அதிமுகவில் உள்ள 90 சதவிகித நிர்வாகிகள் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்து ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூர் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா கூறுகையில், "இன்றைக்குத் தமிழக வெற்றிக் கழகம் மட்டும்தான் ஒரே நம்பிக்கை என்று அதிமுகவின் அடிமட்ட நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை அனைவரும் உணர்ந்துள்ளனர். அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் அன்று எப்படி வந்தாரோ, அதேபோல இன்றைக்கு அதிமுகவின் ஒன்றிய செயலாளர்கள், கிளை செயலாளர்கள் என அனைத்து நிர்வாகிகளும் தவெக-வை நோக்கி வரத் தொடங்கிவிட்டார்கள்; இதை அனைவரும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஒரு மாதத்திற்குள், அதிமுகவின் 90 சதவீத நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி வர வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்கனவே விடுத்துள்ளனர்.
எனவே, நமது பொதுச்செயலாளரிடம் வைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால், நம் தலைவருடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றுக்கட்சிகளில் இருந்து வரும் ஜனநாயக சக்திகளை நாம் வரவேற்க வேண்டும்.
இது ஏதோ நாம் பதவி கொடுத்தோ, பணம் கொடுத்தோ இழுக்கும் அரசியல் அல்ல. இதுவரை அப்படி ஒரு பேச்சுவார்த்தை நமக்குள் நடந்ததே கிடையாது. இதெல்லாம் திமுகவினர் பரப்பக்கூடிய அரசியல் சூழ்ச்சிகள் ஆகும். உண்மையில் திமுகதான் பணம், பதவி கொடுப்பதாக ஆசை காட்டும். ஆனால், அப்படி வரக்கூடிய நபர்களை அவர்கள் எப்பொழுதும் அன்புடன் நடத்தியதே இல்லை. தங்களுடைய வேலை முடிந்துவிட்டால், தூக்கி எறிந்துவிட்டுப் போய்விடுவார்கள். அன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையே அவர்கள் அப்படித்தான் நடத்தினார்கள்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தில் உங்களுடைய உழைப்பிற்கு நமது பொதுச்செயலாளரும், தலைவரும், நாங்களும் எப்போதும் தோளோடு தோள் நின்று, ஒரு குடும்பமாக உங்களோடு இருப்போம். உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
நமது இந்தப் பயணம் தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் வரலாற்றையும், மக்களுக்கான அரசியலையும், சமதர்ம அரசியலையும் உருவாக்கப் போவது உறுதி. நாம் அனைவரும் இணைந்து, இந்த உன்னத லட்சியத்திற்காக ஒன்றுபட்டுப் பயணிப்போம்."என்று தெரிவித்துள்ளார்.

