Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 9!

செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 9!

Kalki Online 1 month ago

செல்லத்தாய் அம்மா வகுப்புக்குள்ள வந்தவுடனே எல்லாரும் அமைதியானாங்க. ஏன்னா அவங்களுக்கு இலக்கண வகுப்பு நடத்தும் போது எந்த ஒரு இடையூறும் இருக்க கூடாது.

"வணக்கம் மாணவர்களே!"

"காலை வணக்கம் அம்மா!"

"தமிழன் என்றொரு இனம் உண்டு

தனியே அவர்க்கொரு குணம் உண்டு!

அமிழ்தம் அவனது மொழியாகும்

அன்பே அவனது வழியாகும்!

மானம் பெரிதென உயிர் விடுவான் மற்றவர்க்காகத் துயர்ப் படுவான்!"

என்று நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கனாரின் கவிதை வரிகளை முன்வைத்து இந்த இலக்கணப் பாடத்தை நான் இனிதே துவங்குகிறேன் மாணவச் செல்வங்களே!"

"அம்மா இனம் என்றால் என்ன?"

"அருமையான கேள்வி கேட்டாய் மாணிக்கம்!"

"ஒரு குழுவாக வாழும் மக்களுக்கு இனம் என்று பெயர். இவர்கள் மொழி, மதம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் ஒன்றுபட்டு இருப்பார்கள்."

"இனம் மனிதர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா அம்மா?"

"அடடா என்ன ஒரு அழகான கேள்வி! இனம் என்பது விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், தமிழில் உள்ள எழுத்துகளுக்கும் இருக்கிறது தம்பி!"

"எழுத்துகளுக்கு கூட இனங்கள் உண்டா அம்மா?"

"ஆமாடா மாணிக்கம்! இன்றைக்கு இன எழுத்துகள் பற்றி தான் நாம படிக்க போறோம்!"

"ஓ சூப்பர் அம்மா! ரொம்ப புதுவிதமான தலைப்பா இருக்கு!"

"ஆமாடா மாணிக்கம்! சரி வாங்கப்பா எல்லாரும் பாடத்துக்குள்ள போகலாம்!"

செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 8!  இன எழுத்துகள்

உயிரெழுத்துகளில் இன எழுத்துகள் கண்டறிவது எப்படி?

"உயிரெழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகளாக இருக்கும். குறில் எழுத்து இல்லாத 'ஐ' என்னும் எழுத்துக்கு 'இ' என்பது இன எழுத்தாக இருக்கும். 'ஔ' என்னும் எழுத்துக்கு 'உ' என்பது இன எழுத்தாக இருக்கும்.

அ - ஆ,

இ - ஈ,

உ - ஊ,

எ - ஏ,

ஐ - இ,

ஒ - ஓ,

ஔ - உ

சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டுமே நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வருகிறது.

(உ.ம்) தூஉம், ஓஒதல், தழீஇ

தமிழ் எழுத்துகளில் (ஃ) ஆய்த எழுத்துக்கு மட்டும் இன எழுத்து இல்லை என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்."

"சரிங்க அம்மா!"

"சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை இருக்கிறது. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் என்று அழைக்கப்படுகிறது.

மெய்யெழுத்துகளில் இன எழுத்துகள் கண்டறிவது எப்படி?

ஆறு வல்லின மெய்யெழுத்துகளுக்கு, ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகளாக இருக்கின்றன. சொற்களின் மெல்லின மெய்யெழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்துகளே வருகின்றன. அதைப் பற்றி இனி விரிவாய்ப் பார்ப்போம்.

க் - ங்

ச் - ஞ்

ட் - ண்

த் - ந்

ப் - ம்

ற் - ன்

(உ.ம்) செங்கல், ஊஞ்சல், தின்பண்டம், வந்தனம், செம்பு, தென்றல்.

செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 7!

இந்தச் சொற்களைக் கவனியுங்கள்! இதில் வல்லின மெய்களுக்கு இனமான மெல்லின வரிசை எழுத்துகளும் பக்கத்திலேயே வருகின்றன. இதற்கு பெயர் தான் இன எழுத்துகள்.

தமிழில் உள்ள இடையின எழுத்துகள் (ய், ர், ல், வ், ழ், ள்) அனைத்தும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி எழுத்துகள் எப்படி ஒற்றுமையாக இருக்கிறதோ! அதைப்போல நாமும் நம்முடைய இன மக்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மாணவர்களே!

"கண்டிப்பாக இருப்போம் அம்மா!" என்று அனைத்து மாணவர்களும் குரலை ஒலித்தார்கள். பாடவேளை மணியும் ஒலித்தது..

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online