Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிறுகதை: 'நந்தினி'யின் வினோத வழக்கு!

சிறுகதை: 'நந்தினி'யின் வினோத வழக்கு!

Kalki Online 2 months ago
 MM strip

வந்திருந்த பெண் சொன்னதைக் கேட்டு, அட்வகேட் வேணுகோபாலுக்கு தூக்கி வாரிப் போட்டது.

ஆடி காரில் வந்திருந்தாள்.

பழக்கூடையில் ஒரு டஜன் பெரிய ஆப்பிள்கள் தந்து வணக்கம் சொன்னாள்.

"சார் ஒரு 'கேஸ்' போட வேண்டும். கல்கி சார் மீது."

"யாரும்மா நீ... என்ன சொல்றே...? எழுத்தாளர் அமரர் கல்கி மீதுன்னா சொல்றே...? இல்லே கல்கின்னு வேறு யார் மீதுமா?"

"இல்லே சார்... பொன்னியின் செல்வன் ஆசிரியர் மீது தான்."

அட்வகேட் யோசித்தார். 'வந்திருக்கும் பெண் யார்... கொஞ்சம் மனநிலை பாதித்திருக்குமோ..?'

"சார் அப்படி பார்க்காதீங்க. நான் ஒண்ணும் நீங்க நினைக்கறமாதிரி இல்லே."

அப்புறம் அவள் விலாவாரியாகச் சொன்னதைக் கேட்டதும் இவள் நல்ல மன நிலைக்காரி தான் முடிவுக்கு வந்தார்.

வந்தவள் பெயர் நந்தினி. அகழ்வாராய்ச்சியில் டாக்டர் பட்டம் வாங்கியவள். எம்.ஏ சரித்திரம். திருமணம் ஆகி கணவர் ஒரு ஏஐ சாப்ட்வேர் என்ஜினீயர். இரு குழந்தைகள்... பெண் டென்த். பையன் பிளஸ் டூ.

அவளுடைய வாதம் இது தான்.

கல்கி அவர்கள் நந்தினியை கதையில் கொஞ்சமாகத் தான் எழுதி இருக்காராம்.

அவளை ஒரு வில்லி... கல் நெஞ்சக்காரி... தன் அழகால் ஆண்களை வசியம் செய்யும் மாயக்காரி போலக் காட்டி இருக்காராம்.

இது மாபெரும் தவறு. நந்தினி மிகவும் நல்லவள். தியாகி. வீரபண்டியனை அவள் கண் எதிரில் தலையைக் கொய்த கொடுங்கோலன் ஆதித்த கரிகாலன் செயலால் தான் நந்தினி அப்படி மாறினாள்.

"சரிம்மா கேஸ் போட்டு ஒரு திருத்த செய்தியை பிரசுரிக்க சட்டத்தில் இடம் இருக்கு. ஃபோன் நம்பர் கொடுத்திட்டுப் போங்க. பேப்பர்கள் ரெடி பண்ணிட்டு கூப்பிடறேன். வக்காலத்து தயார் பண்ணியதும் வாங்க. உங்க சார்பா ஒரு பெட்டிஷன் போட்டு விடலாம்."

அவள் ஒரு கவரைத் தந்தாள். உள்ளே ஐந்தாயிரம் பணம்.

அவள் போனதும். வேணுகோபால் மனைவி ரேவதி, "யாருங்க இது... பொன்னியின் செல்வன் நந்தினி மாதிரி ஆண்டாள் சைடு கொண்டை போட்டுக் கிட்டு?"

"கரெக்ட். நந்தினியே தான். ஒரு வினோதமான கேஸ் வந்திருக்கு. சரி நந்தினியைத் தெரியுமா. யார் சொல்லு..."

"தெரியுமாவது... சின்ன வயசில் கதை படிச்ச பெண்களைக் கேளுங்கள். நந்தினி தான் அவங்க ஃபேவரைட் பாத்திரம். அந்தக் கால கட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு நந்தினி பெயர்தான் அதிகம் வச்சது."

அடுத்த வாரத்தில் நந்தினி வந்தாள் தன் கணவருடன்.

அவளை ரேவதி வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.

தனியாக இருக்கும்போது அவள் கணவன் இவரிடம்,

"சார்.. தப்பா நினைக்காதீங்க. கற்பனையை நிஜம்ன்னு நம்பி இருக்கிற கேஸ்களில் என் மனைவியும் ஒருத்தி. தினம் வீட்டில் புலம்புறா. நந்தினிக்கு இழைக்கப்பட்டது மாபெரும் அநீதி. சுப்ரீம் கோர்ட் வரை போவேங்கிறாள். சில மகளிர் அமைப்புகளில் இருக்காள். நந்தினி பாதுகாப்பு அமைப்புன்னு ஒண்ணு இந்த கோஷ்டி நடத்துது. ரெஜிஸ்டர் பண்ணியது. இவள் தான் தலைவி. செயலாளர் ஒரு நந்தினி. அவள் ஒரு கைனகாலஜிஸ்ட் எம்.டி.டிஜி.ஓ. பொருளாளர் இன்னொருத்தி அவளும் நந்தினி... மகளிர் காலேஜில் பிரின்ஸிபால்.

சங்கத்து பெண்கள் மீட்டிங் போட்டு இவளுக்கு சப்போர்ட் பண்றாங்க. பணமும் தந்து இருக்காங்க இவளுக்கு கேஸ் போட... எல்லாம் வசதிகாரிகள். எல்லோரும் சைடு கொண்டை போட்டு பூ சுத்தி இருப்பாளுங்க. அது தான் அடையாளம்."

"பொது நல வழக்கா போட்டு விடறேன்... தனிப்பட்ட முறையில் போட வாய்ப்பில்லை. எல்லா பேப்பர் மீடியாவில் முழுப் பக்க அறிக்கை தரலாம். நந்தினிகள் கோஷ்டி சார்பா.. ஸாரி.. சங்கம் சார்பா."

கூத்து என்னவென்றால் வந்த நந்தினி போகும்போது வேணுகோபால் மனைவி ரேவதியையும் அவர்கள் சங்கத்தில் உறுப்பினராக்கி விட்டாள்!

"அடுத்த மீட்டிங். பத்தாம் தேதி. சாயங்காலம். தாஜ்கோரமண்டல். டின்னர் உண்டு வந்திடுங்க", எனச் சொல்லிப் போனாள்.

வழக்கைத் தாக்கல் செய்தபோது ஜட்ஜ் வயசான சீனியர் படித்து விட்டு இது விசாரணைக்கு ஏற்றதல்ல எனத் தள்ளுபடி செய்து விட்டார்.

"இல்லை ஏற்க வேண்டும்", என ஒரு சீராய்வு மனு போடப்பட்டது, சங்கத்தின் வற்புறுத்தல் பேரில்.

அதற்குள் பழைய ஜட்ஜ் மாறி விட்டார். புதிதாக வந்த நீதியரசர் ஒரு பெண்மணி.

விசாரணைக்கு உகந்தது எனத் தீர்ப்பு வந்து நம்பரும் ஆனது.

அந்த ஜட்ஜ் பெயர் நந்தினி!

கொசுறு... சங்கத் தலைவி நந்தினியின் நாத்தனார் பெயர் குந்தவை. சாப்ட்வேர் என்ஜினீயரின் அக்கா.

நந்தினி மாமியார் பெயர் பூங்குழலி. என்ஜினீயரின் தாயார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online