Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விமர்சனம்: கருப்பு - சூர்யாவின் ஆக்க்ஷன் அவதாரம்!

விமர்சனம்: கருப்பு - சூர்யாவின் ஆக்க்ஷன் அவதாரம்!

Kalki Online 1 week ago

ருப்பு கோட்டு அணிந்த ஒரு தீய வக்கீல். தன்னுடைய சுயநலத்துக்காக எது வேண்டுமெனில் செய்வான். நீதிமன்றமும் நீதிபதிகளும் அமைச்சர்களும் அவன் கையில்.

அவனிடமிருந்து மக்களைக் காப்பாற்ற இறங்கி வந்து போராடும் கடவுள் பற்றிய கதை தான் கருப்பு.

ஆர்.ஜே பாலாஜி சூர்யாவுடன் இணைகிறார் என்ற அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ஒரு விதமான எதிர்பார்ப்பு கிளம்பி இருந்தது. ஒரு பெரிய ஹீரோ கிடைக்கும் பொழுது அவரால் அதைக் கையாள முடியுமா என்ற கேள்வி எழுந்தது. தொடர் தாமதங்களும், அப்டேட்களே அதிகம் கிடையாது. திரிஷாவுடன் சண்டை. தயாரிப்பாளர்களுடன் மோதல். படம் வெளியாவதில் எழுந்த சிக்கல் எனக் கருப்புக்கே பல சிக்கல். எப்படி இருக்கிறது என்ன தான் சொல்கிறது கருப்பு.

படத்தில் வில்லனாக பேபி கண்ணன் என்ற பாத்திரத்தில் பாலாஜி. முதலில் சற்று வித்தியாசமாகத் தோன்றினாலும் ஓரளவு அதில் போகப்போகத் தேறிச் சமாளித்து விட்டார். சூர்யா போன்ற ஒரு நாயகன் முன் நின்று போராட வேண்டும். சண்டையில் ஜெயிக்க முடியாவிட்டாலும் நடிப்பில் ஈடு கொடுக்க வேண்டுமே. அதைச் செய்து முடிக்கிறார் பாலாஜி.

முதல் அரை மணி நேரம் இவரைச் சுற்றியே நகர்கிறது. நாயகன் சூர்யா வருவதாகத் தெரியவில்லை. அப்படியொரு வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கே சூர்யாவுக்கு ஒரு பாராட்டு. ஆனால் வந்த பிறகு ஒவ்வொரு காட்சியிலும் நின்று விளையாடுகிறார். சாதாரணமாகவே கருப்பு உள்ளே ஏறினார் போலத் தான் பல படங்களில் நடிப்பார். முறைப்பும், அடியும், உடல் மொழியும். இதில் கேட்க வேண்டுமா, அதகளம் செய்கிறார்.

தன்னுடைய மகளின் வைத்தியத்துக்காகச் சென்னை வருகிறார் இந்திரன்ஸ். அதற்காக அவர் வைத்திருந்த நகைகளை ரயில் நிலயத்தில் கொள்ளையடித்து விடுகின்றனர். அதைக் காவல் நிலயத்திலிருந்தும் நீதி மன்றத்திலிருந்தும் மீட்க வேண்டும். அதற்காக உள்ளே நுழைகிறது பாலாஜியின் குழு. அனைவரையும் கையில் போட்டுக் கொண்டு இவர்கள் எப்படி ஏமாற்றுகிறார்கள். அந்தப் பெண்ணுக்கு என்ன ஆனது இதெல்லாம் தான் முதல் பாதி.

அதே நீதிமன்றத்தில் ஒரு வக்கீலாக திரிஷா. அழகாக இருக்கிறார். என்ன தேவையோ அப்படி நடித்து விட்டுப் போகிறார். இவருக்கும் சூர்யாவுக்குமான காட்சிகளும் ஜாலியாக அமைந்திருக்கிறது. அதுவும் கடவுள் என்று தெரிந்ததும் அதைச் சொல்ல முடியாமல் இவர் காட்டும் கெத்தும் தைரியமும் கூல்.

இடைவேளை வரை சென்ட்டிமென்ட், உருக்கமான காட்சிகள் என்று நகரும் படம் இடைவேளைக்குப் பிறகு ஆக்ஷன் மோடுக்கு மாறுகிறது. என்ன தான் சின்ன சின்ன சர்ப்ரைஸ்கள் இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் கதை நகராமல் சுற்றுகிறது. ஒரே மாதிரியான காட்சிகள், வில்லன்கள் என்னடா நகர மாட்டேங்குதே என்று தோன்ற ஆரம்பிக்கும் போது கிளைமாக்ஸ். அது மற்றொரு விதமான தாண்டவம். கிட்டத்தட்ட காந்தாராவை நினைவூட்டும் கிளைமாக்ஸ். ஆனால் அதை எடுத்திருக்கும் விதம், சூர்யாவின் நடிப்பு, ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள் எல்லாம் அட்டகாசம்.

படத்தின் இன்னொரு ஹீரோ சாய் அபயங்கர் தான். பின்னணி இசையில் படத்தை அடுத்த தளத்துக்கு நகர்த்துவதில் இவர் பங்கு மிக முக்கியம். என்ன பாடல் வரிகள் தான் எவ்வளவு உன்னிப்பாகக் கேட்டாலும் காதில் விழவில்லை. ஆனால் ரசிகர்களுக்கு அதெல்லாம் எதற்கு மாஸ் எலிவேஷன் இருக்கிறதா. கைதட்ட அது போதுமே.

வெகு நாள்களுக்குப் பிறகு சூர்யா. இயல்பாக அலட்டாமல் வந்து போகிறார். கருப்பாக மாறும் போது அப்படியே உருமாறிப் போகிறார். அவர் அடிக்கும் அடிகள் நம்பும்படி தான் இருக்கின்றன. பாட்ஷா, லியோ, வில்லன் என்று வஞ்சனை இல்லாமல் எல்லா ரெஃபரென்ஸ் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்று வைத்திருக்கிறார்கள். அதை சூர்யாவும் ஏற்றுக் கொண்டது அவருடைய பெருந்தன்மை.

விமர்சனம்: அதிரடி (2026) - மலையாளம் - காமெடி டிராமா!

எல்லாம் நல்ல படியாக முடிந்து விட்டதே அப்படி முடியக் கூடாதே என்று நினைக்கும் பொழுது ஒரு டுவிஸ்டுடன் அடுத்த பாகத்துக்கு லீட் கொடுத்து முடிக்கிறார்கள்.

படத்தின் பிரச்சனை என்றால் ஒரே விஷயம். கடவுள் இறங்கிப் போராடும் பொழுது எந்தப் பிரச்சனையும் பெரிதாகத் தோன்றாது. நாயகனே தோற்கமாட்டான் என்று பார்த்துப் பழகிய நமக்குக் கருப்புக்கு ஏதாவது வில்லங்கம் வரும் என்று தோன்றுமா? அது தான் பலமும் பலவீனமும். என்ன தான் ஆர்.ஜே பாலாஜி வில்லனாக நடிக்கப் பார்த்தாலும் அவரைப் பார்க்கும் பொழுது ஒரு பயமோ பதற்றமோ வருவதே இல்லை.

நட்டி, வேல ராமமூர்த்தி, இந்திரன்ஸ், ஷிவதா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்திரன்ஸ் தன்னுடைய பண்பட்ட நடிப்பால் கவர்வதோடு ஓரிடத்தில் கலங்கவும் வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் விஷ்ணுவும் எடிட்டர் கலைவாணனும் ஆக்ஷன் இயக்குநர் விக்ரம் மொரும் இணைந்து சண்டைக்காட்சிகளில் விளையாண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக இப்படி ஒரு சண்டைப் படத்தை பாலாஜியிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இண்டர்வெல் பிளாக், ஹைவேசில் நடக்கும் கார் துரத்தல், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் எல்லாம் பார்க்கப் பரபரவென்று இருக்கின்றன.

அதுவும் தன்னைத் தாக்க வருபவன் கையை பற்ற வைத்து தீபாராதனை காட்டி அதிலேயே சுருட்டைப் பற்ற வைப்பது போன்ற மாஸ் காட்சிகள் எல்லாம் அடேங்கப்பா ரகம்.

விமர்சனம்: மை டியரஸ்ட் அஸ்ஸாஸின் - ஊறும் பிளட் இல்லை, இது ஆரம் பிளட்டுக்கான துரத்தல்!

மூக்குத்தி அம்மனில் நயன்தாராவை வைத்து ஒரு ஃபேண்டஸி படத்தைக் கொடுத்த பாலாஜி இதில் கருப்பசாமியை வைத்து இன்னொரு ஃபேண்டஸி ஆக்ஷன் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார். அதில் ஓரளவு வென்றும் இருக்கிறார். தானே வில்லனாக நடிக்காமல் இன்னும் கொஞ்சம் முரட்டு தனமான ஒரு நடிகரைப் போட்டிருந்தால் இந்த மோதல்கள் இன்னும் கொஞ்சம் பலமாகச் சுவாரசியமாக நம்பும்படி இருந்திருக்கும் என்றே கடைசி வரை தோன்றியது.

மற்றபடி கோடை விடுமுறையைக் குடும்பத்துடன் திரையரங்கில் கொண்டாடத் தகுந்த ஒரு படம் தான் கருப்பு. தென் மாவட்டங்களில் குறிப்பாக பி சி சென்டர்களில் (இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை) நல்ல வரவேற்பைப் பெரும் என்று நம்பலாம். மக்கள் சாமியாடினார்கள், தீபாராதனை காட்டினார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online