Dailyhunt
15 அடி நீள முதலையின் வயிற்றில் மனித உடல் பாகங்கள்! தென் ஆப்பிரிக்காவில் நடந்த திக் திக் ஹெலிகாப்டர் ஆபரேஷன்!

15 அடி நீள முதலையின் வயிற்றில் மனித உடல் பாகங்கள்! தென் ஆப்பிரிக்காவில் நடந்த திக் திக் ஹெலிகாப்டர் ஆபரேஷன்!

தென் ஆப்பிரிக்காவின் கோமதி ஆற்றில் மாயமான 59 வயது தொழிலதிபர் கேப்ரியல் பாடிஸ்டாவை, 15 அடி நீளமுள்ள ராட்சத முதலை கடித்து விழுங்கிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 500 கிலோ எடை கொண்ட அந்த முதலையை போலீஸார் சுட்டுக்கொன்று, ஹெலிகாப்டர் மூலம் அந்தரத்தில் தொங்கவிட்டபடி அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த முதலையின் வயிற்றைக் கிழித்து சோதனை செய்தபோது, அதன் குடல் பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த உடல் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 28-ம் தேதி கௌடெங் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாடிஸ்டா மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்டது. பலத்த மழையால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டபோது, தரைப்பாலத்தைக் கடக்க முயன்ற அவரது கார் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அடுத்த நாள் கார் மீட்கப்பட்ட நிலையில், அவரைத் தேடும் பணி ஒரு வாரமாகத் தீவிரமாக நடந்தது. அப்போது ஒரு குறிப்பிட்ட முதலையின் வயிறு வழக்கத்திற்கு மாறாகப் பெரிதாக இருப்பதை ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீஸார் கண்டுபிடித்தனர். அந்த முதலை ஹெலிகாப்டர் சத்தத்தைக் கேட்ட பின்பும் அங்கிருந்து நகரவில்லை என்பதால், அது சமீபத்தில் எதையோ சாப்பிட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்த மீட்புப் பணியின்போது கேப்டன் ஜோஹன் பாட்ஜிட்டர் என்ற அதிகாரி தனது உயிரைப் பணையம் வைத்துச் செயல்பட்டார். முதலைகள் நிறைந்த ஆற்றுக்குள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் இறங்கிய அவர், சுடப்பட்ட முதலையின் கழுத்தில் கயிற்றைக் கட்டினார். ஹெலிகாப்டர் அந்த ராட்சத முதலையைத் தூக்கியபோது, அது காற்றில் சுழன்றபடி சென்ற காட்சிகள் காண்போரை அதிர வைத்தன. இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்த கேப்டன் பாட்ஜிட்டரின் வீரத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

முதலையின் வயிற்றைச் சோதனை செய்தபோது, உள்ளே இரண்டு கைகள், விலா எலும்புகள் மற்றும் நெஞ்சுப் பகுதி உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. குறிப்பாக, ஒரு கை விரலில் இருந்த மோதிரத்தை வைத்து அது மாயமான தொழிலதிபர் பாடிஸ்டா தான் என்பதை அதிகாரிகள் ஓரளவுக்கு உறுதி செய்துள்ளனர். அந்தப் பகுதியில் வேறு யாரும் காணாமல் போகவில்லை என்பதால், இறந்தது பாடிஸ்டா தான் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் கர்னல் மாவலா மாசோண்டோ தெரிவித்துள்ளார். இருப்பினும், மோதிரம் மற்றும் டிஎன்ஏ முடிவுகள் வந்த பிறகே இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal