மேற்சொன்ன தலைப்பு பலரது புருவங்களை நிச்சயம் உயர்த்தியிருக்கும். இலங்கையைச் சேர்ந்த இயக்குனர் ஒருவரின் படத்தில் மணிரத்னத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கும்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில், 'பாரடைஸ்' என்ற திரைப்படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டிருந்தார். அது மட்டுமல்லாமல், அவரது மெட்ராஸ் டாக்கீஸ் இதனை வழங்குகிறது. அப்படியென்ன முக்கியத்துவம் இப்படத்திற்கு உள்ளது?
'பாரடைஸ்' படத்தின் இயக்குனர் பிரசன்ன விதனாகே இலங்கையைச் சேர்ந்தவர். உலகளவில் கவனித்தக்க இயக்குனராக விளங்குபவர். 'ஆகாச குசும்', 'ஆனந்த ராத்திரிய', 'காடி' உட்படச் சர்வதேச அளவில் கவனிப்பைப் பெற்ற சிங்களப்படங்களை இயக்கியவர். அவர் இயக்கியுள்ள முதல் இந்தியப் படமே 'பாரடைஸ்'.

கேரளாவைச் சேர்ந்த நியூட்டன் சினிமா நிறுவனம் இதனைத் தயாரித்துள்ளது. 'கிஸ்', 'பேமிலி' போன்ற ரசிகர்களின் கவனத்தைக் கொள்ளை கொண்ட திரைப்படங்களை இதற்கு முன் தந்துள்ளது.
'கோப்ரா' படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் மேத்யூவும், 'கவண்', 'இரும்புத்திரை' படங்களில் சிறிதாகத் தலைகாட்டி 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தில் நாயகன் பசில் ஜோசப்பைப் புரட்டியெடுக்கும் நாயகியாகத் தோன்றிய தர்ஷனா ராஜேந்திரன் இதில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஹ்ருதயம்' படத்தில் வரும் 'தர்ஷனா..' பாடலைக் கேட்டவர்களுக்கு இந்த தர்ஷனாவை நன்கு தெரிந்திருக்கும்.

