Dailyhunt
ஹார்முஸ் விவகாரம்... 35 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரித்தானியா

ஹார்முஸ் விவகாரம்... 35 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரித்தானியா

Lankasri News 0 months ago

ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவக்கும் வகையில், அமெரிக்காவைத் தவிர்த்து 35 நாடுகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க பிரித்தானியா முடிவெடுத்துள்ளது.

பாதுகாக்கும் பொறுப்பு

ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கான பிரித்தானியா மற்றும் பிரான்சின் கூட்டு முயற்சிகளின் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் வியாழக்கிழமை நடைபெறும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான போரில் கடும் பின்னடைவை எதிர்கொண்ட நிலையில் ஐரோப்பிய நாடுகள் எதுவும் உதவிக்கு முன்வரவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை நிறுத்திக்கொண்டால், அந்த நீரிணையைப் பாதுகாக்கும் பொறுப்பு பிற நாடுகளையே சாரும் என்றும் கூறியுள்ளார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது போர் தொடுக்கும் முன்னர் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து எந்த அச்சுறுத்தலும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வந்தது.


கடைசி கட்டத்தில்... ட்ரம்பிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய ஐரோப்பிய நாடுகளின் முடிவு

ஆனால் வலுக்கட்டாயமாக ஈரான் மீது திணிக்கப்பட்ட போர் காரணமாக தற்போது, அமெரிக்காவிற்கும் அதன் நேச நாடுகளுக்கும் நீரிணையைக் கடக்கும் அனுமதி இல்லை என்றே ஈரான் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், 35 நாடுகளை ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஒருங்கிணைத்துள்ளதாகவும், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்கவும், சிக்கிக்கொண்ட கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவும்,

அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும் மேற்கொள்ளக்கூடிய அனைத்துச் சாத்தியமான இராஜதந்திர மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மதிப்பிடவும் திட்டமிட்டுள்ளதாக கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரு சாத்தியமான திட்டத்தைப் பற்றி விவாதிக்க, இந்நாடுகள் ஒன்றுகூடுவது இதுவே முதல் முறையாக இருக்கும் என பிரித்தானியாவின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கு அழைப்பு

மேலும், போர் நிறுத்தம் ஏற்பட்டதன் பின்னர் ஹார்முஸ் நீரிணையை அணுகக்கூடியதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவது குறித்து ஆராய்வதற்காக, பிரித்தானிய இராணுவத் திட்டமிடுபவர்கள் சந்திப்பு ஒன்றை முன்னெடுப்பார்கள் என்றும் பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

இந்த 35 நாடுகள் கூட்டமைப்பில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் உட்பட, ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, அத்துடன் அவுஸ்திரேலியா, ஜப்பான், கனடா, தென் கொரியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளும் கலந்து கொள்ளும்.

பிரித்தானியா முன்னெடுக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்காவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்ததை அடுத்து சுமார் 1,000 கப்பல்கள் கடக்க முடியாமல் சிக்கியுள்ளது.

போருக்கு முன்பு, உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை எண்ணெய்க் கப்பல்கள் அந்தக் கால்வாய் வழியாகக் கொண்டு சென்றன.

மட்டுமின்றி, உலகின் பாதி உணவு உற்பத்திக்குத் தேவையான உலகளாவிய உரங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே முன்னெடுக்கப்பட்டது.

போர் தொடங்கியதிலிருந்து சுமார் 130 கப்பல்கள் மட்டுமே இந்தக் கடற்பாதையைக் கடந்துள்ளன; இது சாதாரணமாக ஒவ்வொரு நாளும் கடந்துசெல்லும் எண்ணிக்கையாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News