Dailyhunt
உடற்பயிற்சி பற்றி நாம் இத்தனை காலம் நம்பியது பொய்யா? அதிரவைக்கும் உண்மைகள்!

உடற்பயிற்சி பற்றி நாம் இத்தனை காலம் நம்பியது பொய்யா? அதிரவைக்கும் உண்மைகள்!

Kalki Online 3 weeks ago

டல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் உடற்பயிற்சிக்கு நிகர் வேறில்லை. உடற்பயிற்சி குறித்து சில பொதுவான கருத்துக்கள் உண்டு.

உண்மையில் அவற்றில் எவையொல்லாம் சரியானது என்பதை சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோமா!

நல்ல வடிவம் பெறுவதற்கு சிறந்த வழி ஓட்டம் அல்லது மெல்லோட்டம் என்பது உண்மையா? ஓட்டமும், ஜாக்கிங் எனும் மெல்லோட்டமும் சிறந்த உடற்பயிற்சிகள் தான். ஆனால், அவை கால் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தினமும் ஜாக்கிங் போவது உடலுக்கு நல்லதல்ல வாரத்தில் 3 நாட்கள் போதுமானது என்கிறார்கள் லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

ஒருவர் நீச்சல், நடை, சைக்கிளிங் என்று எந்த உடற்பயிற்சி வேண்டுமானாலும் செய்யலாம். அதன் மூலம் தான் சாப்பிட்டதை விட அதிக கலோரிகளை எரிக்க முடிந்தால் அதுவே சிறந்த உடற்பயிற்சி. அதன் மூலமாக நல்ல வடிவமைப்பும், ஆரோக்கியமும் பெறலாம்.

வலியில்லாத உடற்பயிற்சிகளால் பெரிதாக நன்மைகள் இல்லை என்று ஒரு கருத்து உண்டு. உண்மையில் ஜிம் போன்ற தீவிர உடற்பயிற்சிகளின் போது சிறிது கஷ்டம் ஏற்படலாம். ஆனால், வலி தான் நல்ல உடற்பயிற்சிக்கு அடையாளம் என்பதில்லை. சில வேளையில் தசைநார் பிரச்சினைகள் மூலமாகவும் வலியை உணரலாம். நடைப்பயிற்சி, சைக்கிளிங் பயிற்சிகளை விட எடை தூக்கும் பயிற்சி மிகவும் நல்லது என்கிறார்கள் கிராண்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

காலையில் உடற்பயிற்சி செய்வது தான் மிகவும் நல்லது என்பது ஒரு பொதுவான கருத்து. ஆனால், பயிற்சி நேரத்தை விட பயிற்சி தான் முக்கியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பகல் வேளையில் வசதியான எந்த நேரத்திலும் கூட உடற்பயிற்சி செய்யலாம் என்கிறார்கள். மாசசூசெட்ஸ் சான் மருத்துவப் பள்ளியின் ஆய்வாளர்கள், கூடுதல் நன்மைகளை அடைய காலை நேரத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது என்றாலும், எந்த நேரத்திலுமே உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கு ஏதோ ஒரு நேரத்தில் செய்வது நல்லது என்கிறார்கள். வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியமாகும்.

வயது முதிர்ந்தவர்களுக்கும், மிகவும் இளவயதினருக்கும் உடற்பயிற்சி தேவையில்லை என்று ஒரு பரவலான கருத்து உண்டு. ஆனால் எளிதாக செய்யும் உடற்பயிற்சி முதியவர்களின் 'ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்' அறிகுறிகளை தவிர்க்கவும் எலும்புகளின் அடர்த்தியை பராமரிக்க உதவுகிறது என்கிறார்கள். மிக இளம் வயதினருக்கு உடற்பயிற்சி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்கிறார்கள். வாரத்தில் 4 நாட்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும் இளம் வயதினருக்கு தற்கொலை எண்ணங்கள் வருவதில்லை என்கிறார்கள் வெர்மான்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

பெண்கள் ஜிம் பயிற்சி செய்யும் போது கனமான பொருட்களை தூக்குவது அவர்களின் மென்மை தன்மையை பாதிக்கும் எனவே அவர்கள் குறைந்த எடையுள்ள பொருட்களையே தூக்க வேண்டும் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் உண்மையில் கனமான பொருட்களை தூக்கி உடற்பயிற்சி செய்வதன் மூலம் அவர்களின் தசைகள் திரண்டு அழகி ஆக்கிவிடாது. வலுவான தசைகளை உருவாக்க பெண்களுக்கு மனோரீதியாக வாய்ப்புகள் குறைவு. மிகத் தீவிரமான பயிற்சிகள் மூலமே அது சாத்தியம். எடை தூக்கும் பயிற்சி செய்யும் பெண்களுக்கு பதட்டம், படபடப்பு போன்றவை வருவது குறைவு என்கிறார்கள் லிமெரிக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

சோர்வைச் சுருட்டி எறியுங்கள்: இரண்டே நிமிடங்களில் ரீசார்ஜ் ஆக 2 ரகசியங்கள்!

வீட்டில் வைத்து செய்யப்படும் உடற்பயிற்சி கருவிகள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது தான் என்று பலரும் வீட்டில் உடற்பயிற்சி கருவிகள் வைத்து உடற்பயிற்சி செய்து வருகின்றனர். ஆனால், எல்லா உடற்பயிற்சி கருவிகளும் எல்லோருக்கும் சரிப்படாது. உடற்பயிற்சி கருவிகளில் உடற்பயிற்சி செய்யும் போது அதற்கு தனக்கு செட்டாகுமா? என்பதை உடற்பயிற்சி வல்லுனர்களிடம் ஆலோசனை பெற்றே செய்வது நல்லது என்கிறார்கள்.

தினமும் உடற்பயிற்சி செய்வது, அதுவும் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட உடற்பயிற்சி கூடத்தில், குறிப்பிட்ட கருவிகள் மூலம் செய்வதே நல்லது என்பது பலரின் பொதுவான கருத்து. ஆனால், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நீண்ட நேரம் செலவிடுவது தேவையில்லை. ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை அடிப்படை வலிமைப் பயிற்சிகளைச் செய்வதே உங்கள் ஆரோக்கியத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஸ்குவாட்ஸ், புஷ்-அப்ஸ், வீட்டு எடைகளைத் தூக்குதல் போன்ற எளிய பயிற்சிகள் தசை வலிமை, உடல் சமநிலை, நடக்கும் வேகம் மற்றும் ஒட்டுமொத்த உடற்தகுதியை மேம்படுத்தும். இவை வெறும் உடற்தகுதி மேம்பாடுகள் மட்டுமல்ல - ஒருவருக்கு வயதாகும்போது, படிக்கட்டுகளில் ஏறுவது, மளிகைப் பொருட்களைச் சுமப்பது அல்லது கீழே விழுவதைத் தவிர்ப்பது போன்றவற்றில் இவை நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்கிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online