அடைவதற்குரிய பொன்னுலகம் நமது பார்வையிலேயே இருக்கின்றது! பல அவமானங்கள், பல விமர்சனங்கள், கேலி, கிண்டல்கள், பல நிலைகள் வந்தாலும், நாம் பார்க்கும் மனநிலையிலேயே இந்த பொன்னுலகம் அமையும்!
நல்லவையே நினைத்தால் நிச்சயம் நன்றாகவே நடக்கும். தீய எண்ணத்தோடு அணுகினால், கண்டிப்பாக அது தவறான முடிவில்தான் முடியும். ஆதலால், நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் எல்லாம் அமையும் என்பதை விளக்க ஒரு குட்டி கதை!
ஓர் ஊரில் ஒரு வயதானவர் இருக்கிறார். அவர் தினமும் தனது குடிநீர் தேவைக்காக பக்கத்தில் உள்ள ஆற்றில் தண்ணீர் அள்ளிக்கொண்டு வருவது வழக்கம். தண்ணீரை எப்படி அள்ளிக்கொண்டு வருவார் என்றால், ஒரு நீளமான கம்பில் இரண்டு பக்கமும் கயிறுகளைக் கட்டி, இரண்டு பக்கத்திலும் ஒரு பானையைக் கட்டி, தனது தோளில் சுமந்தபடி கொண்டு வருவார்.
அப்படி ஒரு நாள் இரண்டு பானைகளைச் சுமந்துகொண்டு வரும்பொழுது, ஒரு பக்கத்தில் உள்ள பானை நல்ல பானையாகவும், மற்றொரு பானை ஓட்டைப் பானையாகவும் இருந்தது. இதனால் தண்ணீரோ சொட்டுச் சொட்டாக வடிந்துகொண்டே வந்தது.
தன் எல்லையை நிர்ணயம் செய்யும் புலி... எப்படி?இருந்தும், இதனைப் பெரிதாக எண்ணிக் கொள்ளாமல், அந்தப் பெரியவர் தினமும் அதே பானையில் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்.
இப்படியே, ஒரு பக்கம் நல்லப் பானையை வைத்துக்கொண்டும், மற்றொரு பக்கம் ஓட்டைப் பானையை வைத்துக்கொண்டும் தினமும் தண்ணீர் எடுத்துக்கொண்டு செல்கிறார்.
ஒரு நாள் இந்த பெரியவரின் செயலைப் பார்த்து ஒருவர், "ஐயா, நீங்கள் தினமும் தண்ணீர் அள்ளிக்கொண்டு போவதைப் பார்க்கிறேன். ஆனால் ஒரு பானை நல்லா இருக்கு; இன்னொரு பானை ஓட்டையா இருக்கு. ஆனால் தினமும் இப்படியே தண்ணீர் எடுத்துட்டுப் போய்க்கிட்டு இருக்கீங்களே, தண்ணீர் ஒரு பக்கம் வீணாகிக்கொண்டே இருக்குதே! எதுக்கு ஐயா வேற பானை மாற்றலாம் இல்லையா?" என்று கேட்க...
அதற்கு அந்தப் பெரியவர், "தம்பி, நீ இந்த ரோட்டு ஓரத்துல, பக்கவாட்டில் பார்த்திருக்கிறாயா? பூக்கள் அழகழகா பூத்திருக்கு! அதுக்குக் காரணம் யார் தெரியுமா?"
"யாருன்னு தெரியலையே! ரோட்டுப் பக்கத்துல பூச்செடி முளைக்கிறது இயல்புதானே! இதுக்கு யார் காரணமாக இருக்க முடியும் சொல்லுங்க! பார்ப்போம்!"
"அதுக்குக் காரணம் இருக்கு... இப்போ நான் ரெண்டு பானையையும் நல்ல பானையா கொண்டு போயிருந்தேன்னா, தண்ணீர் கீழே ஊத்திருக்காது. இந்த ஓட்டைப் பானையிலிருந்து ஊற்றிய தண்ணீரில்தான் இந்தப் பூச்செடி பூத்திருக்கிறது! ஆனால் உனக்கு வெளியே இருந்து பார்க்கும்போது 'இவருக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கு, ஓட்டைப் பானையில தண்ணி கொண்டு போறாரு'ன்னு யோசிப்பாய்! எல்லாமே நாம் பார்க்கிற பார்வையில்தான் தம்பி!" என்று அந்த முதியவர் கூறுகிறார்.
"ஆமாம் ஐயா! நீங்கள் சொல்வதுதான் சரி. நாம் என்ன நோக்கத்தோடு பார்க்கிறோமோ, பழகுகிறோமோ, அதுதானே நமக்கு நடக்கும்! அதைத்தானே நாம் அடைய முடியும்! சரியாகச் சொன்னீர்கள் ஐயா! ரொம்ப நன்றி!" என்று கூறி கிளம்பிவிடுகிறார்.
பிறகு முதியவரும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்!
பட்டய கிளப்பும் பறவைகளின் ராஜா!
