Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எப்.ஐ.ஆர்-கள் ரத்து.மாணவர்களுக்காக தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்ச நீதிமன்றம்!

எப்.ஐ.ஆர்-கள் ரத்து.மாணவர்களுக்காக தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்ச நீதிமன்றம்!

Minnambalam 1 week ago

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து கடந்த ஜூலை 20ஆம் தேதி காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 1) ரத்து செய்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து காக்ரோச் ஜனதா கட்சியினர் கடந்த ஜூலை மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர். அப்போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.

தொடர்ந்து தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதியளித்தார்.

ஆனால் வழக்குகள் திரும்ப பெறப்படாததால் செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லியில் பேரணி நடத்தப்படும் என்று காக்ரோச் ஜனதா கட்சியினர் தெரிவித்தனர்.

அரசு சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் படி போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் திரும்பத் பெறப்படவில்லை என்று கூறி போராட்டத்தை அறிவித்தனர்.

இந்த நிலையில் மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று (செப்டம்பர் 1) விசாரணைக்கு வந்தது.

அப்பொது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "டெல்லி, பீகார், அசாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மாணவர்கள் போராட்டம் தொடர்பாக பதிவு செய்த எஃப்ஐஆர்-களை செய்யக்கோரி விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளன. ஜூலை 20 முதல் 25ஆம் தேதி வரை நடந்த போராட்ட நிகழ்வுகள் தொடர்பாக எதிர்காலத்தில் வழக்கு பதிவு செய்யப்படாது" என்று உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அமர்வு, இருதரப்பினரும் நம்பிக்கையுடன் பேசினால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று கூறியது.

தொடர்ந்து கடந்த ஜூலை 20ம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் - களை உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்துவதாக தெரிவித்த நீதிபதிகள், நல்ல எண்ணத்துடன் போராட்டம் நடத்த வந்த இளம் போராட்டக்காரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

எனினும் டெல்லியில் போராட்டக்காரர்கள் மத்தியில் குற்றப் பின்னணியுடன் கண்டறியப்பட்ட 2,873 நபர்கள் மீது புதிய வழக்குகளை பதிவு செய்யவும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து காக்ரோச் ஜனதா கட்சியினர் செப்டம்பர் 5ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam