திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் இறால் ஆலை அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "இவ்விபத்தின் காரணமாக தொழிற்சாலையில் பணியில் இருந்த 74 பேர் (70 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் அரசு மருத்துவமனையிலும், 27 பேர் தனியார் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், 27 பேர் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்தில் துரதிர்ஷ்டவசமாக 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு முதலமைச்சர் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர், அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி, நல்லடக்கம் செய்வதற்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அத்துடன், உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ (ESI) மற்றும் வருங்கால வைப்பு நிதி (PF) பலன்களை விரைந்து வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர், பொது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்திற்குள்ளும், முழுமையான விசாரணை அறிக்கையை 3 நாட்களுக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, அபாயகரமான தொழிற்சாலைகளை (Hazardous Industries) ஆய்வு செய்ய உடனடியாக ஒரு குழு அமைக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 54,957 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 27,65,313 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் 6,669 தொழிற்சாலைகள் அபாயகரமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளிலும் இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க, உரிய சட்டப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

