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில். வாசமுள்ள மலர்கள் நிறைந்த பகுதியில் அமைந்ததால் இத்தல இறைவனுக்கு சுகந்தவனேஸ்வரர் என்ற பெயர் வந்தது. இங்கு தனிச் சன்னிதியில் உறையும் அம்பாள் சமீபவல்லி, தன்னை வேண்டுவோர் அருகில் இருந்து காப்பதால் இவளுக்கு இப்பெயர் என்கின்றனர்.

இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னிதியில், காசி பைரவர் அருள்பாலிக்கிறார். பழநி மலை தண்டாயுதபாணியை போலவே, இவரும் நவபாஷாணத்தால் ஆனவர் என்பது இவரது சிறப்பு. இச்சிலையை போகர், பழநி மலை தண்டாயுதபாணிக்கு முன்பு பிரதிஷ்டை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நவபாஷாண பைரவர் சிலையை போகர்தான் உருவாக்கினார் என்பதற்கு சான்றாக பைரவருக்கு பின்புறம் தீபாராதனை காட்டும் சமயத்தில், முன்புறத்தில் பழநி ஆண்டவரின் உருவத்தில் காட்சி தருவது சிறப்பு. எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தரும் இந்த நவபாஷாண பைரவரை வணங்கிய படி உள்ளனர் அருகிலுள்ள மூவர். உடன் நாய் வாகனத்தைப் பிடித்தபடி பாலதேவரும் சன்னிதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார்கள்.

இந்த நவபாஷாண காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடையது என்பதால், பைரவருக்கு அபிஷேகம் செய்யும் நீரிலும், சாத்தப்படும் வடைமாலையிலும் கூட விஷத்தன்மை ஏறுவதால் அபிஷேக நீரும், வடைமாலையும் சில மணி நேரங்களில் நீல நிறமாக மாறி விடும் அதிசயம் இங்கு நிகழ்கிறது. இதன் காரணமாக தீர்த்தமோ, வடைமாலையோ இங்கு பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவது கிடையாது.

மேலும், நவபாஷாணத்தின் சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இல்லை என்பதால் பைரவர் அணியும் மலர் மாலைகள் முதல் படைக்கப்படும் நைவேத்தியங்கள் வரை அனைத்தும் சன்னிதியின் கூரை மீது போடப்படுவது வழக்கம். குறிப்பாக வடைகளை, பறவைகளும் புறக்கணிப்பது ஆச்சரியம். அபிஷேக தீர்த்தமும் பக்தர்கள் தொட முடியாதவாறு கோயிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு. பைரவரின் பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. தல விருட்சமாக இங்குள்ள வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் அந்த முகத்தில் காட்சி தருகின்றார். இத்தலத்தில் சனீஸ்வரரை, பைரவரின் சீடராகவே கருதி வழிபடுகிறார்கள். இவரை வழிபடுவதால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்தி கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

பிரதி மாதம் பௌர்ணமி அன்றும் தேய்பிறை அஷ்டமி அன்றும் மாலையில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online