Dailyhunt
திருவண்ணாமலை கிரிவலம் குறித்து ரமண மகரிஷி அருளியது!

திருவண்ணாமலை கிரிவலம் குறித்து ரமண மகரிஷி அருளியது!

Kalki Online 1 year ago

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால், அதுவும் பௌர்ணமி கிரிவலம் சென்றால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும், முக்தி கிடைக்கும், வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என எத்தனையோ விதமான விஷயங்கள் சொல்லப்படுகிறது.

இவற்றையெல்லாம் தாண்டி வேறு என்ன கிடைக்கும்? திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் துன்பம் தீரும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா எனக் கேட்பவர்கள் பலரும் இருக்கிறார்கள். அவர்களுக்காக பகவான் ரமண மகரிஷி கூறிய அற்புதத் தகவலை இந்தப் பதிவில் காண்போம்.

கால்கள் இரண்டும் உணர்வு இழந்து தொங்கிப்போன ஒரு பெரியவர் கவட்டு கட்டைகளின் உதவியுடன் நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார். அவர் அதுபோல அடிக்கடி கிரிவலம் வருவது உண்டு. ஆனால், இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி மிகுந்த சோர்வுடனோடும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத்திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். அதற்குக் காரணம் பலமுறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்ததுதான்.

கால்கள் தொய்வு பெற்ற தான், தனது குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்கு தன்னால் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர்களுக்கு சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்பதால் அவர்களை விட்டு விலகி யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்திற்கு சென்று விடலாம் என்று அந்த பெரியவர் முடிவெடுத்தார். அதனால் கடைசி முறையாக திருவண்ணாமலை கிரிவலம் செய்ய வந்திருந்தார்.

நொடிப்பொழுதில் உற்சாகமும், தைரியமும் கொடுக்கும் சொல்லின் செல்வர்!

நொண்டி நொண்டி சூம்பிய கால்களுடன் அந்தப் பெரியவர் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து கொண்டிருந்தபோது பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான். பெரியவரை நெருங்கிய வாலிபன், 'ஓய், கால் சரியில்லாத நீ கவட்டை கட்டையுடன் கிரிவலம் வர வேண்டும் என்று யார் அழுதார்கள். இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையை சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்கு சரிப்படாது' என்று கூறிவிட்டு எதிர்பாராத நேரத்தில் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கென்று பிடுங்கி தூர எறிந்து விட்டு வேகமாக நடந்து சென்று விட்டான்.

அந்தப் பெரியவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. 'வந்தான், திட்டினான், கவட்டை கட்டையை பிடுங்கி தூர எறிந்தான். இப்படியா ஒரு மனிதன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்' ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்து உடம்பும் மனமும் சிலிர்த்து அப்படியே நின்றார். இப்பொழுது அவரது கால் ஊனம் காணாமல் போய் கவட்டு கட்டைகளின் உதவி இன்றி கம்பீரமாக நேராய் நின்று கொண்டிருந்தார்.

பரோட்டா மட்டும்தான் உடலுக்குக் கெடுதலா? அப்படியென்றால் இவையெல்லாம்…?

அந்தப் பெரியவர் இளைஞன் சென்ற திசையை நோக்கி தொழுதார். அவர் கண்களில் இருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது. அதன் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை. இந்த உண்மை சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லி இருக்கிறார் பகவான் ரமண மகரிஷி. விருப்பாட்ஷி குகையில் ரமண மகரிஷி இருந்தபோது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்தார் என சொல்லப்படுகிறது. அண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை உணர்த்தவே ரமண மகரிஷி இந்த சம்பவத்தை பக்தர்களுக்கு உதாரணமாகக் கூறுவது உண்டு.

வாலிபனாக வந்து அந்த மாற்றுத் திறனாளிக்கு கால்களைக் கொடுத்து அருளியவர் சாட்சாத் அண்ணாமலையார்தான். திருவண்ணாமலையில் மலை வடிவில் அருணாச்சலேஸ்வரராக இறைவன் வீற்றிருக்க, அவர் மடியில் நாம் தவழ்வதுதான் கிரிவலம். அதனால்தான் இத்தனை நன்மையும் என்பதை பக்தர்களுக்கு அழகாக எடுத்துரைத்தார் ரமண மகரிஷி.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online