Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிறுவர் சிறுகதை: மிட்டாய் தாத்தா..!

சிறுவர் சிறுகதை: மிட்டாய் தாத்தா..!

Kalki Online 3 weeks ago

ந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை இருந்தது. முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் அந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.

மாலை நேரங்களில் பள்ளியின் வெளியே சிலர் தின்பண்டங்களை விற்றுக் கொண்டிருப்பார்கள். சிறுவர் சிறுமியர் தங்களுக்குப் பிடித்தமான சாக்லெட், பிஸ்கட், மிட்டாய் போன்றவற்றை வாங்கி சாப்பிட்டு மகிழ்வார்கள்.

தினந்தோறும் மாலை நான்கு மணிக்கு அந்த பள்ளி வேலை நேரம் முடிந்து மணியடிக்கப்படும். ஒரு தாத்தா மாலை மூன்றரை மணிவாக்கில் அந்த பள்ளியின் முன்னால் வந்து நிற்பார். அவர் கையில் ஒரு பெரிய மூங்கில் கழி இருக்கும். அதன் மேற்புறத்தில் ஒரு கைதட்டும் பொம்மை பொருத்தப்பட்டிருக்கும்.

அந்த பொம்மையின் கீழ் பலவண்ணங்களைக் கொண்ட ஜவ்வு மிட்டாய் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். மூங்கில் கழியின் கீழ்ப்புறம் ஒருகால் விரல் நுழையும் அளவிற்கு வெட்டப்பட்டிருக்கும். ஒரு நீளமான நைலான் கயிறு அந்த பொம்மையுடன் இணைக்கப்பட்டிருக்கும். நைலான் கயிற்றை அந்த தாத்தா தன் வலது கால் கட்டைவிரலால் இழுத்தால் அந்த பொம்மை கைதட்டும்படியாக அமைக்கப்பட்டிருந்தது.

தாத்தா தனது வலது கால் கட்டைவிரலை மேலும் கீழும் அசைக்க நைலான் கயிறு இயங்கி அந்த பொம்மை கைதட்டும். இதை பள்ளிச்சிறுவர்கள் மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்ப்பார்கள்.

சிறுவர்கள் ஐந்து ரூபாய் கொடுத்தால் அந்த தாத்தா ஜவ்வு மிட்டாயை இழுத்து அதிலிருந்து கை கடிகாரம், பூ, மோதிரம், மயில், நெக்லஸ், வாத்து, தேள், கொக்கு, பாம்பு போன்ற வடிவங்களில் ஒரே நிமிடத்தில் செய்து கொடுப்பார். அவை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். வாட்சைச் செய்து அதை சிறுவர்களின் கைகளில் கட்டி ஒட்டிவிடுவார். சிறிது நேரம் அதை ரசிக்கும் சிறுவர்கள் பின்னர் அந்த மிட்டாயைப் பிய்த்துத் தின்று கொண்டே வீட்டிற்குச் செல்லுவார்கள்.

சிறுவர் சிறுகதை: பழிவாங்கும் மந்திர வாள்!

அந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான் ராமு. அவனுக்கு அந்த ஜவ்வு மிட்டாயை வாங்கி சுவைக்க வேண்டும் என்று நெடு நாளாக ஆசை. ஆனால் அவனிடம் அதை வாங்க காசு இல்லை. தினமும் அந்த மிட்டாய் விற்கும் தாத்தாவின் அருகில் சென்று நிற்பான். அவர் செய்யும் மிட்டாய் பொம்மைகளை ஆச்சரியமாக வேடிக்கை பார்ப்பான்.

பின்னர் அதை மற்ற சிறுவர்கள் வாங்கி சுவைப்பதை ஏக்கத்தோடு பார்ப்பான்.

தினமும் வேடிக்கை பார்ப்பதும் ஏமாற்றமாக வீடு திரும்புவதுமாக இருந்த ராமுவை அந்த மிட்டாய் தாத்தா கவனித்துக் கொண்டிருந்தார்.

ஒருநாள் ராமு தன் அம்மாவிடம் "அம்மா எனக்கு அஞ்சு ரூவாக் குடும்மா" என்று கேட்டான்.

"ஸ்கூல் போற பையனுக்கு எதுக்குடா காசு. தரமுடியாது. என்கிட்டே காசு இல்ல"

அவன் அம்மா அவனை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்துக் கொண்டிருந்தாள்.

"ஸ்கூலுக்கு வெளியே ஜவ்வு மிட்டாய் விக்குதும்மா. ஒருநாளைக்கு அதை வாங்கி சாப்பிடணும் போல ஆசையா இருக்கும்மா"

சிறுவர் சிறுகதை: மாயக் குளமும்... வாடாத மலரும்!

"ஒருநாள் வாங்கி சாப்பிட்டா அதே பழக்கமாயிடும். பேசாம போய் நல்லா படிக்கிற வழியப்பாரு"

அம்மா தீர்மானமாக காசு தர மறுத்துவிட்டாள்.

அன்று மாலை வழக்கம் போல ராமு மிட்டாய் தாத்தாவின் அருகில் நின்று கொண்டு அவர் மிட்டாய்களை செய்வதையும் அதை சக மாணவர்கள் வாங்கி சாப்பிட்டு மகிழ்வதையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு சிறுவன் வேண்டுமென்றே ராமுவிடம் தான் வாங்கி மிட்டாயைக் காண்பித்து "மிட்டாய் ஜோரா இருக்குடா" என்று சொல்லிவிட்டு சாப்பிடத் தொடங்கினான்.

ராமுவிற்கு அழுகை வரும் போல இருந்தது.

அந்த சமயம் பார்த்து மிட்டாய் தாத்தா "தம்பி இங்க வா" என்று ராமுவை அழைத்தார்.

ராமு அவர் அருகில் சென்றான்.

"தம்பி. உனக்கு என்ன மிட்டாய் வேணும் சொல்லு"

"வேணாம் தாத்தா. எங்கிட்ட காசு இல்ல தாத்தா"

"காசு இல்லேன்னாலும் பரவாயில்லே. என்ன மிட்டாய் வேணும் சொல்லு"

"எனக்கு வாட்ச் வேணும் தாத்தா"

 தமிழ் கதை | Candy Grandpa and a little boy

மிட்டாய் தாத்தா மளமளவென அழகான ஒரு மிட்டாய் வாட்சை தயார் செய்தார். பார்க்க அந்த வாட்ஜ் நிஜ கை கடிகாரத்தைப் போலவே அழகாக இருந்தது.

தாத்தா அந்த வாட்ச்சை அவன் கையில் கட்டிவிட்டார்.

தாத்தா அவனைப் பார்த்து சிநேகமாய் சிரித்தார்.

"போ. சாப்பிட்டுகிட்டே போ. காசு தர வேணாம். இனி உனக்கு எப்ப மிட்டாய் வேணுமோ என்கிட்டே கேளு. உனக்கு நான் தாரேன்"

தாத்தாவின் அந்த அன்பு அவனுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தாத்தாவை கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் போலத் தோன்றியது.

நன்றியோடு தாத்தாவைப் பார்த்தான் ராமு. அவன் அப்படிப் பார்த்தது மிட்டாய் தாத்தாவையும் நெகிழச் செய்தது.

சில நாட்கள் சென்றன. அன்று அவன் வகுப்பில் வழக்கமாக வரும் வகுப்பு ஆசிரியை வரவில்லை. வேறொரு ஆசிரியை வகுப்பைப் பார்த்துக் கொள்ள வந்தார்.

அவர் மாணவர்களிடம் "நீங்கல்லாம் படிச்சி முடிச்சி எதிர்காலத்துல என்னவா ஆகப்போகிறீங்கன்னு சொல்லுங்க பார்ப்போம். ஒவ்வொருத்தரா எழுந்து நின்று பேரைச் சொல்லிட்டுப் பேசுங்க" என்று கேட்டார்.

தெனாலிராமன் கதை: படிக்காத புத்தகம்..!

ஒவ்வொருவராக எழுந்து நின்று தங்கள் பெயரைச் சொல்லிவிட்டு "நான் டாக்டராகப் போறேன்". "நான் கலெக்டராகப் போறேன்". "நான் வக்கீலாகப் போறேன்". "நான் பெரிய எஞ்சினியராகப் போறேன்". "நான் விமானம் ஓட்டப் போறேன்" என்று தங்கள் விருப்பங்களைச் சொல்லியவண்ணம் இருந்தார்கள்.

இப்போது ராமுவின் முறை வந்தது.

ராமு எழுந்து நின்று "என் பேரு ராமு டீச்சர். நான் பெரியவனாகி மிட்டாய் தாத்தா மாதிரி மிட்டாய் விக்கப் போறேன் டீச்சர்" என்றான்.

இதைக் கேட்ட அனைவரும் சத்தம் போட்டு கேலியாக சிரித்தனர்.

"ராமு. எல்லாரும் எஞ்சினியர் டாக்டர் கலெக்டர்னு சொல்றாங்க. நீ மிட்டாய் விக்கப் போறேன்னு சொல்றியே"

டீச்சர் ராமுவிடம் இப்படிக் கேட்டார்.

"மிட்டாய் தாத்தா ரொம்ப நல்லவரு டீச்சர். நான் அவரை மாதிரி நல்லவனா ஆகப் போறேன் டீச்சர்"

புராண கதை: சிவனுக்கு விஷ்ணு புகட்டிய பாடம்!

தனக்கு சம்பந்தமே இல்லாத மிட்டாய் தாத்தா தன்னிடம் காட்டிய அன்பு அவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இந்த உலகத்தில் அன்புதான் உயர்ந்தது என்பதை அவன் உணர்ந்து விட்டான். அவன் சொன்னதின் உள்ளர்த்தம் டீச்சருக்குப் புரியவில்லை.

ஒருவனுடைய லட்சியமானது உயர்ந்த படிப்புகளைப் படிப்பதும் உயர்ந்த பதவிகளை அடைவதுமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நல்ல மனிதனாக ஆக வேண்டும் என்பது மிக உன்னதமான உயர்ந்த லட்சியம் அல்லவா ?

நம் ராமு எதிர்காலத்தில் உன்னதமான மனிதனாக அனைவரும் போற்றும் ஒரு உயர்ந்த மனிதனாக இந்த உலகத்தில் வலம் வருவான்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online