'ஈரப்பதத்துடன் கூடிய வெப்ப அலைகள்' எப்போது, எங்கு ஆபத்தான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நிர்ணயிப்பதே இந்தியாவின் பருவமழைதான் என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
80 ஆண்டுகளுக்கும் மேலான வானிலைத் தரவுகளைப் பயன்படுத்தி இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்த ஒரே ஒரு வானிலைப் போக்கானது வட இந்தியாவில் ஈரப்பதத்துடன் கூடிய வெப்ப அலையின் அபாயத்தை 125% அதிகரிக்கிறது என்றும், இதன் தாக்கத்தை நான்கு வாரங்கள் முன்னதாகவே கணித்து அறிவிப்புகளை வெளியிட முடியும் எனவும் கண்டறிந்துள்ளனர்.
ஒவ்வொரு கோடையிலும், இந்தியா வறண்ட வெப்பத்தை எதிர்கொள்கிறது. வெப்பநிலை அதிகரிக்கிறது, எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன, மக்களும் வெயிலை எதிர்கொள்ளத் தயாராகின்றனர். ஆனால், இந்தியா எதிர்கொள்ளும் மிகவும் ஆபத்தான வெப்ப அபாயம் கோடையில் வருவதில்லை; அது பருவமழை மேகங்களில் மறைந்திருக்கிறது. அதன் ஈரப்பதமானது, வறண்ட வெப்ப அலையை விட வேகமாக உயிரைப் பறிக்கும் தன்மை உடையது - ஏனெனில் உடலுக்கு அதை எதிர்க்கும் சக்தி இல்லை என்கிறது இந்த ஆய்வு.
உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, வியர்த்தலின் மூலம் உடல் தன்னைக் குளிர்வித்துக் கொள்கிறது. ஆனால் புறச்சூழலில் ஏற்கெனவே ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, உடலிலிருந்து வெளியாகும் வியர்வை ஆவியாக முடியாது. இதனால் உடலில் குளிர்வித்தல் நடக்காது; சில மணி நேரங்களிலேயே இதன் விளைவுகள் மரணத்தை ஏற்படுத்தலாம்.

இதுவரை, பருவமழை காலத்தில் இவ்வானிலைப் போக்கை இயக்குவது எது, எப்போது தாக்கும், அடுத்து எங்கே வரும் என்று யாருக்கும் முழுமையாகப் புரியவில்லை. அதற்கு விடையாக அமைந்துள்ளது Climate Dynamics என்ற ஆய்விதழில் நடப்பாண்டின் தொடக்கத்தில் வெளியான 'Anatomy of moist heatwaves in India during the summer monsoon season' எனும் ஆய்வுக் கட்டுரை.
இங்கிலாந்தில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தில் (University of Reading) உள்ள அறிவியலாளர்கள், இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் (UK) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, இந்தியாவின் பருவமழை காலத்தில் வரும் "ஈரப்பதத்துடன் கூடிய வெப்ப அலைகள்" எவ்வாறு இயங்குகின்றன என்பதை முதல் முறையாக விளக்கியுள்ளனர். அவர்கள் கண்டறிந்த விஷயங்கள் கவலையளிப்பதாக உள்ளன.
1940 - 2023 இடையிலான 80 ஆண்டுகளுக்கும் மேலான வானிலைத் தரவுகளைப் பயன்படுத்தி, Boreal Summer Intraseasonal Oscillation என்ற ஒரு பெரிய அளவிலான வானிலைப் போக்கு வட இந்தியாவில் ஈரப்பதத்துடன் கூடிய வெப்ப அலை நிகழ்வதற்கான வாய்ப்பை இயல்பான அளவை விட 125% அதிகரிக்கும் என்று நிரூபித்துள்ளனர். மேலும் முக்கியமாக, இந்த அமைப்பை இரண்டு முதல் நான்கு வாரங்கள் முன்னதாகவே கணிக்க முடியும் எனவும் கண்டறிந்துள்ளனர். முன்கூட்டியே கணிக்க முடிவதால் பல உயிர்களைக் காக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இது பெரும்பாலான இந்தியர்களுக்குத் தயாராகத் தெரியாத அச்சுறுத்தல் என்கிறார் ஆய்வை வழிநடத்திய முனைவர் அக்சய் டியோரஸ். இந்தியா வறண்ட வெப்பத்தை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதற்கும் ஈரப்பதத்துடன் கூடிய வெப்பத்தை எடுத்துக்கொள்வதற்கும் இடையே உள்ள இடைவெளியே ஒரு ஆபத்தான அம்சம் என்கிறார் அவர். "இந்தியாவில் கொடிய கோடைகாலம் காரணமாக மக்கள் பெரும்பாலும் வறண்ட வெப்ப அலைகளின் தாக்கத்தை அதிகமாக அறிந்திருக்கின்றனர்; ஆனால் ஈரப்பதத்துடன் கூடிய வெப்பத்தின் தாக்கம் குறித்து குறைவாகவே அறிந்துள்ளனர். எனவே அது மிகவும் ஆபத்தானது" என்று அவர் தெரிவித்தார். "வெளிப்புறப் பொதுக் கூட்டங்கள் வெப்பச் சோர்வை ஏற்படுத்துவது நாம் அனைவரும் அறிந்தது. ஈரப்பதத்துடன் கூடிய வெப்ப அலை பற்றிய முன்னறிவிப்பு, கிரிக்கெட் போட்டிகள் மற்றும் பிற பெரிய கூட்டங்கள் போன்ற பொது நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு செயல்பாடுகளை மறுதிட்டமிட, இடைவேளைகளை நீட்டிக்க, மற்றும் பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களைப் பாதுகாக்கும் வகையில் மருத்துவ ஏற்பாடுகளை வலுப்படுத்த உதவலாம்."
இந்த அபாயத்திற்குப் பின்னால் உள்ள அறிவியல் உடலியல் சார்ந்தது. மனித உடல் கிட்டத்தட்ட முழுவதுமாக வியர்வையின் ஆவியாதல் மூலம் தன்னைக் குளிர்விக்கிறது. பருவமழை காலத்தில் இந்தியாவின் பெரும்பகுதியில் உள்ளதுபோல், காற்று ஏற்கெனவே ஈரப்பதத்தால் நிறைந்திருக்கும்போது, அந்த ஆவியாதல் மெதுவாக நடக்கிறது அல்லது முழுவதுமாக நடைபெறாது. இதன் காரணமாக உடலின் வெப்பநிலை உயர்கிறது. வெப்பச் சோர்வும், வாதமும் விரைவாக ஏற்படுகிறது; இது நீடிக்கும் பட்சத்தில் சில மணி நேரங்களில் மரணம் ஏற்படுகிறது. அன்றைய நாளில் பதிவான வெப்பநிலை இயல்பானதாகத் தெரியலாம். ஆனால் காற்றில் அதிக ஈரப்பதம் நிலவுகையில் நாம் உணரக்கூடிய வெப்பநிலை அதிகமாகிறது.
இந்த ஆய்வானது 'wet-bulb temperature' (வெப்பம் மற்றும் ஈரப்பதம் இரண்டின் அடிப்படையிலான வெப்ப அளவீடு) என்பதை முதன்மை அளவீடாகப் பயன்படுத்தியது. இது உடல் தன்னைக் குளிர்விக்கும் திறனை நேரடியாகப் பிரதிபலிக்கிறது. இது வெப்பத்தால் ஏற்படும் மனித உடலியல் அபாயத்தின் மிகவும் துல்லியமான அளவீடு ஆகும்.
பருவமழையின் மறைந்திருக்கும் புவியியல் அபாயம்

இந்த ஆய்வின் மிகவும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு என்னவெனில், ஈரப்பதத்துடன் கூடிய வெப்பத்தை ஏற்படுத்துவதில் மட்டுமின்றி, இந்தியாவில் அது எங்கே மிகவும் ஆபத்தாக இருக்கும் மற்றும் எப்போது தாக்கும் என்பதைத் தீர்மானிப்பதிலும் பருவமழையின் பங்கு உள்ளது என்பதுதான்.
தீவிரமான பருவமழை காலத்தில், மத்திய மற்றும் வட இந்தியாவில், குறிப்பாக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட கங்கைச் சமவெளி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும்போது, அப்பகுதி ஈரப்பத வெப்ப அலைகளின் அதிகரித்த ஆபத்தை எதிர்கொள்கிறது. பருவமழையானது ஒரு காலநிலை அடிப்படையிலான வறண்ட பகுதியை திடீர் தீவிர ஈரப்பதத்தால் நிரப்புகிறது; அருகே மழை பெய்தாலும் கூட ஈரப்பதத்தை உடலியல் ரீதியாக ஆபத்தான அளவுக்குத் தள்ளுகிறது. பருவமழையின் பெரிய அளவிலான ஏற்ற இறக்கத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், வட இந்தியாவில் வெப்ப அலை நிகழ்வு இயல்பான அளவை விட 125% அதிகரிக்கிறது.
பருவமழை இடைவேளைகளில், மழை தணியும்போது, இந்த அபாயம் தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி, குறிப்பாக தமிழ்நாடு உட்பட தீபகற்ப இந்தியா மற்றும் கிழக்குக் கடலோரம் நோக்கி நகர்கிறது. இங்கே, ஆண்டு முழுவதும் ஏற்கெனவே ஈரப்பதம் நிறைந்த சூழல் இருக்கும் நிலையில், மேக மூட்டம் மற்றும் மழை இல்லாமல் இருப்பது மேற்பரப்பு வெப்பத்தை குவியவிடுகிறது. இதனாலும் வெப்ப அலைகள் அதிகரிக்கின்றன.

இந்த ஊசலாட்டம் - தீவிர பருவமழை காலங்களில் வட இந்தியாவிலும், மழைக்கால இடைவேளைகளில் தெற்கு மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளிலும் - 84 ஆண்டுகளுக்கால தரவுகளில் போதுமான நிலைத்தன்மையுடன் திரும்பத் திரும்ப வருகிறது; அது உண்மையிலேயே முன்கணிக்கக்கூடியதாக இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நான்கு வாரங்களுக்கு முன்பான கணிப்பின் பலன்கள்

இந்த வானிலைப் போக்கை இயக்கும் பெரிய அளவிலான அலைவு - Boreal Summer Intraseasonal Oscillation - இரண்டு முதல் நான்கு வாரங்கள் முன்னதாகவே கணிக்க முடியும். அந்த முன்னறிவிப்பு காலத்தில் ஈரப்பத வெப்ப அலைகள் எனும் திடீர் நெருக்கடியை நாம் எதிர்கொள்ளத் தயாராகலாம்.
"எங்கள் ஆராய்ச்சி முதல் முறையாக பருவமழைதான் இந்த ஆபத்தான அபாயம் எங்கே மற்றும் எப்போது உருவாகிறது என்பதற்கான முக்கிய இயக்கி என்று காட்டுகிறது" என்று முனைவர் டியோரஸ் கூறினார். "இந்த பருவமழையின் போக்கினை நாம் சில வாரங்களுக்கு முன்னதாகவே கணிக்க முடியும் என்பதால், மக்களைத் தயார்படுத்தவும் பாதுகாக்கவும் உண்மையான வாய்ப்புகள் கிடைக்கின்றன." ஈரப்பத வெப்ப அலைகளால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் முன்னரே மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். நகர அதிகாரிகள் குளிரூட்டல் மையங்களைத் திறக்கவும், பள்ளி நேரங்களை மாற்றியமைக்கவும் உதவலாம். மின்சார கட்டமைப்பின் அழுத்தத்தை நிர்வகிக்க மின் கட்டமைப்பு ஆபரேட்டர்களுக்கு உதவலாம்" என்று அவர் கூறினார்.
வீடுகள், அலுவலகங்களுக்குள் இருந்து பணியாற்ற வாய்ப்பில்லாதவர்கள்தான் ஈரப்பத வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள். உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரின் வயல் வெளிகளில் பணியாற்றும் விவசாயத் தொழிலாளர்கள், டெல்லி மற்றும் மும்பையின் கட்டுமானத் தொழிலாளர்கள், ஏர்-கண்டிஷனிங் இல்லாத வீடுகளில் வயதானவர்கள், மற்றும் சூரியன் மறைந்த பிறகும் நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைக்கும் கான்கிரீட் நகரங்களின் நகர்ப்புற ஏழைகள் உள்ளிட்ட கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழ் நாட்டின் நிலை

தமிழ் நாடு நீண்ட கடற்கரையைக் கொண்டிருப்பதால் ஆண்டுதோறும் இங்கு ஈரப்பதம் அதிகரித்தேக் காணப்படுகிறது. இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டுவிழா 06.10.2024 அன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் காலை 11 மணி முதல் 1 மணிவரை இந்திய விமானப்படையின் பல்வேறு விமானங்கள் கலந்துகொண்டு சாகச நிகழ்வுகளை நடத்தின. இந்த Airshow வை பார்வையிட மொத்தம் 13 லட்சம் பேர் கூடினர். கடற்கரைக்குச் சென்றவர்களில் வெப்பம் மற்றும் கூட்ட நெரிசலின் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர், 200க்கும் மேற்பட்டோர் மயங்கினர் இந்நிகழ்வானது கோடைகாலம் அல்லாத அக்டோபர் மாதம் நடைபெற்றதுதான் அனைவருக்கும் வியப்பை உண்டாக்கியது.
அன்றைய நாள் சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.3 °C ஆகும். வெய்யிலின் தாக்கம் அதிகம் இருந்ததிற்கு முக்கிய காரணம் Wet Bulb Temperature. அதாவது வெயிலுடன் அதீத ஈரப்பதமும் சேரும்பொழுது அது உடம்பில் வெய்யிலின் தாக்கத்தை அதிகரிக்கிறது. 34°C வெய்யில் அடிக்கும் போது ஈரப்பதம் 70% க்கு மேல் இருந்தால் அது 42°C வெய்யிலுக்கு இணையான தாக்கத்தை உடலில் ஏற்படுத்தும். நாம் நமது செல்போன்களில்/ கணினிகளில் வெப்பநிலை குறித்தத் தகவல்களைப் பார்க்கும்போது. Temp 35°C, Feels like 44°C என்று வருவதைக் கவனித்திருப்போம். Wet Bulb காரணமாகதான் அந்த feels like எனும் உணரக்கூடிய வெப்பநிலை அதிகமாக உள்ளது. Wet Bulb Temperature 32°C இருக்கும்போது ஆரோக்கியமான மனிதர்கள்கூட அந்த வெயிலை 6 மணி நேரம் மேல் தாங்க முடியாது என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஏற்கனவே உடல் பலவீனமானவார்கள் சில மணி நேரத்திலே உயிரிழக்கக் கூடும். எனவே தமிழ் நாட்டுல் ஈரப்பத வெப்பநிலையை எதிர்கொள்ள அரசு தயாராவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இக்கண்டுபிடிப்பிற்குப் பின்னால் உள்ள அறிவியல்
இந்த ஆராய்ச்சியானது ERA5 தரவுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது - European Centre for Medium-Range Weather Forecasts-இன் 1940 முதல் 2023 வரையான உலகளாவிய பகுப்பாய்வு தரவுத்தளம், இப்போது கிடைக்கக்கூடியதில் மிகவும் விரிவான வளிமண்டல பதிவுகளைக் கொண்ட ஒன்று - இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) மழைத் தரவுகளுடன் சேர்த்து 84 ஆண்டுகளில் 261 பருவமழை நிகழ்வுகளையும், 188 மழை இடைவேளை காலங்களையும் ஆய்வுக்குட்படுத்தி, ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னரும் முன்னரும் ஈரப்பத வெப்ப அலை அபாயம் எவ்வாறு உருவானது என்பதை விரிவாக இந்த ஆய்வு கண்காணித்தது.
இந்த ஆய்வு இரண்டு முதன்மையான புள்ளியியல் வடிவங்களை கண்டறிந்தது; அவை சேர்ந்து இந்தியா முழுவதும் ஈரப்பத வெப்ப அலை மாறுபாட்டின் முக்கிய முறைகளை விளக்குகின்றன: ஒன்று ஈரப்பத வெப்ப அலைகள் ஏற்படுமா என்பதைத் தீர்மானிக்கிறது; மற்றொன்று அவை வடமேற்கில் குவியுமா அல்லது மற்ற பகுதிகளில் பரவுமா என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த வானிலைப் போக்கைக் கணக்கில் கொள்வதன் மூலம் ஈரப்பத வெப்பநிலை எனும் அபாயத்தை எதிர்கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இக்கட்டுரை, "Anatomy of moist heatwaves in India during the summer monsoon season," Climate Dynamics-ல் (தொகுதி 64, 2026) வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள்
National Centre for Atmospheric Science மற்றும் Department of Meteorology, University of Reading, UK:
Akshay Deoras, Andrew G. Turner, Ambrogio Volonté, Reinhard K. H. Schiemann, Laura J. Wilcox; University of Leeds, UK: Cathryn E. Birch;
Met Office, UK: Arathy Menon;
Indian Institute of Tropical Meteorology, India: S Lekshmi
16 பிப்ரவரி 2026 அன்று Climate Dynamics, Springer Nature-ல் வெளியிடப்பட்டது.
இச்செய்திக் குறிப்பானது, இந்தியா முழுவதும் காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை அறிவியல் குறித்த விழிப்புணர்வை உருவாக்க Asar Social Impact Advisors Pvt Ltd-ஆல் தொகுக்கப்பட்ட 'Simplifying Science' திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த திட்டம் தீர்வுகளை வலியுறுத்துவதில் கவனம் செலுத்தி, சுற்றுச்சூழல், ஆரோக்கியம் மற்றும் நலனில் காலநிலையின் தாக்கம் பற்றி உரையாட மக்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

