Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வெற்றிக்கு திறமைதான் முக்கியம்னு நினைச்சா... நீங்க ஏமாறுறீங்க! நிஜமான ரகசியம் இதுதான்!

வெற்றிக்கு திறமைதான் முக்கியம்னு நினைச்சா... நீங்க ஏமாறுறீங்க! நிஜமான ரகசியம் இதுதான்!

Kalki Online 20 hrs ago

முன்னொரு காலத்தில், ஓவியங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சக்கரவர்த்தி ஒருவர் ஒரு நாட்டை ஆட்சி செய்து வந்தார்.

தன் முதுமை காலத்தில், நாட்டில் வசிக்கும் ஓவியர்களை எல்லாம் அழைத்து, ஒரு சிறந்த ஓவியத்தை வரையச் செய்து, அதைத் தன் நினைவாக நாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

ஓவியர்கள் ஒன்று கூடிய அவையில் சக்கரவர்த்தி தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்ததோடு, சிறந்த ஓவியத்திற்கு மிகப்பெரிய பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவித்தார்.

அங்கிருந்த ஓவியர்கள் அனைவரும் போட்டிக்குத் தயாராகினர். ஆனால், ஒரே ஒரு ஓவியர் மட்டும் சக்கரவர்த்தியிடம், "நான் ஓவியம் வரைய வேண்டுமெனில் மூன்று ஆண்டுகள் தேவைப்படும். அந்த மூன்று ஆண்டுகளிலும் என்னுடைய ஓவியத்தை யாரும் பார்க்கக் கூடாது. மேலும், ஓவியம் வரைய அரண்மனையிலேயே பெரிய அறை ஒன்றும் வேண்டும்" என நிபந்தனை விதித்தார்.

"மூன்று ஆண்டு காலம் என்பது மிக அதிகம்; அதோடு உங்களுடைய நிபந்தனைகளும் கடினமாக உள்ளன" என்று கூறி, ஓவியரின் கோரிக்கையைச் சக்கரவர்த்தி முதலில் ஏற்க மறுத்துவிட்டார்.

அதனால் அந்த ஓவியரும், "நான் ஓவியப் போட்டியில் பங்கேற்கவில்லை" என்று கூறி அங்கிருந்து கிளம்பினார். அந்த நேரத்தில், ஓவியத்தின் மீது தீராதக் காதல் கொண்ட மன்னர், அவரைத் தடுத்து நிறுத்தி, ஓவியர் கேட்ட அனைத்திற்கும் ஒப்புக்கொண்டு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்.

இந்நிலையில், மற்ற ஓவியர்கள் ஓரிரு நாட்களிலும், சில ஓவியர்கள் ஒரு மாதத்திலும் தங்களது ஓவியங்களை வரைந்து மன்னரிடம் சமர்ப்பித்தார்கள். ஆனால், சக்கரவர்த்திக்கு அவற்றில் எதிலுமே முழுத் திருப்தி ஏற்படவில்லை. நிபந்தனை விதித்த ஓவியரோ, அரண்மனை அறையில் 24 மணி நேரமும் சேவகர்கள் காவல் காக்க, யாரையும் உள்ளே அனுமதிக்காமல் தன்னுடைய பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

மன்னருக்கோ, தாம் இறப்பதற்கு முன்பாக அந்த ஓவியத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. ஒருவழியாக மூன்று ஆண்டுகள் முடிந்ததும், ஓவியத்தைப் பார்க்க வருமாறு சக்கரவர்த்திக்கு அழைப்பு விடுத்தார் அந்த ஓவியர்.

அறைக்குச் சென்று பார்த்தபோது, ஒரு பெரிய சுவரில் மலை சூழ்ந்த காடு, சிறிய ஓடை, நெடிய மரங்கள், ஒற்றையடிப் பாதை என இயற்கை காட்சியை அப்படியே தத்ரூபமாக வரைந்திருந்தார். ஓவியத்தைப் பார்த்த சக்கரவர்த்தி பெருமகிழ்ச்சி அடைந்தார். "இந்த ஒற்றையடிப் பாதை எங்கே செல்கிறது?" என்று ஓவியரிடம் கேட்கும் அளவிற்கு அந்த ஓவியத்திற்குள் மூழ்கி விட்டார்.

ஓவியரும் சக்கரவர்த்தியும் கைகளைப் பிணைத்துக் கொண்டு, "ஒற்றையடிப் பாதை எங்கே செல்கிறது என்பதை இணைந்து காண்போம் வாருங்கள்" என்று கூறி, அந்த ஓவியக் கலைக்குள் தங்களையே கரைத்துக் கொண்டார்கள். இது ஒரு புகழ்பெற்ற சீன தேசத்துக் கதை.

அந்த ஓவியர் தான் செய்த பணியில் தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, ஓர் அற்புதமான ஓவியத்தை வரைந்திருந்தார். பார்ப்பவர்களைத் தன் வசப்படுத்தி, அதில் கரையச் செய்வதுதான் ஒரு கலையின் அல்லது தொழிலின் உண்மையான வெற்றி!

அப்படியாக, நாம் செய்கின்ற எந்தவொரு தொழிலிலும் முழுமையான அர்ப்பணிப்போடும், விரும்பி அனுபவித்தும் வேலை செய்யும்போது, அத்தொழில் மிகச் சிறப்பான நிலையை அடைவதோடு, நமக்கு முழுமையான பலனையும்(chinese-emperor-painter-story) தேடித்தரும். அதுவே உண்மையான வெற்றியாகும்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online