"சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் செரிமானம் கெட்டுவிடும்… வயிற்றில் உள்ள செரிமானச் சுரப்புகள் (Digestive enzymes) நீர்த்துப் போய்விடும்…" - என்ற பதிவுகளை நாம் பலமுறை கேட்டிருப்போம்.
அதனால் சில வீடுகளில் குழந்தை உணவு முடித்ததும் தண்ணீர் கேட்டால், "கொஞ்சம் நேரம் கழித்துக் குடி!" என்று சொல்வார்கள். இது உண்மையா? உடலுக்கு தாகம் வந்தால் அதை அடக்க வேண்டுமா? உணவுக்கு முன்பும், உணவின்போதும், உணவுக்குப் பிறகும் எவ்வளவு தண்ணீர் தேவை?
முழுமையாக விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D.
சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் செரிமானம் கெட்டுவிடுமா?
கிடையாது. சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் செரிமானம் பாதிக்கப்படும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. வயிற்றில் உணவுடன் தண்ணீர் கலப்பதால் செரிமானச் சாறுகள் செயலிழந்துவிடுவதில்லை. மாறாக, நீர் உணவு விழுங்குவதற்கும், உணவின் இயல்பான செரிமானச் செயல்பாட்டிற்கும் பெரிதும் உதவுகிறது.
தாகம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
தாகம் என்பது உடலின் இயற்கையான எச்சரிக்கை. உடலில் நீரின் அளவு குறையும்போது மூளையின் தாக மையம் (Thirst Centre) செயல்பட்டு தண்ணீர் குடிக்கத் தூண்டுகிறது. ஆரோக்கியமான குழந்தைகளில் தாகம் ஏற்பட்டால் பாதுகாப்பான குடிநீரை தாகம் தீரும் வரை குடிக்க அனுமதிப்பதே சரியான நடைமுறை. "சாப்பிட்டிருக்கிறாய், இப்போது தண்ணீர் குடிக்கக் கூடாது" என்று தாகத்தை அடக்க வேண்டிய அவசியமில்லை.
உணவுக்கு முன் தண்ணீர் குடிக்கலாமா?
குடிக்கலாம். உணவுக்கு முன் தண்ணீர் குடிப்பதில் பொதுவாகத் தடை இல்லை. ஆனால் அதிக அளவு தண்ணீரை வலுக்கட்டாயமாகக் குடிக்கச் செய்வது கூடாது. குறிப்பாக சிறு குழந்தையின் வயிறு சிறியதாக இருப்பதால், உணவுக்கு முன் அதிக திரவம் குடித்தால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு உணவு உட்கொள்ளும் அளவு குறையலாம்.
சாப்பிட்ட உடன் தண்ணீர்உணவு சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா?
உணவுக்கு இடையே சிறிது தண்ணீர் குடிப்பதும் இயல்பானதே. குறிப்பாக உலர்ந்த உணவுகளை விழுங்குவதற்கு நீர் உதவுகிறது. குழந்தை உணவை நன்றாக மென்று சாப்பிடவும், தேவையானபோது தண்ணீர் குடிக்கவும் பழக வேண்டும். தண்ணீர் குடித்தால் உணவு 'வயிற்றில் தங்கி செரிமானம் ஆகாது' என்பது தவறான நம்பிக்கை.
உணவுக்குப் பிறகு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?
இது எல்லோருக்கும் ஒரே அளவு கிடையாது. குழந்தையின் வயது, உடல் எடை, உணவு, உடற்பயிற்சி, காலநிலை மற்றும் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து நீர்த் தேவை மாறும். தாகம், சிறுநீரின் அளவு மற்றும் நிறம் போன்றவை உடலின் நீர் தேவையை புரிந்துகொள்ள உதவுகின்றன. வெப்பமான காலநிலையில் அல்லது அதிகமாக விளையாடிய பிறகு கூடுதல் தண்ணீர் தேவைப்படும்.
குழந்தைகள் தூக்கத்தில் பல் கடிப்பது குடல் புழுக்களாலா? உண்மை பின்னணி இதோ!குழந்தைக்கு தண்ணீர் மட்டும் போதுமா?
தினசரி நீர்த் தேவையின் ஒரு பகுதி உணவிலிருந்தும் கிடைக்கிறது. பால், தயிர், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றிலும் நீர்ச்சத்து உள்ளது. இருப்பினும் தண்ணீரே குழந்தையின் முதன்மையான தாகம் தீர்க்கும் பானமாக இருக்க வேண்டும். சர்க்கரை கலந்த பானங்கள், குளிர்பானங்கள் மற்றும் அதிக இனிப்புள்ள பானங்களை வழக்கமான தண்ணீருக்கு மாற்றாகக் கொடுக்க வேண்டாம்.
ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா?
ஆறு மாதம் வரை தாய்ப்பால் குடிக்கும் ஆரோக்கியமான குழந்தைக்கு, பொதுவாகத் தனியாகத் தண்ணீர் கொடுக்கத் தேவையில்லை. ஆறு மாதத்திற்குப் பிறகு இணை உணவு தொடங்கும்போது, சிறிதளவு பாதுகாப்பான குடிநீரை அறிமுகப்படுத்தலாம். ஆனால் ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைக்கு அதிக அளவு தண்ணீர் கொடுப்பது ஆபத்தானது. அது உடலின் உப்புச் சமநிலையைப் பாதிக்கக்கூடும்.
கொளுத்தும் வெயில்… குழந்தைகளை ஆட்டும் வெப்ப அதிர்ச்சி! பெற்றோர் தவிர்க்கக்கூடாத 8 விதிகள்!தண்ணீர் - உணவின் எதிரி அல்ல, துணையே!
சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது செரிமானத்தை 'அணைத்துவிடும்' என்பதும், உணவுக்குப் பிறகு குறிப்பிட்ட நேரம் வரை தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதும் அறிவியல் அடிப்படையற்ற தவறான நம்பிக்கைகள். குழந்தையின் உடல் கேட்கும் தாகத்தைக் கவனித்து, தேவையான அளவு சுத்தமான தண்ணீரை வழங்குவதே சிறந்தது.
குழந்தையின் உடல் சொல்லும் இயற்கையான தாகத்தை புரிந்துகொள்வதே ஆரோக்கியமான நீர் பருகும் பழக்கத்தின் அடிப்படை ஆகும்.

