மக்களவைத் தேர்தலுக்கான ஐந்து வாக்குறுதிகளை முதல் கட்டமாக இன்று (மார்ச் 7) காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் பாரத் ஜோடா நியாய பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுடன் சேர்ந்து 5 வாக்குறுதிகளை வெளியிட்டார்.
அப்போது அவர், "நாட்டில் 30 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கணக்கிட்டுள்ளோம். இதை பிரதமர் மோடியும் பாஜக அரசும் நிரப்பவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எங்கள் முதல் வேலையே இந்த 30 லட்சம் பணியிடங்களில் 90 சதவிகிதம் நிரப்புவோம்.
இரண்டாவது, 100 நாள் வேலைத் திட்டத்தைக் கொண்டு வந்தது போல, படித்த இளைஞர்களுக்காக ஒரு திட்டத்தைக் கொண்டு வர உள்ளோம். அனைத்து இளைஞர்களுக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு, தனியார் நிறுவனத்திலோ அல்லது அரசு அலுவலகத்திலோ ஒரு வருடத் தொழில் பயிற்சி ரூபாய் 1 லட்சம் உதவி தொகையுடன் வழங்கப்படும்.
மூன்றாவது, தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தைத் தடுக்க காங்கிரஸ் சட்டம் கொண்டு வரும். அரசு போட்டி தேர்வுகளை அரசு மட்டுமே நடத்தும். அதில் அவுட்சோர்சிங் நடைமுறை இருக்காது.
நான்காவது, சிறு தொழில்களைத் தொடங்க தயாராக இருக்கும் இளைஞர்களுக்கு ஆதரவாக 5000 கோடி ரூபாயில் ஸ்டார்ட் அப் ஃபண்ட் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்படும்.
ஐந்தாவது, கிக் தொழிலாளர்கள் எனப்படும் உணவு டெலிவரி உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க நாடு முழுவதும் சட்டம் இயற்றப்படும்" என்று ஐந்து வாக்குறுதிகளை அறிவித்தார்.
பிரியா
'அப்பாவாக' புரோமோஷன் பெற்ற 'எங்கேயும் எப்போதும்' நடிகர்… புகைப்படம் உள்ளே!

