Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சுற்றிலும் அறிவியல்! நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கு இந்த வடிவம் அமைந்தது ஏன்?

சுற்றிலும் அறிவியல்! நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கு இந்த வடிவம் அமைந்தது ஏன்?

Kalki Online 1 week ago

நாம் நம் அன்றாட வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான பொருட்களை பார்த்தும், சிலவற்றை தினமும் பயன்படுத்தியும் வருகிறோம்.

அவற்றில் சில பொருட்கள் தனித்துவமான வடிவமைப்பு கொண்டுள்ளதாக இருப்பதை நாம் காணலாம். அவ்வாறு அமைந்த தனித்துவமானது இயற்கையாகவும் இருக்கலாம் அல்லது மனிதனால் உண்டு பண்ணியதாகவும் இருக்கலாம். உதாரணமாக நாம் பார்க்கும் கிணறுகள் அனைத்தும் பொதுவாக வட்ட வடிவம் கொண்டதாகவே இருக்கின்றன.

கிணற்றை சுற்றியுள்ள மண் பரப்பினால் ஏற்படும் அழுத்தத்தை கிணற்றின் வட்ட வடிவம் சமமாகப் பகிர்ந்துகொள்கிறது. அதனால் கிணற்று சுவர் இடிந்து விழும் வாய்ப்பு குறைகிறது. வட்ட வடிவ சுவற்றில் மூலைகள் இல்லாததால் விரிசல் ஏற்படும் வாய்ப்பும் இல்லை. வட்டம் அதிக பரப்பை உள்ளடக்குவதால், நீரின் கொள்ளளவு அதிகரிக்கும். வட்ட வடிவ சுவர் கட்டுகையில், பயன் படுத்தப்படும் செங்கற்கள் ஒன்றையொன்று தாங்கிக்கொள்வதால் சுவருக்கு நல்ல வலிமை கிடைக்கும்.

தண்ணீர் எடுப்பதற்கு வாளியை எந்தப் பக்கத்திலிருந்தும் உள்ளே விட்டு எடுத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது என பல காரணங்கள், கிணறு வட்ட வடிவில் இருப்பதற்கு கூறப்படுகின்றன. இதேபோல் தனித்துவம் கொண்ட வேறு சில பொருட்கள் அறிவியல் வடிவம் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.

பாலங்களின் வளைவுகள் (Arch): பாலங்களில் காணப்படும் வளைவான அமைப்பு அதன் பாரத்தை நேர் கீழாக மட்டும் செலுத்தாமல், பக்கவாட்டுகளிலும் பகிர உதவுகிறது. அதனால் வளைவு பாலங்கள் வலிமை மிக்கதாக அமையும் வாய்ப்பு உருவாகிறது.

முட்டை: முட்டையின் ஓவல் வடிவம் வெளிப்புறத்தில் இருந்து வரும் அழுத்தத்தை சமமாகப் பகிர்ந்து பல திசைகளிலும் அனுப்ப உதவுகிறது. இதனால் உள்ளிருக்கும் குஞ்சு, ஓடு உடையாமல் பாதுகாப்பாக வளர்ந்து வெளிவர உதவியாகிறது.

நத்தை ஓட்டின் சுருள் வடிவம்: நத்தையின் முதுகுப் பக்கத்தில் அதன் பாதுகாப்பிற்காக இயற்கையாகவே அமைந்திருக்கும் ஓடானது, நத்தை குஞ்சாக இருக்கும்போது சிறிய அளவில் உருவாகி, நத்தை வளர வளர ஓட்டின் அளவும் பெரிதாகிக் கொண்டு, கூடுதல் இடத்தை நத்தைக்கு உருவாக்கித்தரும். மேலும் அந்த ஓடு, அதன் வளைந்த அமைப்பினால் வெளிப்புற அழுத்தத்தை தாங்கவும் உதவிபுரிகிறது.

 அறிவியல் வடிவம் - Object Geometry Principles

முக்கோண அமைப்பு கொண்ட கோபுரங்கள்: நம் நாட்டுக் கோபுரங்கள் பலவும் முக்கோண வடிவம் கொண்டதாக இருப்பதை காணலாம். அதற்கான காரணம், முக்கோணம் எளிதில் வடிவம் மாறாது. அதனால் குறைந்த செலவில் வலிமை மிகுந்த கட்டடம் உருவாக்க முடிகிறது என கூறப்படுகிறது.

இரண்டு உலகங்களுக்கு நடுவில் நசுங்கும் பெண்கள்: சாண்ட்விச் ஜெனரேஷன் உண்மை முகம்!

மரத்தின் வேர்: பொதுவாக மரத்தின் வேர் ஆணிவேர் எனப்படும் வலிமை மிக்க, ஆழமாக செல்லக்கூடிய வேர், கிளை வேர்கள் மற்றும் ஜல்லி வேர்கள் எனப்படும் உரோமம் போன்ற மெல்லிசான வேர்கள் என மூன்று வகைகளாக பிரிந்து மண்ணுக்குள் செல்பவைகளாக இருக்கும். இந்த அமைப்பானது, மண் பரப்பிலிருந்து அதிகமான நீரும் ஊட்டச்சத்துக்களும் மரத்திற்கு கிடைக்க உதவிபுரிகிறது.

தேன் கூடு: தேனீக்கள் பொதுவாக தங்கள் கூட்டை அறுகோண வடிவ அறைகள் கொண்டதாகவே உருவாக்குகின்றன. அறுகோணங்கள் ஒன்றோடொன்று இணைந்து இடைவெளி இன்றி உருவாக்கப்படுவதால், குறைந்த மெழுகின் பயன்பாட்டில் அதிக சேமிப்பிடம் கிடைக்கிறது.

சிலிண்டர்: எரிவாயு சிலிண்டர் மற்றும் குளிர்பான கேன் போன்றவை எப்பவும் உருளை வடிவிலேயே இருக்கும். காரணம், உள்ளே இருக்கும் திரவம் மற்றும் வாயுவின் அழுத்தம் அதன் சுவர்களில் சமமாகப் பரவுவதற்காக என கூறப்படுகிறது. மேலும் பொருளை உள்ளே நிரப்பவும் சேமிக்கவும் அந்த உருளை வடிவம் வசதியாக உள்ளது.

டோம் (Dome): மசூதி போன்ற கட்டிடங்களில் குவி மாடம் இருப்பதை நாம் காண்கிறோம். குவி மாடம் அதன் எடையை, சுற்றியுள்ள சுவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கிறது. அதன் மூலம் பெரிய இடத்தை நடுவில் தூண் இல்லாமல் மூடுவதற்கு முடிகிறது.

பந்து: பந்து, மூலை எதுவுமின்றி கோள வடிவம் கொண்டுள்ளது. அதனால், உள்ளிருக்கும் மொத்த அழுத்தத்தையும் சமமாகப் பரத்தி, காற்றை அதிக அழுத்தத்தில் உள்ளே வைத்திருக்க முடிகிறது.

வீடியோ காலில் இறுதிச்சடங்கு: உணர்வுகளை இழந்து நிற்குதா மனித உலகம்?

ஜல்லி கரண்டி: ஜல்லி கரண்டியில் ஒரே அளவிலான ஓட்டைகள் வட்ட வட்டமாக அணி வகுத்தாற்போல் போடப்பட்டிருக்கும். இதனால் கடாயில் வடைகளை எடுக்கும்போது, வடைகள் உறிஞ்சியுள்ள அதிகப்படி எண்ணெய்யை சமமாக வடிகட்டி பிரித்தெடுக்க முடியும்.

வடிவம் என்பது அழகை குறிப்பிட மட்டும் இல்லை. வலிமை, பயன்பாடு மற்றும் பாதுகாப்பு போன்ற அம்சங்கள்களை கருத்தில் கொண்டு இயற்கையாலும் மனிதனாலும் உருவாக்கப்பட்டவை என்று தாராளமாக கூறலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online