Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிறுகதை: தோட்டக்காரன்..!

சிறுகதை: தோட்டக்காரன்..!

Kalki Online 1 month ago
 MM strip

அன்று இரவு படுக்கைக்குச் சென்ற ஆனந்தனுக்கு தூக்கமே வரவில்லை. என்றுமில்லாமல், அவனது பிரச்னைகளுக்கு இன்று ஒரு தீர்வு கண்டே ஆகணும் என்ற எண்ணம் மூளையைப் பிசைந்தெடுத்தது.

அவன், வேலை என்று எதுவும் இல்லாமல் ஊர் சுற்றி விட்டு தண்டச் சோறு தின்பவன் அல்ல. தனியார் கம்பெனி ஒன்றில் தலைமைப் பொறுப்பு. கணிசமான சம்பளம் மாதம்தோறும் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும். அடுத்த நாளே அதை அப்படியே எடுத்து மனைவி மல்லிகாவிடம் கொடுத்து விடுவான். அவனது பாக்கெட் செலவுக்கு தினசரி மனைவியிடம் கை நீட்டி காசு வாங்கிச் செல்வதுதான் வழக்கம்.

மல்லிகாவுக்கு பண வரவெல்லாம் எதுவும் கிடையாது. வெறும் ஹோம் மேக்கர்தான். வீட்டு நிர்வாகத்தை குறையின்றி நடத்திச் செல்வதில் அசகாய சூரி. திருமணமாகி பத்தாண்டுகள் ஓடி விட்டன. ஏழு வயதில் ஓர் அழகான ஆண் குழந்தை. இரண்டாம் வகுப்பு படித்து வரும் அவனுக்கு எல்லாமே அம்மாதான். ஸ்கூலுக்கு கொண்டுபோய் விட்டு, கூட்டிக்கொண்டு வருவது, வீட்டுப் பாடம் சொல்லித் தருவது என அனைத்தையும் அவளே செய்வாள்.

ஒரு மாதத்திற்கு முன்பு, அமெரிக்காவில் குடியிருக்கும் ஆனந்தனின் தங்கை கீதா, இவர்கள் வீட்டிற்கு வந்து மூன்று நாட்கள் தங்கி, திரும்பிச் சென்ற நாள் வரை, ஆனந்தனுக்கு வாழ்க்கை அவன் பெயருக்கு ஏற்றார் போல் ஆனந்தமாகவே சென்று கொண்டிருந்தது.

கணவனுடன் வந்திருந்த கீதா புறப்படும்போது, பேச்சுவாக்கில் சில வார்த்தைகளை விளையாட்டாக வீசிவிட்டுப் போனாள். ஆம்... சும்மா இருந்த மல்லிகாவிடம், "என்ன அண்ணி, எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டு செஞ்சிக்கிட்டு இருக்கீங்க. எங்க ஊர்லல்லாம் வீட்டு வேலைகளை கணவன் மனைவி இருவரும் சரி சமமாகப் பகிர்ந்து செய்வதுதான் வழக்கம்" என்றாள்.

"ஹெச் 1B விசாவுல அமெரிக்கா போய் இன்னும் இரண்டு வருஷம் கூட ஆகல. அதுக்குள்ள அமெரிக்கா இவுக ஊராம்ல. ரூல் பேசிட்டுப் போறா" ன்னு மனசுக்குள் பொருமினான் ஆனந்தன்.

அதன் பின் ஒரு வாரம் வழக்கம்போல் கழிந்தது. அடுத்த வாரத்திலிருந்து ஆனந்தன் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக புகைச்சல் ஆரம்பமானது. கீதா கூறிச் சென்றது மல்லிகாவின் மனதிற்குள் மாற்றத்திற்கான வித்தாய் உறுத்த ஆரம்பித்தது... மேலும் அது மல்லிகா மனதுக்கு நியாயமாகவும் பட்டது.

அதன் பின் வந்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக மல்லிகா கணவனிடம் நச்சரிக்க ஆரம்பித்தாள். இரவு சாப்பாடு முடிந்ததும் ஒரு ஆப்பிள் பழத்தை ஆனந்தன் கையில் கொடுத்து, "இதை தோல் சீவி, பொடிசா நறுக்கி குழந்தைக்கு குடுங்க" என்பாள்.

இன்னொரு நாள் வாஷிங் மெஷின் ட்ரையரில் கிடக்கும் துணிகளை அள்ளிக்கொண்டு வந்து மடித்து வைக்கச் சொல்வாள். குழந்தை ரைம் ஒன்றை மனப்பாடம் பண்ணி ஒப்பிக்க வந்தால், "அப்பா கிட்ட போய் சொல்" என்பாள்.

இந்த வேலைகளுக்கெல்லாம் ஆனந்தன் பழக்கப்பட்டிருக்கவில்லை. பேச்சிலராய் இருக்கும்போது வீட்டுக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்று மல்லி செடி, சுரைக்காய் கொடி, வாழை மரம் என இயற்கையோடு இயற்கையாய் வலம் வந்து கொண்டிருப்பான்.

இப்போ வீட்டு வேலை என்பதெல்லாம் அவனை மனதுக்குள் எரிச்சல்படவே வைத்தது. போதாக் குறைக்கு, கீதா வேற அவ்வப்போது மல்லிகாவை தொலை பேசியில் அழைத்து, "என்ன அண்ணி, அண்ணனுக்கு வீட்டு வேலைகளை எல்லாம் கற்றுக்கொடுத்திட்டீங்களா?" ன்னு கேட்டு தூபம் போட்டுக் கொண்டிருந்தாள்.

வீட்டில் உண்டான அழுத்தம், ஆனந்தனின் வேலையில் கவனச் சிதறலை உண்டு பண்ணியது. அன்று முதல் மல்லிகா சொல்வதையெல்லாம் செய்யாமல் மறுப்பு கூறி வந்தான். அதன் விளைவாக இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம் உண்டானது.

"அமெரிக்காவுல இருக்குற கணவன் மனைவி இருவரும், வீட்டு வேலைகளை தங்களுக்குள் சமமாக பிரித்து செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அதே முறையைப் பின்பற்றணும்னு நினைப்பதெல்லாம் தவறு மல்லி! இவ்வளவு காலம் நாம் நாமாகத்தானே இருந்தோம். எல்லாம் சரியாகத்தானே போய்க்கொண்டிருந்தது?" என்றான் ஆனந்தன். எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல் 'காச்.. மூச்' சென கத்திய மல்லிகா கடைசியாக சொன்ன வார்த்தைகள் அவன் காதுகளில் கட்டெறும்பாய் குடைந்தன.

 தமிழ் கதைகள் | a sleepless man thinming something

பள்ளி விடுமுறை என்பதால் பையன் பாட்டி வீட்டுக்கு சென்று விட்டான். பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ஆனந்தன், வேறு வழி எதுவும் தோன்றாததால் இந்த முடிவை செயல்படுத்த தீர்மானித்தான். தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவன் சட்டென எழுந்தான்.

இரவு ஒன்பது மணி சுமாருக்கு மெயின் ரோட்டில் உள்ள ஹார்டுவேர் ஷாப்பிற்கு சென்றான். கூர்மையான கத்தி, அரிவாள் ஒன்று, நாலு மீட்டர் நைலான் கயிறு என சில பொருட்களை வாங்கிக்கொண்டான். பில் கவுண்டரில் சேல்ஸ்மேன் இவனை ஒரு மாதிரியாகப் பார்த்ததையும் கண்டுக்காமல் வீட்டுக்கு வந்தான். சாமான்களை ஒரு மறைவான இடத்தில் வைத்துவிட்டு, படுக்கையில் படுத்தவனை நிம்மதியான தூக்கம் ஆரத் தழுவிக்கொண்டது.

அலாரம் வைக்காமலே அலாரம் வைத்தது போல் அதிகாலை நாலரை மணிக்கு விழிப்பு வந்தது. விடிவதற்குள் ஜோலியை முடித்துவிட வேண்டும்மென்று, உடனே எழுந்தான். பொருட்களை வைத்த இடத்திலிருந்து எடுத்துக் கொண்டான். மறக்காமல் லெதர் கிளவ்ஸ் (gloves) களை கைகளில் அணிந்துகொண்டான்.

சிறுகதை: தெய்வமான குழந்தைகள்!

உடலுக்குள் பரவிய லேசான நடுக்கத்தை சமாளித்துக் கொண்டு முன்னேறினான். மெல்ல.. மெல்ல.. மெதுவா நடந்து சென்று கதவைத் திறந்தான். எந்த விதமான சத்தமோ, எதிர்வினையோ எதுவுமின்றி வேலை சுலபமாக முடிந்தது. உபயோகித்த பொருட்களை கழுவி சுத்தப்படுத்தி மறைவிடத்தில் கொண்டுபோய் வைத்தான்.

சட்டென்று பாத்ரூமுக்குள் நுழைந்து கதவை சாத்தினான். தாழ்பாள்களை இறுக மூடினான். அரை மணி நேரம் கழித்து, டவலால் தலையை துடைத்துக் கொண்டே பாத்ரூம் கதவை திறந்தான். எதிரே புன்னகையோடு நின்று கொண்டிருந்த மல்லிகா, "என்ன இது? இவ்வளவு சீக்கிரம்?" என்று கேட்டாள்.

"என்ன மல்லி, நீதான நேற்று திட்டின... வீட்டுக்குள்ள உள்ள வேலையை செய்யத்தான் துப்பில்ல. வாரம் ஒருமுறை பின் பக்கம் போய் தோட்ட வேலையையாவது செய்யலாம்லனு சொன்னேல்ல. இப்ப போய் பார்" என்றான். பின் பக்கம் சென்று பார்த்த மல்லிகா ஆச்சர்யப்பட்டாள்.

 தமிழ் கதைகள் | A couple

சருகுபோல் காய்ந்து தொங்கிக் கொண்டிருந்த முதிர்ந்த வாழை இலைகள் எல்லாம் மரத்திலிருந்து வெட்டப்பட்டு மரம் அழகான தோற்றம் கொண்டிருந்தது. காலடியில் மிதிபட்டுக்கொண்டிருந்த பீர்கங்காய் மற்றும் புடலங்காய் கொடிகள் அழகாக, மரக் கட்டைகளால் அமைக்கப்பட்டிருந்த பந்தல் மீது ஏற்றப் பட்டு கயிற்றால் கட்டி படர விடப்பட்டிருந்தன.

இஷ்டப்பட்ட பக்கமெல்லாம் கிளை பரத்தி நீட்டிக்கொண்டிருந்த முருங்கை குச்சிகளை வெட்டி ட்ரிம் பண்ணி விட்டிருந்தான் ஆனந்தன். அனைத்தையும் பார்த்து பரவசமான மல்லிகா, ஓடி வந்து கணவனைக் கட்டிக் கொண்டாள். "நாள் முழுக்க வீட்டில் தனிமையில் இருக்கும் எனக்கு ஒரு தோட்டக்காரனை வைத்து வேலை வாங்க பயமாயிருந்தது. என் நாத்தனார் வந்து சென்றதில் எனக்கிருந்த பிரச்னை தீர்ந்து, சூப்பரான ஒரு கார்டனரும் கிடைச்சிட்டார்" எனக் கூறி மேலும் அவள் கைகளை இறுக்கினாள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online