Dailyhunt
செங்கோல் ஏந்தும் குமரன்: திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு மகுடாபிஷேகம்!

செங்கோல் ஏந்தும் குமரன்: திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு மகுடாபிஷேகம்!

Kalki Online 0 months ago

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு என்ற பெருமை கொண்டது மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் பங்குனிப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, முருகப்பெருமானுக்குப் பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் சுவாமிக்குச் செங்கோல் வழங்கி, சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் பட்டாபிஷேகம் நடைபெறும். இது, முருகப்பெருமான் மதுரை நாயக்கர் மன்னர்களுக்குச் செங்கோல் வழங்கிய நிகழ்வை நினைவுபடுத்துகிறது.

அந்த வகையில் திருப்பரங்குன்றம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனைத்தொடர்ந்து இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 23-ம்தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 6-ம்தேதி தீர்த்த உற்சவத்துடன் இத்திருவிழா நிறைவடைகிறது.

பங்குனி உத்திர திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில், தங்கச் சப்பரத்திலும், மாலையில் பூத வாகனம், அன்னவாகனம், தங்கமயில் வாகனம், பச்சை குதிரை வாகனம், தங்க குதிரை வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு நாளை(ஏப்ரல் 3-ம்தேதி) பட்டாபிஷேகமும், 5-ம்தேதி திருக்கல்யாணமும், 5-ம்தேதி மகா தேரோட்டமும் நடைபெற உள்ளது.

நாளை தினம் நடக்கும் பட்டாபிஷேக நிகழ்ச்சியின் போது, ஆறு கால் மண்டபத்தில் தெய்வானையுடன் எழுந்தருளும் முருகப்பெருமானுக்கு நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் சூட்டப்படும். மேலும் நாதசுவரம் ஒலிக்க மேள, தாளங்கள் முழங்க நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் வழங்கி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். அதனை தொடர்ந்து சேவற்கொடி, வேல் சாற்றி, தீப, தூப ஆராதனைகள் நடைபெறும். பிறகு தங்கக்குதிரை வானகத்தில் பக்தர்கள் கூட்டத்தில் சுவாமி தெய்வானையுடன் திருவீதி உலா எழுந்தருள்வார். பட்டாபிஷேக நிகழ்வு, ஆண்டவர் முருகப்பெருமான் மதுரை நாயக்கர் மன்னர்களுக்குச் செங்கோல் வழங்கி, மக்களைக் காக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்த நிகழ்வாக நம்பப்படுகிறது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரபத்மனை வென்ற பிறகு முருகப்பெருமான் தெய்வானையை மணந்து, தேவர்களைக் காத்து,

மதுரைக்கு அரசராகப் பொறுப்பேற்ற நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாகப் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில், முதல் படைவீடான இங்கு முருகப்பெருமான் தவம் புரிந்த இடமாகவும், திருமணக் கோலத்தில் காட்சி தரும் இடமாகவும், அரசராக ஆசி வழங்கும் இடமாகவும் சிறப்புப் பெற்று விளங்குவதால் இங்கு ஆண்டுதோறும் திருவிழாவின் ஒரு பகுதியாக செங்கோல் வழங்கிப் பட்டாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு, முருகப்பெருமான் தர்மத்தின் பாதுகாவலனாகவும், தீமைகளை அழித்து உலகைக் காப்பவனாகவும், அரசராக ஆசி வழங்குவதைக் குறிக்கிறது.

இதில் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால், மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் மீனாட்சியம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு செல்வார். இதேபோல் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணத்திற்கு ஆண்டிற்கு ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் மீனாட்சி அம்மனும் திருப்பரங்குன்றத்திற்கு வருவார்கள்.

இதன்படி நாளை திருப்பரங்குன்றம் கோவிலில் நடைபெற உள்ள முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணத்திற்காக மதுரையில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளுகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online