Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாஜகவின் கொள்கையே இதுதான் : எடப்பாடி பழனிசாமி தாக்கு!

பாஜகவின் கொள்கையே இதுதான் : எடப்பாடி பழனிசாமி தாக்கு!

Minnambalam 2 years ago

திமுகவுக்கும், பாஜகவுக்கும் வாக்களித்தால் அது தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே பாதித்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.

பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஒரு மணி நேரமே இருக்கும் நிலையில், அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் களம் களைகட்டியிருக்கிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள் வீடியோ வாயிலாகவும், கடிதம் எழுதியும் ஆதரவு கேட்டு வருகின்றனர்.

அந்தவகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், " நீட் தேர்வு ரத்து, போதைப்பொருள் புழக்கம், காவிரி-மேகதாது விவகாரம் என அனைத்து முக்கிய பிரச்சனைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வரிடம் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன்- பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

அறிக்கை வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் கேட்டேன்- பதில் சொல்ல முடியாமல் நழுவினார். இப்போது எஜமானர்களாம் உங்களிடமே வந்தேன்.

40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் முன்னிலையில் மேடையில் கேள்விகளை உரக்கக் கேட்டேன்- பதில் சொல்ல திராணியின்றி என் மீது தனிப்பட்ட விமர்சனம் தான் வைத்தார்.

ஆனால் அவர், என்னைப்பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் அளித்துவிட்டேன். நான் கேட்ட ஒரு கேள்விக்காவது அவருக்கு பதில் சொல்ல தெம்பு, திராணி இருந்ததா? இல்லை…

ஏனெனில், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்து, தமிழ்நாட்டைக் காக்கத் தவறிய, பொய் வாக்குறுதிகளால் பொதுமக்களையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றிய ஆட்சி தான் ஸ்டாலின் ஆட்சி.

ஒரு மக்களவை உறுப்பினரின் அடிப்படைக் கடமையான MPLADS நிதியைக் கூட சரிவரக் கேட்டு பெறமுடியாமல், வெறும் 25 சதவீதம் மட்டுமே செலவிட்டு, 75 சதவீத ஒதுக்கீட்டை வீணடித்த திமுக கூட்டணி எம்பிக்களுக்கு மீண்டும் வாக்களித்து என்ன பயன்?

இவர்கள் ஒருபுறம் எனில், நம் மாநிலத்தின் உரிமைகளை கிஞ்சற்றும் மதிக்காத, நாட்டின் கூட்டாட்சியில் நமக்குரிய பங்கை அளிக்க மறுக்கும் பாஜக மறுபுறம். மதத்தின் மூலம் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியே கொள்கையாக வைத்துக்கொண்டு, மாநில கட்சிகளில் பிளவுகள் ஏற்படுத்த முயன்று, அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் பாரதிய ஜனதாவின் எண்ணம் ஒருபோதும் தமிழ்நாட்டில், குறிப்பாக அதிமுகவிடம் ஈடேறாது.

வரும் 19ஆம் தேதி வாக்காளர்களாகிய நீங்கள் அளிக்கப் போகும் வாக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் திமுகவிற்கு வாக்களிப்பதும், பாஜகவுக்கு வாக்களிப்பதும் ஒன்று தான்; அது நம் மாநிலத்தின் எதிர்காலத்தையே பாதித்துவிடும்.

நம் மாநிலத்தின் உரிமைகளை மறுக்கும் தேசிய கட்சிகளையும், 38 எம்பிக்கள் இருந்தும் மவுனியாக இருந்து மாநில உரிமைகளை தாரைவார்த்த திமுகவையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர்…மண்டல வாரியாக செல்வாக்கு யாருக்கு? மெகா சர்வே ரிசல்ட்!

தலைவர்களின் இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் எங்கெங்கே?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam