Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விவாகரத்து வரை செல்ல வேண்டாம்... தினமும் இதைச் செய்தாலே போதும்!

விவாகரத்து வரை செல்ல வேண்டாம்... தினமும் இதைச் செய்தாலே போதும்!

Kalki Online 7 months ago

திருமணம் அல்லது காதல் உறவின் ஆரம்ப நாட்களில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கும் தம்பதியினர், நாட்கள் செல்லச் செல்ல இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு மாறிவிடுகிறார்கள்.

வேலை, குழந்தைகள், குடும்பப் பொறுப்புகள் என ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில், இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கம் குறைந்துவிடுகிறது. ஒரே வீட்டில் வசித்தாலும், ஒரே படுக்கையில் உறங்கினாலும், பல தம்பதிகள் மனதளவில் வெகுதூரத்தில் இருக்கிறார்கள்.

இந்த இடைவெளியைக் குறைக்கவும், உறவைப் புதுப்பிக்கவும் இருவரும் மனம் விட்டுப் பேச வேண்டியது அவசியம். ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொள்வதைத் தாண்டி, உறவின் ஆழத்தை அறியச் சில முக்கியமான விஷயங்களைப் விவாதிக்க வேண்டும்.

தனிமை!

பல வீடுகளில் கணவனும் மனைவியும் அருகருகே அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருப்பார்கள் அல்லது போனை நோண்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களுக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது. இது ஒரு விதமான மனச்சோர்வை உண்டாக்கும். நான் உன்னுடன் இருக்கும்போது கூட நீ தனிமையாக உணர்கிறாயா என்று கேட்பது மிக முக்கியம். ஏனெனில் உடல் ரீதியாகப் பக்கத்தில் இருப்பது மட்டுமே துணையாகாது. மன ரீதியாகத் துணையாக இல்லாதபோது ஏற்படும் அந்த வெறுமை ஆபத்தானது. அந்தத் தனிமையை உணர்கிறார்களா என்பதை அறிந்து அதைச் சரிசெய்வது நெருக்கத்தை அதிகரிக்கும்.

இடைவெளி!

நாம் நம் துணையை முழுமையாகப் புரிந்து வைத்திருக்கிறோம் என்று நாமாகவே நினைத்துக் கொள்வது ஒரு மாயை. உன்னை நான் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய இடம் எது என்று கேட்பது புத்திசாலித்தனம். சில நேரங்களில் கோபத்திலோ அல்லது அழுகையிலோ அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வு களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணத்தை நாம் அறியாமல் இருக்கலாம். எந்த விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை என்பதை வெளிப்படையாகப் பேசும்போது, இருவருக்குள்ளும் இருக்கும் ஈகோ மறைந்து, உண்மையான அன்பு வெளிப்படும்.

Interview: "எனக்கு ரொமான்ஸ் பண்ணணும்னு ஆசை இருக்கு" காளி வெங்கட்டின் ஏக்கம்!

ஏக்கம்!

சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது அல்லது அலுவலக வேலைகளைச் செய்துவிட்டு வருவது எனத் தினமும் பல வேலைகளைச் செய்கிறோம். ஆனால் அதற்கான அங்கீகாரம் கிடைக்காதபோது மனம் சோர்ந்துபோகும். என்னுடைய முயற்சிகளை நான் சரியாகப் பாராட்டுகிறேனா அல்லது இன்னும் உன்னை ஊக்கப்படுத்த வேண்டுமா என்று கேட்பது உறவை வலுப்படுத்தும். ஒரு சிறிய பாராட்டு அல்லது நன்றி சொல்லுதல் கூடத் துணையின் நாள் முழுவதையும் அழகாக்கும் வல்லமை கொண்டது. அங்கீகாரம் இல்லாத உழைப்பு உறவில் விரிசலை உண்டாக்கும்.

புதிய அனுபவங்கள்!

வாழ்க்கை ஒரே மாதிரியாகச் சென்றால் அது சலிப்பைத் தந்துவிடும். நாம் இருவரும் இணைந்து புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமா என்று ஆலோசிப்பது உற்சாகத்தைத் தரும். அது ஒரு சிறிய பயணமாக இருக்கலாம், அல்லது ஒன்றாகச் சமைப்பதாக இருக்கலாம், அல்லது புதிய மொழியைக் கற்பதாக இருக்கலாம். அன்றாட வேலைகளைத் தாண்டி, இருவரும் இணைந்து செய்யும் புதிய விஷயங்கள் பசுமையான நினைவுகளை உருவாக்கும்.

எந்த உறவும் நூறு சதவீதம் முழுமையானது அல்ல. நம் உறவில் ஏதாவது குறை இருப்பதாகத் தோன்றுகிறதா என்று தயங்காமல் கேட்க வேண்டும். சிலருக்கு அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும், சிலருக்குத் தங்களின் தனிப்பட்ட சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எங்கே குறை உள்ளது என்பதைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்வது ஆரோக்கியமான உறவின் அடையாளம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online