Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாவல் டூ சினிமா: எழுத்து வடிவம் வெள்ளித்திரையில் காவியமாக மாறிய ரகசியம்!

நாவல் டூ சினிமா: எழுத்து வடிவம் வெள்ளித்திரையில் காவியமாக மாறிய ரகசியம்!

Kalki Online 0 months ago

மிழ் திரையுலகில் நாவல் சினிமா தடம் பதித்த ஆரம்பகால வரலாறு

"ஒரு நாவலைப் படமாக எடுத்தால் எந்த அளவுக்கு அது ஒர்க் அவுட் ஆகும் என்பது புதிர்.

அக்காலத்தில் 'பார்த்திபன் கனவு' கல்கி அவர்கள் 1941 - 1943ல் தொடராக எழுதியது ஆகும். 1960ல் படமாக்கப்பட்டது. ஹீரோ ஜெமினி கணேசன், ஜோடி வைஜெயந்திமாலா. அதில் பல்லவ மன்னர் மாமல்லச் சக்கரவர்த்தி மற்றும் காளாமுகராக எஸ்.வி.ரெங்காராவ், பொன்னன் வள்ளி கிராமத்து தம்பதியராக எஸ்.வி.சுப்பையா, ராகினி நடித்தார்கள். சரோஜாதேவி சிறிய தோழி வேடத்தில் வந்தார்.

வசனம் விந்தன் என்றாலும் கல்கியின் வாசகங்களே வசனமாக வந்தன. காளாமுகர் யார் என்பது சஸ்பென்ஸ் கதையில். ஆனால் நெடிய உருவம் உள்ள ரெங்காராவ் மாறு வேடத்தில் வந்த அடுத்த நொடியே வசனம் பேச குரல் தெரிந்து சஸ்பென்ஸ் அம்பலமாகிவிட்டது என பத்திரிக்கை விமர்சனம் வந்தது.

நாவலை படமாக எடுப்பது மிகவும் சிரமம். அந்தப் பாத்திரங்களின் குண நலன்களை எழுத்தாளர் பல அத்தியாயங்களில் விவரித்து இருப்பார். அதை அப்படியே படத்தில் காட்டினால் போரடிக்கும்.

'தில்லானா மோகனாம்பாள்' முதல் 'முள்ளும் மலரும்' வரை வென்ற நாவல் சினிமா

இப்படி நாவல்கள் சினிமாவாக வந்தவற்றில் உமாசந்திரன் அவர்களின் 'முள்ளும் மலரும்' சிறப்பாக அமைந்து விட்டது. சினிமாவில் நடித்த நடிகர்கள் கதாபாத்திரங்களாய் வாழ்ந்து காட்டிவிட்டார்கள். படம் பாடல்கள் மிகப் பெரிய வெற்றி.

சுஜாதாவின் நாவல்கள் படம் ஆனவற்றில் ப்ரியா, காயத்ரி வெற்றி. அதில் காயத்ரி கறுப்பு வெள்ளை காவியம். காயத்ரியாக வரும் ஸ்ரீதேவி படம் ஆரம்பம் முதலே அறிமுகம் இல்லாத ஒருவனைக் கட்டிக் கொண்டு கண்ணில் ஒரு மிரட்சி பயம் காட்டி அருமையாக நடித்திருந்தார். கெட்ட கணவன் ரோலில் ரஜினி பின்னி இருந்தார்.

வேடிக்கை என்னவென்றால் இதில் காப்பாற்ற வரும் ஹீரோ ஜெயசங்கர். சில நாள் கழித்து முரட்டுக் காளையில் ரஜினி ஹீரோ, ஜெயசங்கர் வில்லன். இது சினிமா வரலாற்று முரண். எழுத்தாளர்கள் சிவசங்கரி, ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் படம் ஆகி உள்ளன. ஜாவர் சீதாராமனின் உடல் பொருள் ஆனந்தி நாவல் டிவி சீரியலாக வந்தது."

இப்படியாக நாவல்கள் சினிமா ஆன விதத்தைப் பற்றி குப்புசாமி தன் மனைவி கமலாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தார்.

கமலா - "என்னங்க... தில்லானா மோகனாம்பாள் ஒரு நாவல் தானே?"

 நாவல் சினிமா

குப்புசாமி - ஆமாம். கொத்தமங்கலம் சுப்பு எழுதியது. கலைமணி என்ற புனைப் பெயரில். இப்போ சொன்னோமே நாவல்கள் சினிமா ஆனது பற்றி. தில்லானா மோகனாம்பாள் படம், நாவல் இரண்டையும் ஒப்பிட்டால் கதை சிறப்பா? இல்லே ஏ.பி நாகராஜன் டைரக்ஷனில் படம் சிறப்பா? என யாராலும் சொல்ல முடியாது. படமும் கதையும் காவியங்கள்.

1958 ஆம் ஆண்டு வந்த தொடர்கதை அது. 1974ல் சுப்பு அவர்கள் மறைந்தார். திரைப்படமா நாவலா இதில் எது ஒசத்தி என்பது தான் ஒரு புதிர்.

கமலா - ஆமாங்க படத்தை அப்படி எடுத்து வச்சிருக்காங்க. என்ன கதாபாத்திரங்கள். திருவாரூர் வட்டார கதாபாத்திரங்கள். நாதஸ்வரக் கலைஞர் ஹீரோ. நடன மாது ஹீரோயின். படத்தில் சின்னச் சின்ன வேஷத்தில் வந்தவர்களும் அசத்தி விட்டார்கள் நடிப்புத் திறமையால்!

குப்புசாமி - இதில் ஏ.வி.எம். ராஜன், ஹீரோவின் தம்பியாக வருவார். நாதஸ்வரக் கலைஞர் அவர். இரண்டாம் நாயனம். அண்ணாவுக்கு அடங்கிய தம்பி. இரு தவில் வித்வான்கள். டி.எஸ் பாலையா, சாரங்கபாணி. இதில் ராஜனும், சாரங்கபாணியும் உண்மையில் நாதஸ்வர தவில் இசைவேளாளர் மரபில் வந்தவர்கள். ஆனால் இசைக்கு சம்பந்தமில்லாத டி.எஸ். பாலையாவும், சிவாஜியும் வாத்தியம் வாசிக்கும் காட்சிகளில் பிச்சு உதறிவிட்டார்கள்.

கமலா - சிக்கலராக வரும் சிவாஜி தான் கண்ணில் எத்தனை பாவங்கள் காட்டி நடித்திருப்பார். அந்த வித்வானுக்கே உரிய முன் கோபம் உடல் மொழி. யாராலும் அப்படி நடிக்கவே முடியாதுங்க.

குப்புசாமி - ஒருமுறை எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த காலகட்டம். வெளி நாட்டு கலாச்சாரக் குழுவுக்கு ஒரு தமிழ் சினிமா காட்ட ஏற்பாடு செய்தார்கள். உலகம் சுற்றும் வாலிபன் திரையிடலாம் என முடிவெடுத்தது கலைக் குழு. எம் ஜி ஆர், வேண்டாம். தில்லானா மோகனாம்பாள் திரையிடுங்கள். நம் தமிழ் கலை கலச்சாரத்தை வெளினாட்டினர் தெரிந்து கொள்ள அது தான் சிறப்பான படம் என்று சொல்லிவிட்டார். சிவாஜி மீது அளவு கடந்த அன்பும் பாசமும் தொழில் முறை மதிப்பும் வைத்திருந்தார் எம் ஜி ஆர்.

ஹாட் ஸ்பாட் படத்துக்கு அப்புறம் வந்த ஜாக்பாட்.. தெறிக்கவிடும் 96 ஜோடி காம்போ!

கமலா - படத்தில் யாரெல்லாம் நடிச்சிருக்காங்க பாருங்களேன். நாகேஷ், தங்கவேலு, டி.ஆர் ராமச்சந்திரன், மனோரமா, சி.கே சரஸ்வதி, எம். சரோஜா, பாலாஜி, நம்பியார், சகஸ்ரனாமம், சகாதேவன். ஒவ்வொருத்தரும் ஒரு லெஜெண்ட் ஆச்சே நடிப்பில்!

குப்புசாமி - படத்தில் ஒரு வார்த்தை கூட வசனம் இல்லாமல் காமெடியன் கருணாநிதி ஒத்து ஊதுபவராக வருவார். பாடி லேங்குவேஜில் காமெடி செய்வார். பி.டி சம்பந்தம் தான் தாளம். கே.வி மகாதேவன் இசை.. கர்னாடிக் ராக அடிப்படையில் பாடல்கள். கண்ணதாசன் வரிகள். அமர்க்களம்.

கமலா - ஏங்க நாகேஷ் தான் வைத்தியாக நடிப்பார் என கதாசிரியர் சுப்புவுக்கு தெரியுமா முன்னமேயே. எப்படிங்க அந்த சவடால் வைத்தி கோபுலுவும் அச்சு அசலா கதையில் வரைஞ்சாரே.எப்படிங்க அது?

குப்புசாமி - நாகேஷ் 1959ல் தான் முதலில் தாமரைக்குளம் என்ற படத்தில் நடிக்க வந்தார். கதை விகடனில் வெளியான வருஷம் 1957-58. ஆச்சரியம் தான்!

கமலா - ஜில் ஜில் ரமாமணியாக வரும் மனோரமா என்னமா குழைஞ்சு குழைஞ்சு பேசி நடிச்சிருப்பார். நாகை நாடகக் கொட்டகையில் சிக்கல் சண்முகசுந்தரமும், ரமாமணியும் சந்திக்கும் காட்சி என்ன காட்சி அமைப்பு.

குப்புசாமி - படத்தில் குறை என்று எதுவுமே இல்லை. எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு ஒரு பெரிய டைரக்டர் ஆச்சே. அவ்வையார் அவர் டைரக்ட் பண்ணியது தான்.

ஆர்யா நடித்த புதிய அதிரடித் திரைப்படம் 'அனந்தன் காடு' ரசிகர்களைக் கவர்ந்ததா அல்லது ஏமாற்றமா?

கமலா - இன்னமும் அந்த மாட்டு வண்டிகளில் கலைஞர்கள் பயணிப்பது, நாதஸ்வர இசை, மேள சத்தம், நடனம், மண்ணின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அந்த சினிமாவை திரையிட எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்தது ரொம்ப கரெக்ட்.

குப்புசாமி - இதில் சிவாஜி பத்மினி இருவர். பிளஸ் துணை நடிகர்கள் பங்களிப்பு மொத்தமும் ஒரு ஆள். நாதஸ்வர இசை ஒரு ஆள். இந்த நாலு பேர் இல்லை என்றால் படம் இல்லை.

நாவல் ஒரு தனி கதாசிரியரின் முயற்சி. சினிமா ஒரு டீம் கூட்டு முயற்சி. இதில் நாவலில் சுப்பு வெற்றியடைந்தார். படம் ஏ.பி நாகராஜனை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. நடித்த நடிகர்களுக்கு அது ஒரு வெற்றிப் பதக்கம். சினிமா வரலாற்றில் அது பொன்னேடுகளில் பொறித்த காவியம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online