Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
45 நாள் கெடு முடிந்துவிட்டது. வெற்றியை எதிர்த்த வழக்கில் உதயநிதி வாதம்!

45 நாள் கெடு முடிந்துவிட்டது. வெற்றியை எதிர்த்த வழக்கில் உதயநிதி வாதம்!

Minnambalam 13 hrs ago

2026 சட்டமன்ற தேர்தலில் தனது வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட 45 நாள் காலக்கெடு முடிவடைந்த பின்னரே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

தேனியைச் சேர்ந்த மிலானி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று ,(அக்டோபர் 22) நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி வில்சன், "தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பிறகு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்.

2026 மே 4 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் அவருடைய வெற்றியை எதிர்த்து ஜூன் 17ஆம் தேதிக்குள் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கு ஜூன் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவை தாண்டி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்

பொது சட்ட விதிகளின்படி காலகெடுவை கணக்கிடும்போது முதல் நாளை தவிர்க்கும் நடைமுறை தேர்தல் வழக்குகளுக்கு பொருந்தாது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 81, வெற்றி பெற்ற வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் தேர்தல் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

2026 பொது தேர்தல் தொடர்பான தேர்தல் மனுக்களை ஜூன் 17ஆம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையமும் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

வெற்றி பெற்ற வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் வழக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கணக்கிடப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது

எனவே காலக்கெடு முடிந்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதங்களை முன் வைத்தார்.

மனுதாரர் சார்பில், இந்த மனு சட்டபூர்வமான காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை ஆய்வு செய்த உயர்நீதிமன்ற பதிவகம், மனு 45 நாள் காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த பின்னரே வழக்கிற்கு எண் வழங்கியுள்ளது.

எனவே வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அக்டோபர் 26 அன்று எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யுமாறு இருதரப்பினருக்கும் உத்தரவிட்டு அன்றைய தினம் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam