மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் சேர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
பிப்ரவரி 29 ஆம் தேதி திமுகவுடன் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்திட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், 'கமல்ஹாசன் போன்ற புதியவர்கள் திமுக கூட்டணிக்கு வரலாம்' என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக… தனது புதிய படமான தக் லைஃப் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்லவேண்டியதையும் ஒத்திப் போட்டிருக்கிறார் கமல்ஹாசன்.
தென் சென்னை, கோவை ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட கமல் விரும்புகிறார் என்று மக்கள் நீதி மய்யம் தரப்பில் இருந்து தகவல்கள் வந்தன. அதே நேரம், திமுக கூட்டணியில் தற்போது கோவை தொகுதியை கைவசம் வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி கோவையை விட்டுத் தர தொடர்ந்து மறுக்கிறது.
தென்சென்னையில் கமல் போட்டியிட விரும்பினாலும், அங்கே மீண்டும் திமுக சிட்டிங் எம்பியான தமிழச்சி தங்கபாண்டியனையே நிறுத்த விரும்புகிறார் முதல்வர். அதுமட்டுமல்ல, தலைநகரில் உள்ள தொகுதியை கமல்ஹாசனுக்கு விட்டுத் தர திமுக தரப்புக்கும் விருப்பமில்லை.
இன்று முதல்வரின் பிறந்தநாளை ஒட்டி தனது கணவரான ஓய்வுபெற்ற போலீஸ் உயரதிகாரி சந்திரசேகருடன் தமிழச்சி வந்தபோது, எழுந்து நின்று அவரது வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
கமல் திமுக கூட்டணிக்கு வந்தால் அவர் இக்கூட்டணியின் பிரச்சார ஸ்டாராக இருக்க வேண்டும் என்றும், தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் விரும்புகிறார். அதனால், கமல்ஹாசனுக்கு ராஜ்யசபாவில் இடம் கொடுக்கலாமா என்றும் முதல்வர் ஆலோசித்து வருகிறார் என்கிறார்கள் அறிவாலயத் தரப்பில்.

