விக்கிரமாதித்தன் எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும், தன் புத்திசாலித்தனத்தால் வேதாளத்தின் கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லிவிடுவார்.
இந்தக் கதையில், மூன்று மனைவிகளில் யார் மிகவும் மென்மையானவர் என்று வேதாளம் ஒரு விசித்திரமான கேள்வியைக் கேட்கிறது. விக்கிரமாதித்தன் எப்படிப் பதிலளிக்கிறார் என்று பார்க்கலாம் வாருங்கள்!
வில்லி நகரத்தை ஆண்டு வந்த வமிசகேது என்ற அரசனுக்கு மூன்று மனைவிகள். அவர்கள்: மிருங்காவதி, சந்தனக்குயத்தி, தாரகவல்லி. இந்த மூவருமே நல்ல அழகுடையவர்கள்; அதோடு, மிக மெலிந்த தேகம் கொண்டவர்கள்.
ஒரு நாள், அரசன் தன் மனைவி தாரகவல்லியுடன் பூந்தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பறந்து வந்த ஒரு வண்டு, தாரகவல்லி கூந்தலில் சூடியிருந்த மலரில் வந்து அமர்ந்தது. மென்மையான உடல்வாகு அமைந்த தாரகவல்லி, அதைத் தாங்க முடியாமல், அப்படியே மயங்கி விழுந்தாள். உடனே அந்தப்புரத் தோழிகள் வந்து முகத்தில் தண்ணீர் தெளித்ததால், மயக்கம் நீங்கியது.
சிறுவர் சிறுகதை: "ஆக்ராவில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?" அக்பர் கேள்விக்கு பீர்பால் சொன்ன கணக்கு!இன்னொரு நாள், மன்னர் சந்தனக்குயத்தியோடு ஆற்றங்கரையில் நடந்து வந்தபோது, மேகம் விலகி நிலவொளி அவள் மீது பட்டது. நிலவொளி பட்டதும், சந்தனக்குயத்தியின் பொன் மேனி கொப்பளித்தது! "இவ்வளவு மென்மையான தேகமா?" என அரசன் வியந்தார்.
மறுநாள், அரசன் தன் மனைவி மிருங்காவதியோடு அரண்மனையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, தூரத்தில் எங்கேயோ உலக்கையால் இடிக்கும் சத்தம் கேட்டது. அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், மிருங்காவதியின் விரல்கள் சிவந்து புண்ணாகின.
கதையைச் சொல்லி முடித்த வேதாளம், விக்கிரமாதித்தனிடம் "மன்னரின் மூன்று மனைவிகளுள், மென்மையான உருவ அமைப்பைக் கொண்ட பெண் யார்?" எனக் கேட்டது
விக்கிரமாதித்தனின் பதில்:
"தாரகவல்லியின் கூந்தலில் வண்டு அமர்ந்ததால் மயங்கி விழுந்தாள். சந்தனக்குயத்தியின் உடல்மீது நிலவொளி பட்டு கொப்பளித்தது. ஆனால், மிருங்காவதியின் உடல்மீது எதுவும் படாமல், தூரத்தில் உலக்கை இடித்த சத்தத்தினால் மட்டுமே கைவிரல்கள் புண்ணாகிப் போயின. ஆகவே, இந்த மூவரில் மிருங்காவதிதான் மிகவும் மென்மை வாய்ந்தவளாகக் கருதலாம்!" என்றார்.
விக்கிரமாதித்தன் இப்படிச் சொன்னதும், வழக்கம் போல வேதாளம் அங்கிருந்து சிரித்துக்கொண்டே கிளம்பியது.
சிறுவர் சிறுகதை: அடுத்தவர் பொருளைத் தொடாதே!
