Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 2

செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 2

Kalki Online 3 months ago

ந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மனிதன் கவனித்தான். அதனுடைய இயல்புகளை தெரிந்து கொண்டான். இவ்வாறே மொழியையும் உற்று கவனித்தான்.

மொழியை எப்படி பேசவும் எழுதவும் வேண்டும் என்பதை வரையறுத்து அதற்கு இலக்கணம் என்று பெயரிட்டு வழங்கினான்.

எழுத்து:

ஒலி வடிவமாக எழுதப்படுவதும் வரிவடிமாக எழுதப்படுவதும் எழுத்து என்று அழைக்கப்படுகிறது.

உயிர் எழுத்துகள்:

உயிருக்கு முதன்மையானது காற்றாகும். இயல்பாக காற்று வெளியிடும்போது உயிரெழுத்துகள் பிறக்கின்றன. வாயை திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் 'அ' முதல் 'ஔ' வரை உள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பிறக்கின்றன.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.

குறில் எழுத்துகள்:

அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துகளும் குறுகி ஒலிப்பதால் குறில் எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன.

நெடில் எழுத்துகள்

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழு எழுத்துகளும் நீண்டு ஒலிப்பதால் நெடில் எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிப்பதற்கு கால அளவு இருக்கின்றது. எழுத்தை உச்சரிக்கை எடுத்துக் கொள்ளும் கால அளவைக் கொண்டு குறில் எழுத்துகள், நெடில் எழுத்துகள் என இரண்டு வகையாக வகைப்படுத்துகின்றோம்.

மெய்யெழுத்துகள்:

மெய் என்பதற்கு உடம்பு என பொருள். மெய்யெழுத்துகளை ஒழிக்க உடல் இயக்கத்தின் பங்கு முக்கியமாகும்.

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டு எழுத்துகளும் மெய் எழுத்துகளாகும். மெய் எழுத்துக்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும்.

வல்லின எழுத்துகள்:

க், ச், ட், த், ப், ற் இந்த ஆறு எழுத்துகளும் வன்மையாக ஒலிப்பதால் வல்லின எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன.

மெல்லின எழுத்துகள்:

ங், ஞ், ண், ந், ம், ன் இந்த ஆறு எழுத்துக்களும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லின எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன.

இடையின எழுத்துகள்:

ய், ர், ல், வ், ழ், ள் இந்த ஆறு எழுத்துகளும், வன்மையாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல், இரண்டுக்கும் இடைப்பட்டு ஒலிப்பதால் இவற்றை இடையின எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன.

உயிர்மெய் எழுத்துக்கள்:

மெய்யெழுத்துகள் பதினெட்டும் உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகளாகும்.

மெய்யெழுத்துடன் உயிர்க்குறில் எழுத்து சேர்ந்தால் உயிர்மெய்க் குறில் எழுத்து தோன்றுகிறது. மெய்யெழுத்துடன் உயிர் நெடில் எழுத்து சேர்ந்தால் உயிர்மை நெடில் எழுத்து தோன்றுகிறது. ஆகவே உயிர்மெய் எழுத்துக்களை உயிர்மெய்க் குறில் எழுத்துகள், உயிர்மெய் நெடில் எழுத்துகள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

ஆயுத எழுத்து:

தமிழ் மொழியில் உயிரெழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகளைத் தவிர தனி எழுத்து ஒன்றும் இருக்கின்றது. அது 'ஃ' என்னும் ஆய்த எழுத்தாகும்.

தமிழில் உள்ள மொத்த எழுத்துகள்:

உயிர் எழுத்துகள் - 12

மெய் எழுத்துகள் - 18

உயிர்மெய் எழுத்துகள் - 216

ஆய்த எழுத்து - 1

தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் = 247

மாத்திரை

மாத்திரை என்பது இங்கு கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒரு முறை கண் இமைக்கவோ ஒரு முறை கை நொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.

குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1 மாத்திரை

நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 2 மாத்திரை

மெய்யெழுத்துகள் ஒலிக்கும் கால அளவு- ½ மாத்திரை

ஆயுத எழுத்தை ஒலிக்கும் கால அளவு - ½ மாத்திரை

பயிற்சி செய்து பாருங்கள்..!

உங்கள் பெயர் மற்றும் உங்களின் நண்பர்களின் பெயர்களுக்கான மாத்திரை அளவை கண்டுபிடித்து எழுதி பாருங்கள்.

எ.கா. - கல்கி -: 1 + ½ + 1 = 2 ½

க - குறில் எழுத்து

ல் - மெய் எழுத்து

கி - குறில் எழுத்து

கல்கி என்ற பெயருக்கு 2 ½ மாத்திரை கால அளவாகும்.

தமிழ் எழுத்துகளையும், அவை ஒலிக்கும் கால அளவுகளையும், சிறப்பாகக் கற்றுக் கொண்டால், தமிழ் இலக்கணம் நமக்கு எப்போதும் இனித்துக் கொண்டே இருக்கும். எளிமையாக படிக்கவும், எழுதவும் முடியும்.

Click To Read All Parts
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online