திருச்சி கிழக்கில் போட்டியிடுவதற்காக பாலக்கரையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 2) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு நேராக மரக்கடை பகுதிக்கு வந்து, அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின் எம்.ஜி.ஆர் சிலை முன் பிரச்சார வாகனத்தில் நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அவர் பேசுகையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் திருச்சி பகுதி மக்கள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? காலையில எல்லாரும் சாப்பிட்டீங்களா? ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்க போல, இதோ சீக்கிரம் முடிச்சிடுறேன்.
கேஸ் பிரச்சனை எல்லாம் எப்படி இருக்கு? சரிஆயிடுச்சா? சால்வ் ஆயிடுச்சா? கேஸ் எல்லாம் புக் பண்ணீங்கன்னா புக் ஆகுதா? இந்த கேஸ் பிரச்சனையினால எவ்வளவு பிரச்சனைகள், எவ்வளவு டீக்கடைகள் மூடிட்டாங்க, எவ்வளவு ஹோட்டல்ஸ் மூடிட்டாங்க. இதனால எவ்வளவு கஷ்டங்கள், எவ்வளவு நஷ்டங்கள்!
அவங்களாச்சும் (பாஜக) கொஞ்சம் உஷாரா இருந்திருந்தாங்கன்னா இந்த கேஸ் தட்டுப்பாடை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி இருக்கலாம். இவங்களாச்சும் (திமுக) கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருந்திருந்தா அட்லீஸ்ட் நம்ம ஊர்லயாச்சும் இந்த கேஸ் தட்டுப்பாடை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி இருக்கலாம். இவங்க ரெண்டு பேருந்தான் இதுக்கு காரணம்.
ஆனா நம்ம ஸ்டாலின் சாரை கேட்டீங்கன்னா, 'நமக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லையே' என சொல்லுவாரு. ஆனால் அவரு வீட்ல ஏதாவது ஒருரெய்டுன்னா , அவர் வீட்ல ஏதாவது ஒரு பிரச்சனைன்னா டெல்லிக்கு பறந்து போயிட்டு வருவாரு. இந்த கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு கொஞ்சம் டெல்லிக்கு பறந்து போயிட்டு வரலாம்ல? கொஞ்சம் பிரயோஜனமா இருந்திருக்கும்ல?
கேஸ் சிலிண்டருக்கு மானியமா 100 ரூபா தருவேன்னு சொன்னீங்களே, என்ன ஆச்சு? கரும்புக்கு ஆதார விலையா 4000 ரூபா தருவேன்னு சொன்னீங்களே, என்ன ஆச்சு? இந்த ரேஷன்ல சர்க்கரை ஒரு கிலோ எக்ஸ்ட்ரா தருவேன்னு சொன்னீங்களே, என்ன ஆச்சு? ரேஷன்ல உளுந்தம்பருப்பு கொடுப்பேன்னு சொன்னீங்களே, என்ன ஆச்சு? நாங்கள் எத்தனை வாட்டி ரிப்பீட் பண்றதுன்னு எனக்கு தெரியல.
நீட்ட ரத்து செய்வோம்னு சொன்னீங்களே, என்ன ஆச்சு?
சோ இதெல்லாம் எதெல்லாம் அவரால செய்ய முடியாதோ, அதையெல்லாம் பொய் வாக்குறுதிகளா கொடுத்து ஏமாத்தறதுதான் இவருடைய வேலையே. இப்ப அடுத்த செட் ஆப் இந்த பொய் வாக்குறுதிகளை ரெடி பண்ணிட்டாரு. அதனால அவர மாதிரி நாங்க பொய் வாக்குறுதிகள் எல்லாம் கொடுக்க மாட்டோம். மக்களுடைய தேவைகள் என்னன்னு சரியா புரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்த மாதிரிதான் நாம செயல்படுவோம்.
ஆறு சிலிண்டர்கள் தாய்மார்களுக்கு கட்டணம் இல்லாம 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டம் சொன்ன மாதிரியே நிறைவேற்றுவோம்.
கல்யாணமாகி போற நம்ம தங்கைகளுக்கு ஒரு பவுன் தங்கமும் பட்டு சேலையும் சொன்ன மாதிரியே கொடுப்போம்.
60 வயசு வரைக்கும் இருக்கிற குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 2500 சொன்ன மாதிரியே கொடுப்போம்.
என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள் எல்லாருமே தமிழ்நாட்டில எந்த மூலையிலிருந்து எங்க வேணாலும், தமிழ்நாட்டுக்குள்ள எந்த பஸ்ல வேணாலும், சொன்ன மாதிரியே ஃப்ரீயா போகலாம்.
கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதி, பஸ் போக்குவரத்து… இந்த மாதிரி அடிப்படை விஷயங்கள்லதான் எங்களுடைய முதல் கவனம் இருக்கும்.
நான் ஏற்கனவே சொன்னது மாதிரி நிறைய கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல இந்த டாய்லெட் வசதிகள் எல்லாம் சரியா இல்லை. அதை சரிப்படுத்தணும்னு சொன்னோம். உடனே இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா அப்படின்னு சில அறிவாளிங்க கேட்டாங்க. அந்த அடிப்படை வசதிகள் இல்லாததுனாலதான் ஒரு 12த் ஸ்டாண்டர்ட் படிக்கிற பொண்ணு ஒரு அவசரத்துக்கு ஒரு காட்டு பக்கம் ஒதுங்குனாங்க. என்ன ஆச்சு? இந்த உலகத்தை விட்டே போயிட்டாங்க. அதுக்கு என்ன காரணம்? இந்த மாதிரி அடிப்படை வசதிகள் இல்லாததுதான் காரணம்.
அதனால் என்னுடைய தாய்மார்களே, உங்களுக்கு பாதுகாப்பு இல்லாத, இந்த அடிப்படை வசதிகள் கூட செஞ்சு கொடுக்காத இந்த தீயசக்தி திமுக அரசை என்ன பண்ணலாம்? தூக்கி வீசி எறிவோமா? எதுக்கு இப்ப அங்க இங்க சுத்திக்கிட்டு, நம்ம ஊருக்கே வருவோம், நம்ம திருச்சிக்கே வருவோம்.
இங்க ஒரு மந்திரி இருக்கிறாரு… நகராட்சி துறையில வேலை வாங்கி தரதா சொல்லி கோடிக்கணக்கான பணத்தை லஞ்சமா வாங்கிக்கிட்டு தகுதியானவங்களுக்கு எல்லாம் வேலைவாய்ப்பு கிடைக்காத அளவுக்கு பண்ணி இருக்கிறாரு. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஒரு ஏமாத்த வேலை!
அதனால நம்ம தம்பி தங்கைகளே, உங்களுக்கு இந்த வேலை வாய்ப்பை பறிச்ச இந்த ஸ்டாலின் சார் சர்க்காரை என்ன பண்ணலாம்? தூக்கி வீசி எறிவோமா? உங்களுக்கு இந்த பாதுகாப்பு இல்லாத, சட்ட ஒழுங்கு சரியில்லாத இந்த தீய சக்தி திமுக அரசை என்ன பண்ணலாம்? தூக்கி வீசி எறிவோமா?
நகராட்சி துறையில மட்டுமே ஆயிரம் கோடிக்கு மேல ஊழல்னா, அப்ப மத்த மத்த துறையில எல்லாம் கொஞ்சம் கணக்கு போட்டு பாருங்க, தலை எல்லாம் சுத்தி போயிடும்.
நான் வந்து கொஞ்ச நாளுக்கு முன்னாடி சொல்லி இருந்தேன் - இந்த ஸ்டாலின் சார் டாக்ஸ் அப்படின்னு, இந்த ஜிஎஸ்டி மாதிரி எஸ்எஸ்டி. அதை பத்தி அவங்க வாயை திறக்கலங்க. என்னமோ அவங்களே ஒத்துக்கிட்ட மாதிரி இருக்குது, 'ஆமா இப்படி ஒரு டாக்ஸ் இருக்குது' அப்படின்னு அவங்களே ஒத்துக்கிட்ட மாதிரி… இந்த கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு அந்த போஸ்டிங்க்கு 2000 பேருக்கு மேல அந்த வேலை கொடுப்போம்னு சொன்னாங்க.
கடைசியில எத்தனை பேருக்கு கொடுத்தாங்க தெரியுமா? வெறும் அஞ்சு பேருக்கு. 2000 எங்க, இந்த அஞ்சு எங்க? அதனால இதெல்லாம் வெறும் அறிவிப்புகள் மட்டும்தான். இந்த மாதிரி லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்புவோம்னு சொன்னாங்க, அதுவும் என்ன ஆச்சுன்னு தெரியல. இதனால ஒரு யூஸ்மே கிடையாது, யூஸ்லெஸ் கவர்மெண்ட் இது.
அது மாதிரி 100% ஒரு நியாயமான ஒரு ஆட்சியை நாம கொடுப்போம்ங்க. 100% நீங்க இந்த விஜயை நம்பலாம். நீங்க நம்புறீங்கன்னு எனக்கு தெரியும். அதனாலதான் என்னுடைய சொந்த பந்தங்களாகிய உங்ககிட்ட வந்திருக்கேன். எனக்கு அந்த உரிமை இருக்கு. 'எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க, எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க'ன்னு உங்ககிட்ட கேட்காம வேற யாரு கிட்ட நான் கேட்பேன்? அதனால எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க.
இருந்தாலும் ரொம்ப முக்கியமா ஒன்னை நீங்க ஆழமா மனசுல வச்சுக்கணும். இந்த எலக்ஷன்ல திமுக ஏலத்தில் எடுத்திருக்கிற 'கல்லாப்பட்டி கூட்டணி'யோட சேர்ந்து, அப்புறம் நாம ஏற்கனவே சொன்னோமே அந்த 'மற்றும் பலர்' கூட்டணின்னு ஒன்னு இருக்குல்ல, அவங்களோடும் கள்ள கூட்டணி போட்டுக்கிட்டு எல்லாரும் ஒண்ணா சேர்ந்துகிட்டு நம்மள, உங்க விஜயை எப்படி எல்லாம் எதிர்க்கிறாங்கன்னு நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்ல.
இந்த கரூர் நிகழ்ச்சி சூழ்ச்சின்னு பலர் சொல்றது மாதிரி, நம்ம கடைசி படமான 'ஜனநாயகன்', அதான் நம்ம மனசுக்கு நெருக்கமான உங்க எல்லாரோடும் நமக்கு இருக்கிற பூர்வ ஜென்ம பந்தத்தை இன்னமும் எங்க இருக்கமா மாத்திடுமோன்னு, எங்க அது இந்த தேர்தல்ல நமக்கு மிகப்பெரிய ஆயுதமா மாறிடுமோன்னு ஒரு கூட்டு சூழ்ச்சி. அதோட இன்னும் பல பல சூழ்ச்சிகள். அதனால உங்க மகன், உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க விஜய் கேட்கிறேன் - உங்களுக்காக நீதி கேட்க வந்த எனக்கும் சேர்த்துதான் நீதி வேண்டும்.
அவங்க கொள்ளை அடிக்க இதுவரைக்கும் எப்படி உங்களை ஏமாத்திட்டு இருக்காங்க தெரியுமா? இந்த காங்கிரஸ்ல இருக்கிற சிலரை பணப்பையில போட்டுக்கிட்டு சிறுபான்மை மக்களை ஏமாத்த ஒரு நேரடி 'பாதி கதர்' கூட்டணி. அப்புறம் இந்த 'மற்றும் பலர்' கூட்டணின்னு ஒன்னு இருக்குல்ல, அதோட டெல்லி ஓனரோட ஒரு கொள்ளைப்புற கள்ள கூட்டணி. அதாவது 'பாதி காவி' கூட்டணி. கொள்கை கொள்கைன்னு ஏமாத்துறாங்க.
அதனால இந்த திமுகவையும் நம்பாதீங்க, இந்த பாஜகாவையும் நம்பாதீங்க. இரண்டு பேரும் வேற வேற கூட்டணி எல்லாம் கிடையாது, ஒரே கூட்டணிதான். . இதுல எந்த டவுட்டும் உங்களுக்கு வேணாம். நீங்க திமுகாவுக்கு ஓட்டு போட்டாலும் சரி, அந்த மற்றும் பலருக்கு நீங்க ஓட்டு போட்டாலும் சரி, நீங்க யாருக்கு ஓட்டு போடுறதுக்கு சமம்னு நீங்களே புரிஞ்சுக்கோங்க.
அதனால இந்த வரப்போற தேர்தல்ல தவெகவு-க்கு உங்க சப்போர்ட்டை கொடுங்க. இன்னும் பல வருஷத்துக்கு தமிழ்நாடு சூப்பரா இருக்கும். அப்புறம் நான் ஒரு விஷயத்தை திருப்பி ரிப்பீட் பண்றேன்னு சொல்லி யாரும் தவறா எடுத்துக்க வேணாம்.
ஏன்னா அது என்னுடைய கடமை. ஒவ்வொரு ஊருக்கும் போய் அத நான் ரிப்பீட் பண்ணியே ஆகணும். ஏப்ரல் 23-ஆம் தேதி, சும்மா காலங்காத்தால பக்காவா ரெடி ஆயிட்டு,வோட்டர் ஐடி கார்ட கையில எடுத்துக்கிட்டு, முதல் ஆளா பூத்துல போய் நின்னு அந்த விசில் சின்னத்துக்கு நேரா இருக்கிற அந்த பட்டனை ஒரு அழுத்து அழுத்துங்க.
உங்க வீட்ல இருக்கற ஒவ்வொருத்தரையும் அழைச்சிட்டு போங்க. சப்போஸ் வெளியூர்ல இருந்து நீங்க திருச்சியில இருக்கீங்கன்னா, 'என்னடா ஊருக்கு போய் ஓட்டு போடணுமே'ன்னு அசால்ட்டா விட்றாதீங்க. இப்பவே அட்வான்ஸா டிக்கெட்ட புக் பண்ணுங்க.
இது ஒரு தலைமுறைக்கான ஒரு தேர்தல், உங்களுக்கான தேர்தல். எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கையா இருந்தாலும் எல்லாத்தையும் உதறி தள்ளிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன்.
உங்களுக்காக நன்றி கடன் செலுத்துறதுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். அத்தனை வலிகளையும் தாங்கிக்கிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். ஒரு நாளும் பொய் சொல்லி உங்களை நான் ஏமாத்த மாட்டேன். இந்த நாலு முனை போட்டி, 40 முனை போட்டினு எத்தனை முனை போட்டினு வந்தாலும், இங்க இரு முனை போட்டி மட்டும்தான். ஒன்னு டிவிகே, இன்னொன்னு டிஎம்கே.
மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா? மக்களை நேசிக்கிற விஜய் வேணுமா? அவ்வளவுதான் இந்த தேர்தலே.
அதனால உங்க விஜய்க்கு, உங்க அண்ணனுக்கு, உங்க தம்பிக்கு, உங்க பிள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க. தயவு செஞ்சு விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க. இது ஒரு விசில் புரட்சி தேர்தலா இருக்கணும். தேங்க்யூ, தேங்க்யூ!
இங்க திருச்சி எல்லா தொகுதியிலும் நம்மளுடைய நண்பர்களை, தோழர்களை வேட்பாளர்களா நிப்பாட்டி இருக்கேன். அவங்க வேற நான் வேறன்னு தயவு செஞ்சு பிரிச்சு பாத்துறாதீங்க. அவங்க எல்லாரையும் வெற்றி பெற செய்யணும்னு உங்க எல்லாரையும் தாழ்மையுடன் நான் கேட்டுக்கிறேன்" என்று வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து தவெக சார்பில் நேற்று வெளியிட்ட பரப்புரை பாடலை பாடி தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

