Dailyhunt
ஈரானில் சிக்கிய அமெரிக்கப் படை: 800 கோடி ரூபாய் மதிப்புள்ள போர் விமானத்தை அமெரிக்காவே குண்டுவைத்து தகர்த்தது ஏன்?

ஈரானில் சிக்கிய அமெரிக்கப் படை: 800 கோடி ரூபாய் மதிப்புள்ள போர் விமானத்தை அமெரிக்காவே குண்டுவைத்து தகர்த்தது ஏன்?

ரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலகையே உலுக்கும் ஒரு அதிரடிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான சுமார் 100 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள அதிநவீன போர் விமானத்தை, அமெரிக்க ராணுவமே குண்டுவைத்து தகர்த்துள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு நாடு தனது சொந்த ஆயுதங்களையோ அல்லது சொத்துக்களையோ அழிப்பது அரிது, ஆனால் இந்த முறை அமெரிக்கா மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியைப் பார்த்தால், சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு ஈரானின் மலைப்பகுதிகளில் அமெரிக்காவின் எஃப்-15ஈ ரக போர் விமானம் ஈரான் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த இரண்டு வீரர்களில் ஒருவர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு உயர் அதிகாரி ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் மாயமானார். அவரைத் தேடும் பணியில்அமெரிக்க மற்றும் ஈரான் படைகள் தீவிரமாக ஈடுபட்டன. ஈரான் அந்த வீரரைப் பிடிக்கப் பரிசுத் தொகையை அறிவித்திருந்த நிலையில், அமெரிக்கா தனது வீரரை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற பிடியில் சுமார் 48 மணிநேரம் கடுமையான மீட்புப் பணியைத் தொடங்கியது.

இந்த மீட்புப் பணிக்காக அமெரிக்கா தனது மிகச்சிறந்த கமாண்டோ பிரிவான நேவி சீல் டீம் 6 மற்றும் நூற்றுக்கணக்கான சிறப்புப் படை வீரர்களை ஈரானுக்குள் களமிறக்கியது. இதற்காக எம்.சி-130ஜே கமாண்டோ-2 என்ற அதிநவீன போக்குவரத்து மற்றும் தாக்குதல் விமானங்களைப் பயன்படுத்தியது. இந்த விமானங்கள் எதிரிகளின் எல்லைக்குள் ரகசியமாக நுழைந்து வீரர்களை இறக்கவும், மீட்கவும் பயன்படுத்தப்படுபவை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மீட்புப் பணியின் போது, இந்த 800 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ அல்லது தரை இறங்கும் போது ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவோ மீண்டும் பறக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஈரான் படையினர் மிக அருகில் வந்துவிட்ட சூழலில், அந்த நவீன விமானத்தை அங்கேயே விட்டுச் சென்றால், அதிலுள்ள ரகசியத் தொழில்நுட்பங்கள் ஈரான் கைகளில் கிடைத்துவிடும் என்று அமெரிக்கா அஞ்சியது. குறிப்பாக இந்த விமானத்தில் உள்ள ரேடார் கருவிகள்,சென்சார்கள் மற்றும் தகவல் தொடர்புசாதனங்கள் எதிரி நாடுகளுக்குத் தெரிந்தால், அது அமெரிக்காவின் எதிர்காலப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும். எனவே, தனது வீரரை மீட்ட கையோடு, அந்தப் பகுதியில் இருந்த அதிநவீன விமானத்தையும், ஒரு சிறிய ரக ஹெலிகாப்டரையும் அமெரிக்கப் படைகளே வெடிகுண்டுகள் வைத்துச் சிதறடித்தன.

நிதியிழப்பை விடத் தொழில்நுட்பப் பாதுகாப்பு முக்கியம் என்பதே அமெரிக்காவின் இந்த முடிவுக்குக் காரணம். ஈரானின் நாடாளுமன்றச் சபாநாயகர் இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறுகையில், இது அமெரிக்காவிற்குப் பின்னடைவு என்று கிண்டல் செய்துள்ளார். இருப்பினும், தனது வீரரை உயிருடன் மீட்டதுடன், முக்கியத் தொழில்நுட்பங்கள் எதிரி வசம் சிக்காமல் தடுத்ததில் அமெரிக்கா வெற்றி கண்டுள்ளதாக ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal