Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காதலிலும் திருமணத்திலும் கருத்து வேறுபாடு வருகிறதா? உறவை காப்பாற்ற இந்த விஷயங்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள்!

காதலிலும் திருமணத்திலும் கருத்து வேறுபாடு வருகிறதா? உறவை காப்பாற்ற இந்த விஷயங்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள்!

Minnambalam 2 weeks ago

காதல் அல்லது திருமண உறவில் இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள் இருப்பது அரிது. பணத்தை எப்படி செலவு செய்வது, குழந்தைகளை எப்படி வளர்ப்பது, குடும்பத்தினருடன் எவ்வளவு நெருக்கமாக இருக்க வேண்டும், ஆன்மிகம், தொழில், வாழ்க்கை முறை என பல விஷயங்களில் கருத்து மாறுபாடு இருக்கலாம்.

இப்படிப்பட்ட வேறுபாடுகள் வந்தவுடன், "நாம் இருவரும் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்களா?" என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படும். பிரச்சினை பெரும்பாலும் கருத்து வேறுபாட்டிலேயே இல்லை; அந்த வேறுபாடு வெளிப்படும் போது இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது என்பதில்தான் இருக்கிறது.

கருத்து வேறுபாடு ஏன் பெரிய சண்டையாக மாறுகிறது?

ஒரு விஷயத்தில் நம்முடைய கருத்தை துணை ஏற்காதபோது, அது வெறும் கருத்து மோதலாக மட்டும் இருப்பதில்லை. "என்னை மதிக்கவில்லை", "என்னுடைய எண்ணங்களுக்கு மதிப்பில்லை" என்ற உணர்வு உருவாகலாம்.

இதனால் விவாதம் மெதுவாக தனிப்பட்ட தாக்குதலாக மாறுகிறது. ஒருவர் தன்னை நியாயப்படுத்த முயற்சிக்க, மற்றவர் தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் தீவிரமாக பாதுகாக்கத் தொடங்குகிறார்.

அதன் பிறகு பேசப்படுவது பணம், குழந்தை வளர்ப்பு அல்லது குடும்பம் பற்றிய விஷயம் அல்ல. "யார் சரி?" என்ற போட்டியாக மாறிவிடுகிறது.

முதலில் அமைதியாக வேண்டும்

கடுமையான வாக்குவாதம் நடக்கும் நேரத்தில் உடனடியாக தீர்வு காண முயற்சிப்பது பல நேரங்களில் பலனளிக்காது. கோபம் அதிகரிக்கும்போது மனம் தற்காப்பு நிலைக்குச் செல்கிறது. அந்த நிலையில் எதிரில் இருப்பவரின் கருத்தை புரிந்துகொள்வதைவிட, தன்னுடைய நிலைப்பாட்டை காப்பாற்றுவதில்தான் கவனம் இருக்கும்.

அதனால் சண்டை தீவிரமாகும்போது சிறிது இடைவெளி எடுப்பது உதவியாக இருக்கும். ஆனால், பேசாமல், வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற செயலாக இல்லாமல், இருவரும் அமைதியான பிறகு மீண்டும் பேசுவோம் என்ற புரிதலுடன் அந்த இடைவெளி இருக்க வேண்டும்.

"நான் தான் சரி" என்ற எண்ணம் உறவை பாதிக்கும்

உறவில் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று, தன்னுடைய கருத்துதான் சரி என்று நிரூபிக்க வேண்டும் என்ற பிடிவாதம்.

பணம் சேமிப்பது நல்லது என்று ஒருவர் நினைக்கலாம். மற்றவர் வாழ்க்கையை அனுபவிக்க பணத்தை பயன்படுத்த வேண்டும் என்று கருதலாம். இருவருடைய பார்வைக்கும் அவரவர் வாழ்க்கை அனுபவம் காரணமாக இருக்கலாம்.

ஒருவரை தவறு என்று நிரூபிப்பதால் உறவு வலுப்படாது. மாறாக, "நீ சொல்வது எனக்கு புரிகிறது" என்று சொல்லக்கூடிய இடத்தை உருவாக்குவது முக்கியம்.

முதலில் உறவை சரி செய்யுங்கள்

கருத்து வேறுபாடு ஏற்பட்டவுடன் தீர்வு காண்பதற்கு முன், இருவருக்கும் இடையிலான நம்பிக்கையும் பாதுகாப்பான உணர்வும் நிலைத்திருக்க வேண்டும்.

துணையின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அந்த கருத்துக்கு பின்னால் இருக்கும் உணர்வை புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.

இதுதான் அடுத்த கட்டத்தில் அமைதியாக பேசுவதற்கான இடத்தை உருவாக்கும்.

பணம், குழந்தைகள், குடும்பம்… எதில் அதிக பிரச்சினை?

தம்பதிகளிடையே அடிக்கடி மோதலை உருவாக்கும் விஷயங்களில் பணம் முக்கியமான ஒன்று. ஒருவர் பணத்தை பாதுகாப்பாக சேமிக்க விரும்பலாம்; இன்னொருவர் வாழ்க்கையை அனுபவிக்க செலவு செய்ய விரும்பலாம்.

குழந்தை வளர்ப்பிலும் இதே நிலை ஏற்படலாம். ஒருவர் கட்டுப்பாடு முக்கியம் என்று கருத, மற்றவர் குழந்தையின் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம்.

மதம் மற்றும் ஆன்மிகம், தொழில் வளர்ச்சி, வாழ்க்கை முறை, இரு குடும்பங்களுடனான உறவு போன்ற விஷயங்களிலும் வேறுபாடு இருக்கலாம். இவற்றின் பின்னால் பெரும்பாலும் பாதுகாப்பு, சுதந்திரம், அடையாளம் போன்ற ஆழமான உணர்வுகள் இருக்கும்.

"என் பார்வையில் இருந்து மட்டும்" பார்க்க வேண்டாம்

சண்டையின் நடுவில் இருந்தால், எதிரில் இருப்பவரின் கருத்து நமக்கு முற்றிலும் தவறாகத் தோன்றும். அப்போது ஒரு படி பின்னால் சென்று, "இந்த விஷயத்தைப் பற்றி என் துணை ஏன் இப்படி நினைக்கிறார்?" என்று கேட்பது உதவும். அதற்காக அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

புரிந்துகொள்ள முயற்சிப்பதே முக்கியம். இது ஒருவருக்கு ஒருவர் எதிராக நிற்பதைவிட இருவரும் சேர்ந்து பிரச்சினையை எதிர்கொள்ள உதவும்.

எல்லா கருத்து வேறுபாடுகளையும் சமரசம் செய்ய முடியுமா?

இல்லை. சில வேறுபாடுகள் உண்மையிலேயே உறவுக்கு மிகப்பெரிய தடையாக இருக்கலாம்.

ஒருவருடைய அடிப்படை அடையாளத்தையே மாற்ற வேண்டும் என்று மற்றவர் வற்புறுத்துவது, தொடர்ந்து அவமதிப்பது அல்லது அந்த வேறுபாடு காரணமாக ஒருவருக்கு உண்மையான பாதிப்பு ஏற்படுவது போன்ற சூழல்களில், இது சாதாரண கருத்து மோதல் என்று பார்க்க முடியாது.

அதேபோல், இருவரும் நேர்மையாக பேச முயன்றும் எந்த மாற்றத்துக்கும் இடமில்லாத நிலை ஏற்பட்டால், அந்த வேறுபாடு உண்மையில் இருவரின் வாழ்க்கைக்கும் பொருந்துகிறதா என்பதை சிந்திக்க வேண்டியிருக்கும்.

உறவில் முக்கியமான கேள்வி இதுதான்

"என் துணை ஏன் என்னைப் போல சிந்திக்கவில்லை?" என்பது முக்கியமான கேள்வியாகத் தோன்றலாம். ஆனால் அதைவிட முக்கியமானது, "இந்த வேறுபாடு வரும்போது நமக்குள் என்ன நடக்கிறது?" என்பதுதான்.

இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்களா? இல்லையா, ஒவ்வொரு விவாதமும் வெற்றி - தோல்வி போட்டியாக மாறுகிறதா?

கருத்துகள் வேறுபடலாம். வாழ்க்கையைப் பார்க்கும் விதமும் மாறுபடலாம். ஆனால் அந்த வேறுபாடுகளுக்கு நடுவிலும் ஒருவரை ஒருவர் மதிக்கவும், கேட்கவும், பாதுகாப்பாக உணரச் செய்யவும் முடிந்தால் உறவை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள முடியும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam