Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஷாருக்கான் மேனேஜருக்கே.. 3 சொகுசு வீடுகள்! தலைசுற்ற வைக்கும் வசதிகள்!

ஷாருக்கான் மேனேஜருக்கே.. 3 சொகுசு வீடுகள்! தலைசுற்ற வைக்கும் வசதிகள்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் நீண்டகால மேனேஜராக பணியாற்றி வரும் பூஜா தத்லானி, மும்பையின் மிக விலையுயர்ந்த பகுதியான பாந்த்ராவில் சுமார் 38.21 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று சொகுசு அப்பார்ட்மெண்ட்களை வாங்கியுள்ளார்.

தனது கணவர் ஹிதேஷ் பிரகாஷ் குர்னானி மற்றும் தந்தை மோகன் தத்லானி ஆகியோருடன் இணைந்து இந்த பிரம்மாண்ட முதலீட்டை அவர் செய்துள்ளதாக சொத்து பதிவு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மும்பை கார்ட்டர் ரோட்டில் அமைந்துள்ள 'வருண்' என்ற கட்டிடத்தில் இந்த வீடுகள் வாங்கப்பட்டுள்ளன. தற்போது இந்த கட்டிடம் மறுசீரமைப்பு பணிகளில் உள்ள நிலையில், ஒரு உயரமான தளத்தில் இந்த மூன்று வீடுகளையும் அவர் வாங்கியுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின்படி, பூஜா தத்லானி, அவரது கணவர் மற்றும் தந்தை ஆகிய மூவரும் தலா ஒரு வீட்டை வாங்கியுள்ளனர். ஒவ்வொரு வீடும் தலா 1,511 சதுர அடி பரப்பளவும், அதனுடன் 81 சதுர அடி பால்கனியும் கொண்டது. மொத்தமாக இந்த மூன்று வீடுகளும்சேர்ந்து 4,776 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளன. இந்த சொத்துக்களுக்கான பதிவு கடந்த ஏப்ரல் 21, 2026 அன்று நடைபெற்றுள்ளது. இதற்காக மட்டும் சுமார் 2.16 கோடி ரூபாய் முத்திரை வரி மற்றும் 90 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணமாகச் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சொகுசு வீடுகளுடன் சேர்த்து ஆறு கார் பார்க்கிங் வசதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது கட்டுமானப் பணியில் இருக்கும் இந்தக் கட்டிடம், வரும் 2028-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியிருப்புவாசிகளிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோட்டஸ் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான டிரிக்ஷா ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. பழைய 'வருண்' குடியிருப்பு சங்கத்திடம் இருந்து மேம்பாட்டு உரிமைகளைப் பெற்று இந்த புதிய கட்டிடம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மிக முக்கியமான செலிபிரிட்டி மேனேஜர்களில் ஒருவரான பூஜா தத்லானி, கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ஷாருக்கானின் திரைப்படங்கள், விளம்பர ஒப்பந்தங்கள், மக்கள் தொடர்பு மற்றும் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தொடர்பான பிசினஸ் விவகாரங்களை இவரே கவனித்து வருகிறார். ஊடக அறிக்கைகளின்படி, பூஜா தத்லானியின்ஆண்டு வருமானம் மட்டும் 7 கோடி முதல் 9 கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஷாருக்கானிடம் சேருவதற்கு முன்பு தீபிகா படுகோன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கும் இவர் மேனேஜராக இருந்துள்ளார்.

ஷாருக்கான் தற்போது தனது அடுத்த படமான 'கிங்' படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் அவரது மகள் சுஹானா கான், தீபிகா படுகோன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடந்த 2023-ஆம் ஆண்டு பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு மெகா ஹிட் படங்களைக் கொடுத்த ஷாருக்கான், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டின் அசைக்க முடியாத மன்னனாகத் திகழ்ந்து வருகிறார். தனது மேனேஜரின் இந்த பிரம்மாண்ட சொத்து முதலீடு பாலிவுட் வட்டாரத்தில் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal