கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி செல்லும் விமானங்கள் இன்று (டிசம்பர் 17) மதுரையில் தரையிறக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் தற்போது இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கும் வெள்ளம் புகுந்துள்ளது.
தொடர்ந்து நாளையும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடியில் தரையிறக்கப்பட வேண்டிய 2 இண்டிகோ விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
வானிலை சரியான பிறகு விமானங்கள் தூத்துக்குடி வரை இயக்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

