Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உங்கள் குழந்தை கோகோமெலன் அடிமையா? பெற்றோர்கள் கவனத்திற்கு!

உங்கள் குழந்தை கோகோமெலன் அடிமையா? பெற்றோர்கள் கவனத்திற்கு!

Kalki Online 1 week ago

கோகோமெலன் போன்ற அதிவேக 3டி கார்ட்டூன்கள், பிஞ்சு மூளையில் டோபமைன் அதிகரித்து டிஜிட்டல் போதை நிலையை உருவாக்குகின்றன.

இதனால் கவனச் சிதறல், கற்றல் குறைபாடு, பேச்சுத் தாமதம், சமூகத் தொடர்பு குறைவு, தூக்கக் கோளாறுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். உலக சுகாதார அமைப்பு, இரண்டு வயதுக்குக் கீழ் திரை நேரம் முழுமையாகத் தவிர்க்கவும், அதற்கு மேல் தினமும் 30 நிமிடமாகக் கட்டுப்படுத்தவும் பரிந்துரைக்கிறது.

கோகோமெலன் பாதிப்பு: பெற்றோர்கள் செய்ய வேண்டிய அவசர மாற்றங்கள்

ன்றைய டிஜிட்டல் உலகில், கைக்குழந்தைகள் முதல் மழலையர் வரை அனைவரையும் கட்டிப்போடும் ஒரு மந்திரச் சொல்லாக 'கோகோமெலன்' மாறியுள்ளது. இது உலகளவில் குழந்தைகளிடையே மிகவும் புகழ்பெற்ற ஒரு யூடியூப் சேனல் மற்றும் 3டி அனிமேஷன் கார்ட்டூன் தொடர் ஆகும். இது குறிப்பாக கைக்குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட மழலையர்களுக்காக உருவாக்கப்பட்டது.

எளிய பாப்பா பாடல்கள், வண்ணமயமான அனிமேஷன் பாத்திரங்கள் மற்றும் துள்ளலான இசை ஆகியவற்றின் மூலம் குழந்தைகளை எளிதில் கவர்ந்திழுக்கிறது. அதே சமயம் இது குழந்தைகளின் பிஞ்சு மூளையை அளவுக்கு அதிகமாகத் தூண்டுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலகளாவிய குழந்தை நல நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

கோகோமெலனின் முக்கிய அம்சங்கள்:

இதில் 'ஜேஜே' என்ற முதன்மைக் குழந்தைக் கதாபாத்திரமும், அவனது குடும்பத்தினரும், நண்பர்களும் அன்றாட வாழ்வில் செய்யும் எளிய காரியங்களை (பல் துலக்குவது, குளிப்பது, பள்ளிக்குச் செல்வது) போன்றவற்றை பாடல்களாகப் பாடுவார்கள்.

இந்தக் காட்சிகள், ஒன்றிலிருந்து 3 வினாடிகளுக்கு ஒருமுறை மிக வேகமாக மாறும். இந்த அதிவேகக் காட்சி மாற்றங்கள் குழந்தைகளின் பிஞ்சு மூளையில் 'டோபமைன்' என்னும் மகிழ்ச்சி ஹார்மோனை மிக அதிக அளவில், மிக வேகமாகச் சுரக்க வைக்கின்றன.

இது ஒருவிதமான 'டிஜிட்டல் போதை' நிலையை உருவாக்குகிறது. டிவி திரையை அணைத்தவுடன் நிஜ உலகம் குழந்தைகளுக்கு பிடிக்காமல் போகும். மொபைலையோ அல்லது டிவியையோ அணைக்கும் போது, குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாகக் கத்தி அழுது அடம் பிடிக்கிறார்கள்.`

 கோகோமெலன் பாதிப்பு

கவனச் சிதறலும் கற்றல் குறைபாடும்:

குழந்தைகள் பொம்மையை வைத்து விளையாடும் போதோ அல்லது நிஜ மனிதர்களுடன் பழகும் போதோ அவர்களின் கவனம் ஒரே இடத்தில் நிலைபெறப் பழகுகிறது. ஆனால், கோகோமெலன் பார்க்கும்போது ஒவ்வொரு இரண்டு வினாடிக்கும் ஒரு காட்சி மாறுவதால், குழந்தைகள் தங்களின் சுய சிந்தனையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.

இது குழந்தைகளின் இயல்பான கவனக் குறைக்கிறது. இதன் விளைவாக, பிற்காலத்தில் பள்ளிக்குச் செல்லும்போது ஒரு பாடத்தையோ அல்லது ஒரு எளிய வேலையிலோ அவர்களால் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாமல் போகும் என்று அமெரிக்கக் குழந்தை மருத்துவக் கழகம் எச்சரிக்கிறது.

பேச்சுத் தாமதமும் சமூகத் தொடர்பும்:

குழந்தைகள் பெரியவர்கள் பேசும்போது அதைக் கவனித்து மொழியைக் கற்றுக்கொண்டு, தாமும் பேச முயல்வார்கள். ஆனால், கார்ட்டூன் பார்க்கும்போது, குழந்தை திரையைத் திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்குமே தவிர, அது மற்றவர்களுடன் பேச முற்படாது. சில குழந்தைகள் இந்தத் தொடரில் வரும் பாடல்களை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவிப்பார்கள்.

தள்ளிப்போகும் திருமணங்கள்: அழிவின் விளிம்பில் குடும்ப முறை!

ஆனால், அவர்கள் பேசும் வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் அவர்களுக்குத் தெரியாது. இதனால், அவர்களின் இயல்பான பேச்சுத் திறன் மற்றும் சமூகத்தோடு பழகும் திறன் பெருமளவில் தாமதப்படுகிறது.

தூக்கக் கோளாறுகள்:

இரவு நேரத்தில் படுக்கைக்குச் செல்லும் முன் மொபைல் மற்றும் டிவி பார்க்கும்போது, அதன் திரைகளில் இருந்து வெளிவரும் 'நீல ஒளி' , குழந்தைகளின் உடம்பில் தூக்கத்திற்குத் தேவையான 'மெலடோனின்' என்னும் ஹார்மோன் சுரப்பதைத் தடுத்துவிடுகிறது. இதனால் மூளை விழிப்பு நிலையிலேயே இருக்கும். குழந்தைகள் இரவில் சரியாகத் தூங்கமாட்டார்கள்.

பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் திரை நேரமே தரக்கூடாது. அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 30 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கலாம். குழந்தையைத் தனியாக டிவி பார்க்க விடாமல், தாமும் அமர்ந்து, அதில் வரும் வண்ணங்கள் மற்றும் உருவங்களைப் பற்றிப் பேசி, அதை ஒரு கலந்துரையாடலாக மாற்றவேண்டும்.

"அக்கா மாதிரி இரு, அவனைப் பார்!" - பிள்ளைகளின் திறமையை முடக்கும் ஒப்பீடுகளைத் தவிர்ப்பது எப்படி?

கார்ட்டூன்களின் மாயையிலிருந்து உங்கள் குழந்தையை விடுவிப்பதற்கான அறிவியல் பூர்வமான வழிகளை அறிந்துகொள்வதன் மூலம், ஒரு ஆரோக்கியமான மற்றும் சவாலான சூழலில் உங்கள் குழந்தையின் அறிவாற்றலை வளர்க்க முடியும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online