- முனைவர் என்.மாதவன்
உலகின் பல்வேறு நாடுகளும் சிறார்களின் இணையப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அண்மையில் மாண்பமை இந்திய உச்சநீதிமன்றம் இணைய சேவையைப் பயன்படுத்துவது 18 வயதுக்குட்பட்ட சிறார்களின் அடிப்படை உரிமை என தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பின் உள்ளடக்கத்திற்கு செல்லும் முன் வரலாற்றின் சில பக்கங்களை பார்த்துவிட்டு வருவோம்.

டிஜிட்டல் பாகுபாடு
கரோனா காலகட்டத்தில் உலகெங்கும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களின் கல்விக்கான முக்கிய வாய்ப்பாக அறிதிறன் பேசியும் இணையமும் விளங்கின. வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியை இணைய வழியில் தொடர்ந்த போது, பொருளாதார பின்புலமில்லாத குடும்பங்களின் குழந்தைகள் தொலைக்காட்சி, வானொலி போன்ற சாதனங்களையே நம்பியிருந்தனர். இணைய வசதியின்மை, டிஜிட்டல் வசதிகளைப் பெறுவதில் பாகுபாடு என்ற சொற்றொடர் புழக்கத்திற்கு வந்தது.

உலகமும் இணைய இணைப்பும்
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எத்தனை சதவிகிதம் உலக நாடுகளின் குழந்தைகள் இணைய வசதி பெற்றுள்ளோராக உள்ளனர்? என்பது உற்று நோக்கப்பட்டது. சர்வதேச தொலைதொடர்பு குழுமம் (International Telecommunication Union) 2015 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 39 நாடுகளின் புள்ளி விவரங்களைப் பகிர்ந்தது. ஹாங்காங்,சீனா போன்ற நாடுகளில் 100 சதவிகிதமும், ஜெர்மனி, சவுதி அரேபியா, சிங்கப்பூர், பெலாரஸ் போன்ற நாடுகளில் 90 முதல் 97 சதவிகிதம் வரையிலான குழந்தைகள் இணைய வசதியைப் பயன்படுத்துவோராக இருந்தனர். மேலும் இந்தோனேஷியா, பொலிவியா, ஜமைக்கா, எல் சல்வடார், பெருகுவே, உஸ்பெஸ்கிஸ்தான், பெரு போன்ற நாடுகளில் பயன்பாடு சுமார் 22 சதவிகிதம் முதல் 43 சதவிகிதமாக இருந்ததாகவும் குறிப்பிட்டது. துரதிருஷ்டவசமாக இந்தியா பற்றிய விவரம் கிடைக்கவில்லை.
இக்கட்டில் சிக்கிய நாடுகள்
மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்ட பிறகும், இணைய வசதி குழந்தைகளின் கல்வியின் தவிர்க்கவியலாததாக பகுதியாக மாறியது. இந்நிலையில், கைபேசியும் இணையமும் கல்விப் பயன்பாட்டைத் தாண்டி அளவுக்கதிகமான பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அனைவரையும் அடிமையாக்கத் தொடங்கின. எந்த வாய்ப்பை தங்களது பெருமையாகக் கருதினவோ, அந்த நாடுகளில் பலவும் சட்டரீதியான செயல்பாடுகளில் இறங்கத் தொடங்கின.
நாடுகளின் நடவடிக்கைகள்
ஆஸ்திரேலிய அரசு 16 வயதுக்குட்டோரின் இணையப் பயன்பாட்டைத் தடை செய்து சட்டம் இயற்றியுள்ளது. ஐரோப்பிய யூனியன் 13 வயதுக்குட்பட்டோர் கணக்கைத் துவங்க முழுத் தடையையும், 13 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் பெற்றோர்கள் கண்காணிப்புடன் மட்டுமே கணக்குகளைத் துவங்கவும் அறிவுறுத்தியுள்ளது. சமூக ஊடக் நிறுவனங்கள் தங்கள் பக்கங்கள் சிறார்கள் உலவும் அளவுக்குப் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறில்லாமல் இருக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். இந்தியாவிலும் கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் சில முயற்சிகளில் இறங்கியுள்ளன.

இந்த வழக்கின் பின்னணி
டெல்லியைச் சேர்ந்த ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் அலையன்ஸ் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் வழக்கு ஒன்றைத் தொடுத்தது. அவ்வழக்கில் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். கட்டுப்பாடற்ற முறையில் சிறார் வயதுக்கொவ்வாத அம்சங்களும் இணைய தளங்களில் பல்கிப் பெருகுவதை அந்த நிறுவனங்கள் கவலையோடு அணுகி, பெற்றோர்களின் மேற்பார்வையின் கீழ் அவர்கள் சமூகவலைதளங்களைப் பார்வையிட அனுமதிக்க வேண்டும். இவ்வாறான கோரிக்கைகளை அந்த நிறுவனம் நீதிமன்றத்தின் முன்பு வைத்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
அண்மையில் இந்திய உச்சநீதிமன்றம் சிறார்களுக்கு இணைய சேவை அடிப்படை உரிமை என தீர்ப்பளித்துள்ளது. இதனை மேம்போக்காக பார்க்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியளிப்பதாகத் தோன்றினாலும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பொருள் பொதிந்தது. அந்த தீர்ப்பின் உள்ளடக்கத்தினைக் கொஞ்சம் பார்ப்போம்.
தீர்ப்பின் உள்ளடக்கம்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்திய அரசியலமைப்பு சட்டம் 21 வது பிரிவின் கீழ் ஒவ்வொரு தனிநபருக்கும் இணையத்தைப் பயன்படுத்தும் உரிமை உள்ளது. இந்த உரிமை சிறார்களுக்கும் உண்டு. இணையத்தில் ஏற்படும் ஆபத்துக்களைக் காட்டி சிறார்களுக்கு இந்த உரிமையை மறுக்க இயலாது. மத்திய அரசு சிறார் பாலியல் வன்கொடுமை சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் தொடர்புடையோர் மீது கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

சமூகம் என்ன செய்யவேண்டும்
பல்வேறு வளர்ந்த நாடுகளின் நிலையும் இந்தியா போன்ற நாடுகளின் நிலைமையும் மாறுபாடானது. சமூக ஏற்றத்தாழ்வு மிகுந்த இந்திய சமூகத்தில் இப்போதுதான் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கனவு மெல்ல மெல்ல சாத்தியமாகி வருகிறது. இந்த கனவு உண்மையாவதில் இணையத்தின் பங்கை குறைத்து மதிப்பிட இயலாது. சிறார்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களைக் காரணம் காட்டி தடை செய்யும் நிலையில் நல் விளைவுகளைவிட பாதகமான விளைவுகளே அதிகம் நேரும். பெற்றோரும் சட்டமும் தடை விதிக்கும் நிலையில் அறிமுகமில்லாத நபர்கள் அல்லது பாதுகாப்பில்லா சூழல்களில் இந்த சேவைகளைப் பெற சிறார்கள் விழைவர். இது சிறார்களுக்கு துவக்கத்தில் வாய்ப்பாகத் தோன்றினாலும், பாலியல் சுரண்டல் போன்ற ஆபத்துக்களுக்கும் இட்டுச் செல்லும்.
இந்தியாவில் இன்றும் குடும்பம் என்ற நிறுவனங்கள் உயிரோட்டமாக உள்ளன. குடும்பத்தின் அங்கத்தினர்கள் முன்மாதிரியாக செயல்படுவது நல்ல பலனை அளிக்கும். அரசும் இணைய தளங்களை நிர்வகிப்போர் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட சட்டபூர்வமான எச்சரிக்கைகளை விடுக்கவேண்டும்.
பெற்றோர் பொறுப்பும் ஊடக பயன்பாடும்
பழைய திரைப்படம் ஒன்றில் கதாநாயகன் தனது பதின்பருவ சகோதரிகளுடன் திரைப்படத்திற்கு செல்வார். படத்தின் இடையே படுக்கையறை காட்சி ஒன்று வரும். இதனை தமது சகோதரிகள் பார்ப்பதை விரும்பாத கதாநாயகன் தன்னிடமிருக்கும் சில்லறைகள் தவறி விழுந்து விட்டதாகக் கூறி அனைவரையும் இருக்கைக்கு கீழே தேடச் செய்வார். சில தடவை இவ்வாறு நடந்த பிறகு அவ்வாறான காட்சிகள் வரும்போது , சகோதரிகள் அவர்களாகவே குனிந்து தேட முனைவர். ஆம் பாக்யராஜ் அவர்கள் நடித்த தாவணிக்கனவுகள் திரைப்படக் காட்சிதான் இது.
இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருவரிடமும் கைபேசியும் இணையமும் உள்ளது. யாரும் யாரையும் கட்டுப்படுத்த இயலாது. தாங்களாகவே கட்டுப்படுத்திக் கொண்டால்தான் உண்டு. சாலையில் சென்றால் விபத்து ஏற்படும் என்று யாரும் சாலையில் செல்லாமல் இருப்பதில்லை. சாலை விதிகளை உண்டாக்கிக்கொண்டு பயணிக்கிறோம். இணைய சாலைகளையும் விதிமுறைகளுக்குட்படுத்துவோம்.
கட்டுரையாளர்

மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்thulirmadhavan@gmail.com

