Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விமர்சனம்: எக்ஸாம் - நம்பமுடியாத திரைக் கதையால் ஜஸ்ட் பாஸ் மட்டுமே!

விமர்சனம்: எக்ஸாம் - நம்பமுடியாத திரைக் கதையால் ஜஸ்ட் பாஸ் மட்டுமே!

Kalki Online 1 week ago

ரசுப் பணி நுழைவுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள். அதில் ஈடுபடும் கும்பல்கள். ஆதாயமடையும் மக்கள்.

தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாழ்நாள் வாய்ப்புகளை இழக்கும் அப்பாவி பொதுமக்கள். இதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள வெப் தொடர் தான் எக்ஸாம் (Exam).

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இந்தத் தொடருக்கு புஷ்கர் காயத்ரி கிரியேட்டிவ் ப்ரொடியூசர்களாக கொண்டு வந்திருக்கின்றனர். இவர்களுடைய முந்தைய தொடர்கள் பெற்ற வரவேற்பு காரணமாக இதற்கும் ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. பாசானதா இல்லையா இந்த எக்ஸாம்.

உதகம் மலை என்ற ஊருக்கு டி எஸ் பியாக மாற்றலாகி வருகிறார் மரமல்லி (என்ன பெயர் இது) அவரை, வரும் வழியில் கடத்தி அந்த இடத்துக்குத் தானே டி எஸ் பி யாக போகிறார் ஜான்சி (துஷாரா விஜயன்). இதற்கு உதவுபவர் அப்பாஸ். அந்த ஊரில் நடக்க இருக்கும் ஓர் அரசுப் பணித் தேர்வின் போது தவறு நடக்கப் போகிறது. அதைத் தடுக்கவே இந்த ஆள் மாறாட்டம் என்று போகப் போகத் தெரிய வருகிறது. இவர் யார். இவருடைய பின் கதை என்ன. யார் இந்தச் சதிவேலையில் ஈடுபடுகிறார்கள்? கடத்தப்பட்ட மரமல்லி (அதிதி பாலன்) நிலை என்ன இதெல்லாம் தான் எக்ஸாம்.

இது போன்ற தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து நாம் படித்திருக்கிறோம் அல்லது கேள்விப்பட்டிருக்கிறோம். அதில் சற்று நுழைந்து ஆராய்ந்து இதை உருவாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறது இந்தக் குழு. ஆனால் அதில் முழுமையாக வென்றிருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இது போன்ற தொடர்களில் ஆரம்பத்தில் தொடருக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு விஷயம் நடக்கும். இதிலும் அதே போல ஒன்று, மீன்பிடித் தொழில் செய்யும் ஒரு பெண்மணி. நன்றாகப் படித்து மாவட்ட அளவில் ரேங்க் எடுத்த தன்னுடைய மகன் அரசுப் பணியில் சேரவேண்டும் என்பதே லட்சியம். மீன் வாடை அவன் மேல் விழுந்து விடக் கூடாது என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறார். எதிர்பாராத சூழலில் அவர் மரணமடைகிறார். அந்தப் பையனுக்கு என்ன ஆனது. மரமல்லி, ஜான்சி, இவன் மூவரும் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் என்ன நடக்கிறது. இதைத் தான் ஏழு எபிசோட்களில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சற்குணம். இவருடைய பெயரும் இந்தத் தொடரைப் பார்க்க வைத்ததில் ஒரு காரணம்.

ஒரு முக்கிய சமூகப் பிரச்சனையைத் தொட்டு எடுக்க முயன்றது சரி. ஆனால் அந்த வலுவான கரு மட்டுமே போதுமா. திரைக்கதையில் மொத்தமாகக் கோட்டை விட்டு விட்டு என்ன செய்வது. ஒரு டி எஸ் பி யைக் கடத்தி வைத்து அந்த இடத்துக்குத் தான் செல்வது என்ற அந்தப் புள்ளியிலேயே அடிபட்டுப் போகிறது நம்பகத் தன்மை. ஒரு காவல்துறையை அவ்வளவு எளிதாக ஏமாற்றி விட முடியுமா. அதுவும் அவ்வளவு பெரிய பதவிக்கு மாற்றலாகி வரும் ஒரு பெண்ணாக. உயரதிகாரிகளுக்குத் தெரியாதா. உடன் பணியாற்றுபவர்கள், குடும்பம் என அனைவரையுமே ஏமாற்றி விட முடியுமா. இப்படிப் பல கேள்விகள். இருவரையும் தெரிந்தவர்கள் அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார்களாம். ஆனாலும் இந்த ஆள் மாறாட்டம் நடக்கிறதாம்.

முதல் எபிசோடிலேயே ஆரம்பிக்கும் இந்தக் குழப்பம் ஒரு மனத்தடையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் யார் எப்பொழுது மாட்டுவார்களோ என்ற பதற்றம் இல்லாமல் என்னடா இவ்வளவு பலவீனமாக யோசித்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதிலும் போகப் போக ஜான்சி உண்மையான டி எஸ் பி இல்லை என்று தெரிந்தும் சில போலீஸ்காரர்கள் மேடம் என்று அழைப்பதும் அவரது ஆணைகளுக்குக் கட்டுப்படுவதும், ரிப்போர்ட் செய்வதும் அய்யோடா என்று தான் இருக்கிறது. இதற்கெல்லாம் விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் சுத்தமாக நம்பும்படி இல்லை.

விமர்சனம்: மோகினியாட்டம் - சிரிக்கச் சிரிக்க ஒரு மர்டர் மிஸ்டரி!

இதற்கு உதவும் பாத்திரத்தில் வரும் அப்பாஸ் பாத்திரத்திலும் ஒரு தெளிவில்லை. அவர் ஏன் அதைச் செய்கிறார். இவர் தலைமையில் உருவான குழுவில் இருக்கும் நபர்கள் யார் அவர்களது பின்னணி என்ன என்று எதையுமே இவர்கள் தொடவில்லை. பரபரவென்று நகர்ந்தால் போதும் பார்ப்பவர்கள் யோசிக்க மாட்டார்கள் என்று நினைத்து விட்டார்கள் போல.

ஜான்சியாக துஷாரா விஜயன். நல்ல வலுவான பாத்திரம். ஆனால் அதைத் தாங்குமாறு அவர் செய்திருக்கிறாரா என்பது கேள்விக்குறி. பிளாஷ்பாக்கில் கொஞ்சம் பரவாயில்லை. சண்டைப் பயிற்சி செய்வதும், துப்பாக்கிச் சுடும் பயிற்சிகள் மேற்கொள்வதும் சரி. ஆனால் டி எஸ் பியாகப் பொருந்தவே இல்லை. எல்லா இடத்திலும் ஒரு கான்ஸ்டபிள் போலத் தானே சென்று அறிமுகப் படுத்திக் கொள்கிறார். பிரச்சனை என்றால் அவருடைய உடல் மொழியிலேயே காட்டிக் கொடுத்து விடுவார் போலத் தான் இருந்தது.

அதிதி பாலன் மரமல்லி என்ற பாத்திரத்தில் வீணடிக்கப் பட்டிருக்கிறார். பாதி நேரம் கட்டிப் போடப்பட்டு இருக்கிறார். இவரும் ஜான்சியும் சந்திக்கும் ஆரம்பக் காட்சி அபத்தம்.

சட்டென்று மாறுது வானிலை திரைவிமர்சனம்!

தொடரின் வில்லனாக வரும் நபர் நல்ல தேர்வாக இருந்தாலும் நடிப்பு வரவே இல்லை. மிகச் சாதாரணமான இடத்திலிருந்து அவர் எப்படி அந்த இடத்துக்கு வளர்ந்தார் என்பதும் சரியாக விளக்கப் படவில்லை. இந்த கட்டமைப்பு எப்படி உருவானது. வளர்ந்தது. என்ன பலன் என்றெல்லாம் வசனங்களாகக் கடத்தப் படுகிறது. என்னதான் சிறு வயதில் கஷ்டப்பட்டு இருந்தாலும் இவ்வளவு பித்தலாட்டம் செய்யும் ஒரு நபர் மேல் எப்படிப் பரிதாபம் வரும்.

இயக்கம், ஒளிப்பதிவு , பின்னணி இசை எல்லாம் சராசரியாகத் தான் இருக்கிறது. பாடல்கள் எல்லாம் ஓட்டி விடும் அளவில் தான் வரிகளும் இசையும் இருந்தது.

எல்லாம் கிடக்க இது போன்ற தொடர்கள் ஒரு சீசனோடு முடிந்ததாக வரலாறு உண்டா. கடைசிக் காட்சியில் வரும் அலைபேசி அழைப்பு அடுத்த தேர்வுக்காகக் காத்திருங்கள் என்று சொல்கிறது. ஆனால் போதுண்டா என்று நாம் தொலைக்காட்சியை அணைக்கிறோம்.

சமூகத்துக்கு அவசியம் சொல்ல வேண்டிய ஒரு கருப்பொருளை எடுத்தது எல்லாம் சரி. ஆனால் அதில் முழுதும் நுழைந்து வெளியே வராமல் ஆள் மாறாட்டம், காவல் துறை அட்டூழியம், ஊழல் என்று சுற்றி வரும் திரைக்கதை ஓட்டையால் ஜஸ்ட் பாஸ் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online