இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானத்தில் விமானிகள் தங்களுடைய பயிற்சியை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால் அந்தப் பயிற்சியின்போது சிறிது கவனம் சிதறினாலும் விமானம் விபத்துக்குள்ளாகும் என்பது அனைவரும் அறிந்ததே அப்படி விபத்துக்குள்ளாகும் பொழுது விமானிகளின் உயிருக்கும் ஆபத்து நிகழும். சில நேரங்களில் உயிரிழப்பு கூட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
அதே வகையில் நேற்று, இந்திய கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்திய கடற்படையின் பயிற்சி விமானமான மிக்-29 k ரக விமானத்தில் நேற்று 2 விமானிகள் அரபிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணித்த ஒரு விமானி மீட்கப்பட்டதாகவும், மற்றொரு விமானியை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய கடற்படையின் கோவா தளத்தில் 40 மிக்-29 K ரக போர் விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் INS விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலிலிருந்து இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

