Dailyhunt
விண்ணில் கலந்த மின்னல்: 252 முறை பூமியை வலம் வந்த வீராங்கனை!

விண்ணில் கலந்த மின்னல்: 252 முறை பூமியை வலம் வந்த வீராங்கனை!

Kalki Online 1 month ago
 Mangayar malar strip

ஹரியானாவில் கர்னால் என்ற இடத்தில் பிறந்து அமெரிக்காவில் நாஸா அனுப்பிய விண்கலத்தில் முதல் இந்தியப் பெண்மணியாக விண்ணில் பறந்து சாதனை செய்தவர் கல்பனா சாவ்லா.

இரண்டாம் முறை விண்ணில் பறந்து அனைத்து பணிகளையும் முடித்து விட்டு பூமியில் தரை இறங்கும் போது துரதிர்ஷ்டவசமாக அவர் பயணப்பட்ட விண்கலம் கொலம்பியா வெடித்துச் சிதறியது. அதில் இருந்த ஏழு விண்வெளிப் பயணிகளும் மரணமடைந்தனர். விண்ணில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி கல்பனா சாவ்லா!

1962ம் ஆண்டு மார்ச் 17ம் தேதியன்று பிறந்த கல்பனா இளமையிலிருந்தே விண்ணில் மின்னும் தாரகைகளைப் பார்த்து வியந்தவர். 1984ல் ஏரோஸ்பேஸ் எஞ்ஜினியரிங்கில் மேல்நிலைப் படிப்பை பஞ்சாப் எஞ்ஜினியரிங் கல்லூரியில் முடித்த அவர் அமெரிக்கா சென்று கொலொரோடா பல்கலைக்கழகத்தில் பயின்று டாக்டரேட் பட்டம் பெற்றார்.

நாஸா ஆய்வு மையத்தில் வேலை கிடைத்தது. 2000 பேர்கள் விண்ணில் பறக்க விண்ணப்பித்தனர். சிலரே தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கல்பனா சாவ்லா விண்ணில் பறக்கத் தகுதியுள்ளவராக 1994 டிசம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் உயரம் ஐந்து அடி. எடையோ 90 பவுண்டு தான்! கடுமையான பயிற்சிகளை அவர் மேற்கொண்டார்.

அவரது முதல் விண்வெளிப் பயணம் 1997 நவம்பர் 19ம் தேதி நிகழ்ந்தது. எடையற்ற விண்வெளி சூழ்நிலையில் என்னவெல்லாம் நிகழும் என்ற ஆய்வினை மேற்கொண்டு அதை வெற்றிகரமாக முடித்து அவர் டிசம்பர் 5ம் தேதி பூமிக்குத் திரும்பினார். அவர் பறந்த தூரம் 65 லட்சம் மைல்கள். 252 முறை அவர் பூமியை வலம் வந்தார். அவர் விண்ணில் பறந்த நேரம் 376 மணி 34 நிமிடங்கள்!

அடுத்து இன்னொரு பெரிய திட்டம் வகுக்கப்பட்டது. கொலம்பியா STS 107 என்ற விண்கலம் விண்வெளி ஆய்வுக்காக 2003 ஜனவரி மாதம் 16ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. கலத்தில் இருந்த ஏழு பேரில் இருவர் பெண்கள். அதில் ஒருவர் கல்பனா சாவ்லா. 16 நாட்கள் ஆய்வை மேற்கொண்டு பின்னர் பிப்ரவரி முதல் தேதி அன்று பூமியை நோக்கி வந்தது விண்கலம். பூமியிலிருந்து 39 மைல் உயரத்தில் இருந்த விண்கலம் இன்னும் 16 நிமிடங்களில் ஃப்ளோரிடாவில் இறங்கி விடும். அப்போது தான் எதிர்பாராத விதமாக விண்கலம் வெடித்துச் சிதறியது. ஏழு விண்வெளி வீரர்களை இழந்து உலகமே பதறியது.

அவரைப் பற்றிய செய்திகள் வெளி வந்த போது அனைவரும் கண்ணீர் வடித்தனர்.

ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் ஒரு சூரிய அஸ்தமனம்! பூமியின் பேரழகைப் படம்பிடித்த நாசா விண்வெளி வீரர்..!

முதல் பயணத்தின் போது விண்ணிலிருந்து பூமியைப் பார்த்த அவர், "அனைவருமே இங்கிருந்து இப்படி பூமியைப் பார்க்க வேண்டும்" என்ற தனது ஆசையை வெளியிட்டார்.

"உலகமே எனது நாடு" என்ற அவரது பரந்த கொள்கை சங்ககாலப் புலவரான கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உன்னதப் பண்பை நினைவு படுத்தும் ஒன்று.

அவரை கௌரவிக்கும் வண்ணம் இந்தியா தனது சுற்றுச்சுழல் சாடலைட்டுக்கு கல்பனா-1 என்று பெயரிட்டது.

பல நாடுகள் அவரை கௌரவிக்கும் விதமாகத் தபால்தலைகளை வெளியிட்டன. நியூயார்க் நகரின் 74வது வீதி அவர் பெயருக்கு மாற்றப்பட்டது. குறுங்கோளான 51826க்கு அவர் பெயர் இடப்பட்டது.

அமெரிக்க பிரஜையாக ஆன கல்பனா அங்கு ஃப்ளைட் இன்ஸ்ட்ரக்டராக இருந்த ஜீன் பியரி ஹாரிஸனை மணந்து கொண்டார். அவர் ஒரு தீவிர சைவ உணவு விரும்பி. ஏராளமான பெண்கள் விண்வெளித் திட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பது அவரது ஆசை. வெள்ளைப் பட்டினாலான ஒரு கொடியை அவர் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வண்ணம் தன்னுடன் விண்கலத்தில் கொண்டு சென்றார்.

விண்வெளியில் சொத்துரிமை உண்டா? உடைக்கப்படும் விண்வெளி மர்மங்கள்!

அவரைப் பற்றி அவரது சகோதரர் சஞ்சய் சாவ்லா கூறியது இது தான்:

"என்னைப் பொருத்தமட்டில் எனது சகோதரி இறக்கவில்லை. அவள் இறப்பே இல்லாதவள். அப்படித்தானே ஒரு நட்சத்திரம் இருக்கும்? அவள் விண்ணில் நிரந்தரமாக இருக்கும் ஒரு நட்சத்திரம். தனக்குச் சொந்தமான ஒரு இடத்தில் அவள் எப்போதும் இருப்பாள்."

விண்ணில் பறந்த முதல் இந்தியப் பெண்மணியான கல்பனா சாவ்லா அங்கு நிரந்தரமாக இருக்கும் விண்மணி என்பதில் ஐயமென்ன?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online