Dailyhunt
"ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான்" - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

"ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான்" - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Minnambalam 0 months ago

"மாநில அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது" என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதுபோன்று பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரைகளை ஆளுநர் நிராகரித்ததன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். எனவே இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கவும் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பியும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தனர்.

  • எந்தெந்த சூழல்களில் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்படாமல் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியும்?
  • தண்டனை குறைப்பு மற்றும் முன்கூட்டியே விடுதலை செய்யும் மாநில அரசின் அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா? ஆகிய கேள்விகளை தலைமை நீதிபதி கேட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா , இளந்திரையன், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, அரசியலமைப்பு சரத்துகள் ஆளுநர் அமைச்சரவையின் அறிவுரையின்படி மட்டுமே செயல்பட முடியும் என கூறுகிறது. உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட ஷம்ஷேர் வழக்கு தீர்ப்பின் படி ஆளுநர் நிர்வாக செயல்பாடுகளில் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் படியே செயல்பட முடியும்.

மருராம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஆளுநர் பெயரளவிலான தலைவர் மட்டுமே, முன்கூட்டியே விடுதலை செய்யும் அமைச்சரவின் முடிவுகளில் ஆளுநர் ஒப்புதல் இன்றி அரசு உத்தரவிட முடியும் என கூறியுள்ளது.

இவை அனைத்தும் பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றியுள்ளது. எனவே ஆளுநர் முன்கூட்டியே விடுதலை செய்யும் அமைச்சரவையின் முடிவை நிராகரிக்க அதிகாரம் இல்லை என்று வாதங்களை முன் வைத்தார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், மனோகரன், சைபுல்லா ஆகியோரும் இந்த வாதங்களை முன் வைத்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஏடி ஜெகதீஷ் சந்திரா, இளந்திரையன், சுந்தர் மோகன் அமர்வு, 'தண்டனை குறைப்பு மற்றும் முன்கூட்டியே விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவை ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்' என்று தீர்ப்பளித்தது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam