
பூ மாதிரி மென்மையாக இருந்த ஆப்பத்தினை தன் பிஞ்சு விரல்களால் வலிக்காமல் பிய்த்து, அருகில் டபராவுக்குள் இருந்த தேங்காய்ப் பாலுக்குள் மூழ்கடித்து, ஒரு புரட்டு புரட்டி சலவை செய்து எடுத்து.
அலுங்காமல் குலுங்காமல் வாய்க்குள் இட்டுக் கொண்டான் சக்தி.
எதிர் டேபிளில் அமர்ந்து, ஏழு வயது மகன் சாப்பிடும் அழகை மனம் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மெய்யப்பன்.
"எத்தனை நாள் ஆசை தெரியுமாப்பா இப்படி தேங்காய்ப் பால் ஆப்பம் சாப்பிடனும்ன்னு! இன்னைக்குத் தான் அது நிறைவேறுச்சு. ரொம்ப நன்றிப்பா..." என்றான் மகன்.
சர்வர் அருகில் வந்து நின்றார். "வேற ஏதாவது..?"
மெய்யப்பனுக்கு தன் சட்டைப் பைக்குள் ஒற்றைத்தாளாக இருந்த ஐம்பது ரூபாய் மட்டுமே நினைவுக்கு வந்தது. மகனிடம் 'இன்னொன்று வேணுமா' எனக் கேட்க அச்சமாக, கூச்சமாக இருந்தது.
சக்திக்கு அவன் நிலை புரிந்திருந்ததோ என்னவோ தலை நிமிராமல் "எனக்குப் போதும்ப்பா..." என்றான்.
மனதுக்குள் உடைந்தான் மெய்யப்பன். குழந்தைகள் விருப்பப்படும் எளிய உணவுகளைக் கூட வாங்கித் தர முடியாமல் என்ன வாழ்க்கை இது, கடவுளே. உள்ளூர உடைந்தான்.
"அடுத்த தடவை ரெண்டு வாங்கித் தர்றேன் கண்ணு!"
"ம்... பரவாயில்லைப்பா, தேங்க்ஸ்ப்பா"
"சரி நீ அப்படியே பொறுமையா சாப்பிட்டுட்டு மெல்ல நடந்து வீட்டுக்குப் போயிடறியா கண்ணு? அப்பாவுக்கு வேலைக்கு நேரமாச்சு!"
கல்லாவில் பணம் கொடுத்துவிட்டு மகனுக்கு டாடா காட்டிவிட்டு சைக்கிளை மிதித்தான்.
பத்து நிமிடத்தில் முதலாளி கருணாகரனின் வீடு வந்தது. அவனை எதிர்பார்த்து வாசலிலேயே காத்திருந்தார் அவர்.
"வந்துட்டியா ரைட்டு. சைக்கிளைப் போட்டுட்டு பைக்ல உட்காரு."
அவரது வண்டியின் பின்புறம் தொற்றிக் கொண்டான்.
நகரின் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோரின் முன்பு வண்டி நின்றது. அவர் கடைக்குள் நுழைந்ததுமே வேலையாள் ஓடி வந்தார். "நீங்க கேட்ட ஐட்டம் ரெடியா இருக்கு சார்..."
"ஃப்ரெஸ் பீஸ் தானே? மெய்யப்பா, அதை வாங்கிக்கோ..."
மெய்யப்பன் அவர் தந்த சின்ன சைஸ் பெட்டியை வாங்கிக் கொண்டான்.
கூகுள் பேவில் பணம் செலுத்திவிட்டு வெளியே வந்தார்கள்.
சிறுகதை: 'வேலையில்லாப் பட்டதாரி'"சரியா வெச்சுட்டு உட்காரு மெய்யப்பா. கீழே விழுந்திடப் போகுது..." வண்டியை ஸ்டார்ட் செய்தபடியே சொன்னார்.
மெய்யப்பனுக்கு அது என்னவென்று தெரியவில்லை. புரியாமல் "அய்யா இதுல என்ன இருக்கு..." என்றான்.
"இதுவா, நம்ம டைகர் ஒரு வாரமா சரியாவே சாப்பிட மாட்டேங்குதுல்ல. டாக்டர் கிட்ட விசாரிச்சப்போ இதை வாங்கி தரச் சொன்னாரு. நாய்களுக்கான ஸ்பெசல் வெளிநாட்டு உணவு இது! விலை ரெண்டாயிரத்து முந்நூறு!"
மெய்யப்பனுக்கு ஏனோ சிறிதுநேரம் முன்பு தன் மகன், ஆப்பம் சாப்பிட்ட காட்சி நினைவுக்கு வந்தது.

