Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
69% இடஒதுக்கீடு. சேகர் பாபு சொல்லிக்கொடுப்பதை பேசும் பிரகாஷ்ராஜ்: ஜெயக்குமார் தாக்கு!

69% இடஒதுக்கீடு. சேகர் பாபு சொல்லிக்கொடுப்பதை பேசும் பிரகாஷ்ராஜ்: ஜெயக்குமார் தாக்கு!

Minnambalam 1 year ago

69% இடஒதுக்கீடு விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு சொல்லிக் கொடுப்பதை மட்டும் பேசி நடிகர் பிரகாஷ் ராஜ் மக்களை ஏமாற்ற நினைப்பது கண்டனத்திற்குரியது என்று அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் இன்று (ஜூன் 2) தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஏற்பாட்டில் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்த கண்காட்சியை நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று (ஜூன் 1) தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், "50 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக அனைத்து மாநிலங்களும் தள்ளாடிக்கொண்டிருந்த வேளையில், தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை கலைஞர் கொண்டு வந்தார். கலைஞர் இருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் வந்திருக்காது. அவர் இருக்கும் வரை யாராலும் வாலாட்ட முடியவில்லை" என்று பேசினார்.

பிரகாஷ் ராஜின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

"வரலாற்றை எண்ணி பார்க்காமல் எதாவது புகழ வேண்டும் என்ற கட்டளைக்கு ஏற்றது போல நடிகர் பிரகாஷ்ராஜ் 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் என்பதை பேசியுள்ளது நகைப்பை ஏற்படுத்துகிறது.

69% இடஒதுக்கீட்டை மத்திய அரசு‌ வரைமுறைபடுத்த எண்ணும் போது தமிழ்நாட்டில் அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா சமூக நீதிக்கு எதிராக அமைந்துவிடும் என கடுமையாக எதிர்த்தார்.

பின்னர்‌ சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் ஆலோசனைக்கு பிறகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த நான் சட்டமன்றத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என உறுதியளித்தேன்.

இதன் பின்னர் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தனிசட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஜெயலலிதா தலைமையில் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவை சந்தித்து வலியுறுத்தப்பட்டது.

பின்னர் நீண்ட வலியுறுத்தலின் மூலம் குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது. 1994-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-24,அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் மட்டுமே 69% இடஒதுக்கீடு அன்று பாதுகாக்கப்பட்டது. இதற்காக தான் திராவிட கழக தலைவர் வீரமணி ஜெயலலிதாவுக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் வழங்கினார்.

இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமல் அமைச்சர் சொல்லிக் கொடுப்பதை மட்டும் பேசி மக்களை ஏமாற்ற நினைப்பது கண்டனத்திற்குரியது.

மிகவும் தரம் தாழ்ந்து போன எண்ணத்தின் விளைவு தான் இந்த பேச்சு. இது போன்று வரலாற்றை திரித்துக் கூறுவதை இத்தோடு பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

செல்வம்

அகாலி: விமர்சனம்!

எக்ஸிட் போல் அல்ல மோடி மீடியாவின் ஃபேண்டஸி போல்: ராகுல் சுளீர்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam