Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விமர்சனம்: த்ரிஷ்யம் 3 (2026) - மலையாளம் - க்ரைம் திரில்லர்!

விமர்சனம்: த்ரிஷ்யம் 3 (2026) - மலையாளம் - க்ரைம் திரில்லர்!

Kalki Online 4 days ago

ஜீத்து ஜோசப்பின் த்ரிஷ்யம் 2013ம் ஆண்டு வெளிவந்து கேரள சினிமா உலகையே ஒரு புரட்டு புரட்டியது. இதற்கும் முன்பே பல க்ரைம் திரில்லர் படங்களை அவர் இயக்கி இருந்தாலும் இது தான் அவரது மாஸ்டர் பீஸ் என கொண்டாடப்பட்டது.

தமிழில் கமல் நடிக்க பாபநாசம் என்று இங்கும் வெளியாகி ஹிட் அடித்தது.

2021ம் ஆண்டு இதன் இரண்டாம் பாகம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது. கொரோனா டைம் தியேட்டர் ரிலீஸ் சாத்தியம் இல்லை என்பதால் பெரிய வசூல் வாய்ப்பை இழந்த வெற்றிப்படம். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நல்ல விறுவிறுப்பு.

இப்போது இதன் மூன்றாம் பாகம் வெளியாகி இருக்கிறது. தமிழ் டப்பிங்கில் தமிழகத்தியேட்டர்களில் வெளியான இந்தப்படம் முதல் பாகம், இரண்டாம் பாகம் அளவு ஹிட்டா? இல்லையா?என்பதைப்பார்ப்போம்.

முந்தைய இரு பாகங்களைப் பார்க்காதவர்களுக்கும் புரியும் வண்ணம் முதல் இரு பாகங்களின் கதை சுருக்கத்தை ஒரு ரீ கேப் ஆக 5 நிமிடங்கள் காட்டுகிறார்கள்.

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் ஜார்ஜ் குட்டி ஒரு சினிமா ஆர்வலர் என்பதால் கதாசிரியர் ஆகவும், தயாரிபாளர் ஆகவும் இருந்து ஒரு சொந்தப்படம் தயாரிக்கிறார். தனது மூத்த மகளுக்குத் திருமணம் செய்து வைக்க முயல்கிறார். ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போகிறது.

நாயகனால் தன் போலீஸ் வேலையை இழந்த ஒருவர். தனக்கு ஏற்பட்ட இழப்புக்குப் பழி வாங்க சபதம் எடுக்கிறார். அவரால் தன் குடும்பத்துக்கு ஆபத்து வரும் என்பதை நாயகன் உணர்கிறார். வில்லனின் எண்ணம் நிறைவேறியதா? நாயகன் எப்படி வெற்றி பெற்றான் என்பது மீதித் திரைக்கதை.

நாயகன் ஆக கம்ப்ளீட் ஆக்டர் மோகன் லால் நடித்திருக்கிறார். முதல் இரு பாகங்களிலும் அதி புத்திசாலியாகக் காட்டப்பட்ட இவரது கேரக்டர் டிசைன் இதில் குற்ற உணர்ச்சி மிக்கவர் ஆக வடிவமைக்கப் பட்டிருப்பது புதுமை.

நாயகி ஆக மீனா பாத்திரம் அறிந்து நடித்திருந்தாலும் இவருக்கான ஸ்க்ரீன் ஸ்பேஸ் குறைவு.

முதல் இரு பாகங்களில் கமிஷனர் ஆக வந்து கலக்கிய ஆஷா சரத் இதில் இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வருவது ஏமாற்றம்.

நாயகனின் மூத்த மகள் ஆக அன்ஷிபா ஹாசன், இளைய மகள் ஆக எஸ்தர் அனில் இருவரும் சும்மா வந்து போகிறார்கள். நடிக்க அதிக வாய்ப்பில்லை.

வில்லன் ஆக வரும் கலாபவன் ஷஜான், சித்திக், முரளி கோபி மூவர் நடிப்பும் கச்சிதம்.

படத்தில் நடித்த மற்ற அனைவரும் அவரவர்க்குத் தந்த ரோலை சரியாக செய்திருக்கிறார்கள்.

சதீஷ் குரூப்பின் ஒளிப்பதிவு தரம். காட்சிகளை பிரம்மாண்டமாகக் கண் முன் நிறுத்துகிறது. அனில் ஜான்சனின் பின்னணி இசை ஒரு திரில்லர் படத்துக்குத் தேவையான விறுவிறுப்பைப் படம் முழுக்க வழங்கி இருக்கிறது.

வி கே வினாயக்கின் எடிட்டிங்கில் படம் 157 நிமிடங்கள் ஓடுகிறது. முதல் பாதி மிக மிக மெதுவாக நகர்கிறது. கடைசி 30 நிமிடங்கள் தான் செம விறுவிறுப்பு.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஜீத்து ஜோசப்.

சபாஷ் டைரக்டர்

  • க்ளைமாக்ஸ்க்கு முன்பு வரும் படத்தின் கடைசி 30 நிமிடங்கள் பட்டாசான திரைக்கதை. சீட்டின் நுனியில் நம்மை அமர வைக்கும் அபாரமான சஸ்பென்ஸ்.

  • இடைவேளைக்கு முன்பு வரும் அந்த சஸ்பென்ஸ் எலிமெண்ட்.

  • தமிழ் டப்பிங் பர்பெக்ட் ஆக செய்த விதம்.

  • படத்தின் ட்ரெய்லர் கட்டில் எந்த முக்கியக் காட்சியையும் காட்டாமல் ட்ரிம் செய்த சாமார்த்தியம்.

விமர்சனம்: Kartavya (2026) - ஹிந்தி - க்ரைம் ட்ராமா!

லாஜிக் மிஸ்டேக்ஸ்

  • முதல் பாதியில் வரும் அந்த ஒன்றே கால் மணி நேரம் கதைக்குள்ளேயே வராமல் சுற்றி சுற்றி ஒரே இடத்தில் ஜல்லி அடித்த விதம்.

  • முதல் இரு பாகங்களில் இறந்த வருணின் அப்பாவாக வரும் சித்திக்கின் கேரக்டர் டிசைன் ஒரு மாதிரியாகவும், மூன்றாம் பாகத்தில் வேறு மாதிரியாகவும் மாறியது எப்படி?

  • படம் ரொம்பவே நீளம். பல காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன.

  • க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டைப் பார்க்கும் போது ஏதோ ஒரு சாதா மனிதன் கூட இதை செய்ய முடியும், அதி புத்திசாலியான ஜார்ஜ் குட்டியின் ஸ்பெஷல் மூளைக்கு வேலை இல்லை என சொல்லத் தோன்றுகிறது.

அடல்ட் கண்டெண்ட் வார்னிங் - 16+

சிபிஎஸ் பைனல் கமெண்ட் - பொறுமையை சோதிக்கும் முதல் பாதி, கலக்கலான கடைசி 30 நிமிடங்கள், மொத்தத்தில் ஒரு சராசரிப்படம் தான். முதல் பாகம், இரண்டாம் பாகம் அளவு பிரமாதம் எல்லாம் இல்லை.

இந்தப் படத்தின் நான்காம் பாகம் வேறு வருகிறதாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online