Dailyhunt
பவானி சங்கமிக்கப் போவது யாருடன்? கருப்பண்ணனின் ஹாட்ரிக் சாதனையை முறியடிக்குமா திமுக? - அதிரடி கருத்துக் கணிப்பு முடிவுகள்!

பவானி சங்கமிக்கப் போவது யாருடன்? கருப்பண்ணனின் ஹாட்ரிக் சாதனையை முறியடிக்குமா திமுக? - அதிரடி கருத்துக் கணிப்பு முடிவுகள்!

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் பவானி தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது?

என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தின் ஆன்மீக அடையாளமான திருவேணி சங்கமம் மற்றும் புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் கோயில் அமைந்துள்ள பவானி தொகுதி, நெசவு மற்றும் விவசாயம் சார்ந்த ஒரு பாரம்பரியமான தொகுதியாகும். முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ள இந்தத் தொகுதியில், தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து விரிவான தரவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பவானி தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

பவானி தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 11.7 சதவீதம் பேரும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 27.1 சதவீதம் பேரும் உள்ளனர். 41 முதல் 60 வயதுடையவர்கள் 38.3 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 22.7 சதவீதமாகவும் உள்ளனர். சமுதாய ரீதியாகக் கொங்கு வேளாள கவுண்டர்கள் 30 சதவீதம் பேர் முதன்மையாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக வன்னியர்கள் 15 சதவீதம், அருந்ததியர்கள் 14 சதவீதம் மற்றும் நாடார், முதலியார் சமூகத்தினர் தலா 5 சதவீதம் எனப் பரவலாக உள்ளனர். இத்தொகுதி 62 சதவீதம் கிராமப்புறங்களையும், 38 சதவீதம் நகர்ப்புறங்களையும் உள்ளடக்கியது.

இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகப் பவானி ஆற்றில் ஆலைக்கழிவுகள் கலப்பது மற்றும் ஜவுளித் தொழிலால் ஏற்படும் சாயக்கழிவுப் பிரச்சினைகள் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் மக்களுக்குத் தோல் வியாதிகள் மற்றும் புற்றுநோய் அபாயம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தாளவாடி மற்றும் கடம்பூர் மலைப்பகுதிகளில் வாழும் சுமார் 30,000 பழங்குடியின மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்கள் பெரிய குறையாக உள்ளது. வனவிலங்குகள் ஊடுருவலால் ஏற்படும் உயிர்ச்சேதம் மற்றும் பயிர்ச்சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது. மேலும், மலைப்பகுதி விளைபொருட்களுக்கான வாசனைத் திரவிய ஆலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, அதிமுகவின் கே.சி. கருப்பண்ணன் 50 சதவீத வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார். திமுகவின் துரைராஜ் 39.3 சதவீத வாக்குகளைப் பெற்றார். அந்தத் தேர்தலில் அதிமுக 138 பூத்களில் வலுவாகவும், 68 பூத்களில் பலவீனமாகவும் இருந்தது. திமுக 120 பூத்களில் வலுவாகவும், 89 பூத்களில் பலவீனமாகவும் இருந்தது. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 51 சதவீத வாக்குகளைப் பெற்றுப் பெரும் முன்னிலை வகித்தது. அப்போது ஸ்விங் பூத்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக இருந்த நிலையில், அதிமுகவின் பிடி இந்தத் தொகுதியில் மிக வலுவாக இருப்பதை இது காட்டுகிறது.

'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, பவானி தொகுதியில் அதிமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 44 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் திமுக கூட்டணி 32 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்ற அணிகள் இணைந்து சுமார் 15 முதல் 18 சதவீத வாக்குகளைப் பிரிக்கக்கூடும். பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது அதிமுக 210 பூத்களில் மிக வலுவான நிலையில் உள்ளதாகவும், திமுக 100 பூத்களில் மட்டுமே வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்தத் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையேயான வெற்றி வித்தியாசம் சுமார் 12 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று முறை வெற்றி பெற்றுள்ள வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் தொகுதியில் அதிமுகவிற்கு இருக்கும் பாரம்பரிய வாக்கு வங்கி ஆகியவை அவர்களுக்குப் பெரும் சாதகமாக அமையக்கூடும். தற்போதைய நிலவரப்படி பவானி கோட்டையில் இரட்டை இலை சின்னமே மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal