Dailyhunt
பதவியேற்பதற்கு முன்பே விஜய்க்கு வந்த முதல் செக்! மத்திய அரசின் ஒரு மாத கெடு - என்ன செய்யப் போகிறது புதிய தவெக அரசு?

பதவியேற்பதற்கு முன்பே விஜய்க்கு வந்த முதல் செக்! மத்திய அரசின் ஒரு மாத கெடு - என்ன செய்யப் போகிறது புதிய தவெக அரசு?

மிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தயாராகி வரும் வேளையில், மத்திய அரசிடமிருந்து வந்துள்ள ஒரு கடிதம் புதிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் 'பிஎம் ஸ்ரீ' (PM SHRI) திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் ஒரு மாத காலக் கெடு விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பள்ளிகளைத் தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமானால், இந்த ஒப்பந்தம் அவசியம் என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

புதிதாக அமையவுள்ள விஜய் தலைமையிலான அரசுக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் மும்மொழித் திட்டம் (Three-Language Formula) கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை நீண்ட காலமாகக் இருமொழித் திட்டமே (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் அது மொழிக் கொள்கையில் சமரசம் செய்ததாகக் கருதப்படும் என்பதால், விஜய் எடுக்கும் முடிவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மத்திய அரசின் இந்தக் கடிதத்தில், குறிப்பிட்ட காலத்திற்குள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்ற மறைமுக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது 'தமிழ் மொழி மற்றும் மாநில உரிமைகள்' குறித்துப் பேசியுள்ள விஜய், தற்போது மத்திய அரசின் இந்த நெருக்கடியை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது. ஒருபுறம் கல்வி வளர்ச்சிக்கான நிதி தேவை, மறுபுறம் மாநிலத்தின் மொழிக் கொள்கை என விஜய் ஒரு இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் கல்வித் தரம் மற்றும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பிஎம் ஸ்ரீ திட்டம் உதவும் என்று மத்திய அரசு வாதிட்டாலும், அதில் உள்ள இந்தி மொழிக் கொள்கை குறித்த அச்சம் இன்னும் நீடிக்கவே செய்கிறது. கடந்த காலங்களில் நிலவி வந்த அதே மோதல் போக்கை விஜய் கையில் எடுப்பாரா அல்லது மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைபிடித்து நிதியைப் பெறுவாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும். மத்திய அரசு விதித்துள்ள ஒரு மாதக் கெடு முடிவதற்குள் புதிய அரசு பதவியேற்று இதற்கான ஒரு தீர்வை எட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal