Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"28 ஆண்டு அனுபவம் உள்ள அதிகாரி இப்படி செய்யலாமா?" - ஐபிஎஸ் அருணின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் வேதனை!

"28 ஆண்டு அனுபவம் உள்ள அதிகாரி இப்படி செய்யலாமா?" - ஐபிஎஸ் அருணின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் வேதனை!

Minnambalam 4 days ago

தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் மனைவிக்கு சொந்தமான நிலத்தில் மோசடி நடந்த விவகாரத்தில் கட்டுமான உரிமையாளர் சந்தோஷ் ஷர்மா குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் முன்னாள் சென்னை காவல் ஆணையரும் தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருமான அருண் ஐபிஎஸ் க்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷின் மனைவிக்குச் சொந்தமான இடத்தில் 2.10 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் தருவதாகக் கூறி ரூ.43 கோடி மோசடி செய்யப்பட்டது அம்பலமானது. இந்த இட ஒப்பந்தத்தின்படி கட்டப்படவிருந்த 78 வீடுகளில், 48 வீடுகளை எல்.கே.சுதீஷின் மனைவிக்குத் தெரியாமலேயே, போலி கையெழுத்திட்டு வெளி நபர்களுக்கு கட்டுமான நிறுவன உரிமையாளரான சந்தோஷ் ஷர்மா விற்பனை செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் ஷர்மா, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து, குடியிருப்புப் பகுதிகளை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் ஏமாற்றிய குற்றத்திற்காகக் கடந்த 2025 ஆம் ஆண்டு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது, அவரைத் தடுப்புக் காவலில் (குண்டர் சட்டத்தில்) சிறையில் அடைக்க அன்றைய சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்துச் சந்தோஷ் ஷர்மா மகள் வர்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "2019 முதல் 2023 வரை நடந்த சம்பவம் தொடர்பாக, 2 ஆண்டுகள் தாமதமாகக் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஒரே குற்றச் சம்பவத்திற்காகக் கைதாகி ஜாமீனில் வெளிவந்த நிலையில், பின்னர் மேலும் இரு வழக்குகளைப் பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது சட்டவிரோதம்" என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில், மனுதாரரான சந்தோஷ் ஷர்மா மகள் வர்ஷா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரைக் கவனித்துக் கொள்ளச் சந்தோஷ் ஷர்மாவுக்கு நான்கு வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி அவருடைய மனைவி கல்பனா மற்றொரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, சந்தோஷ் ஷர்மாவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்ட அதிகாரி யார் எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு உத்தரவிட்ட அன்றைய சென்னை கமிஷனரும், தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருமான அருண் ஐபிஎஸ் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த மே 27 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, நீதிமன்றச் சம்மனை வழங்கச் சென்ற நீதிமன்ற அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வைத்த சம்பவத்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமிநாராயணன் அமர்வு, சந்தோஷ் ஷர்மா மீது பாய்ந்த குண்டர் சட்டக் காவலை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஐபிஎஸ் அதிகாரி அருணின் நடவடிக்கைகளுக்கும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், "குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தித் தடுப்புக் காவலில் வைக்கும் அளவுக்கு இந்த வழக்கு ஆபத்தானது அல்ல என்பது அந்த அதிகாரிக்கு நன்றாகவே தெரியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளார். அவர் புதிய அதிகாரி அல்ல; நேரடியாக ஐபிஎஸ் ஆகத் தேர்ச்சி பெற்று 28 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஓர் அதிகாரி இப்படிச் செய்வது, சட்டத்தை அறிந்திருந்தும் வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்த செயலாகவே பார்க்கப்படுகிறது. இது போன்ற குண்டர் சட்ட உத்தரவுகளைப் பிறப்பிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். முன்னதாக சவுக்கு சங்கர், வாராகி போன்றவர்கள் மீதும் இதே பாணியில் வழக்குப்பதிவு செய்திருந்தார்; நீதிமன்றம் அந்த வழக்குகளையும் ரத்து செய்திருந்தது. இந்த விவகாரத்தில் அவர் அளிக்கும் விளக்கங்கள் ஏற்புடையதாக இல்லை.

முன்னதாகச் சி.வி.நரசிம்மன், சி.எல்.ராமகிருஷ்ணன் போன்ற உயர்ந்த நேர்மையும் நற்பெயரும் கொண்ட அதிகாரிகள் பணியாற்றிய துறை இது. அவர்கள் மீது பணிக்காலம் முழுவதும் எந்தவொரு குற்றச்சாட்டும் எழுந்ததில்லை. ஊழல் என்பது சமூகத்திற்கு எதிரான மிகப்பெரிய தீமை; அது நமது சமூகத்தின் அடித்தளத்தையே சிதைத்து வருகிறது. 'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்' என்பதைப் போல, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியில் இருப்பவர்கள் களங்கமற்ற நற்பெயரும், நேர்மையும் கொண்ட தொழில்முறை வல்லுநர்களாக இருக்க வேண்டும்" என தெரிவித்தனர்.

மேலும் சந்தோஷ் ஷர்மா மீது வேறு வழக்குகள் ஏதும் இல்லாதபட்சத்தில், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam