தமிழக அரசியலில் 'மேற்கு மண்டலம்' என்பது எப்போதுமே கணிக்க முடியாத ஒரு புதிரான களம். குறிப்பாக, அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்படும் கோவை மாவட்டத்தில், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க திமுக இந்த முறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையே நேரடியாகக் களமிறக்கியுள்ளது.
கரூரில் நேற்று பிரசாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், "கரூர் மாவட்டத்தில்100 சதவிகிதம் வெற்றியை உறுதி செய்து விட்டதால்தான் செந்தில் பாலாஜியை கோவைக்கு அனுப்பி உள்ளேன். இனி கோவையும் கரூரும் நமது வசம் தான்" என கூறியிருந்தார்.
செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் தனது தம்பியான அசோக் குமாரை திமுக வேட்பாளராகக் களம் இறக்க முயற்சித்து கொண்டிருந்தார் என்பதை கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதியே நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் எழுதி இருந்தோம்.
முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரிடமும் தம்பி அசோக்குக்கு சீட் கேட்டு வலியுறுத்தி இருந்தார் செந்தில் பாலாஜி. ஆனால் அசோக்குமார் மீதும் அமலாக்கத்துறை வழக்கு இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
யார் ஆசி. தியாகராஜன்?
இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி பரிந்துரைத்த அவரது உறவினரான ஆசி. தியாகராஜன், கரூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆசி. தியாகராஜனைப் பற்றி கரூர் திமுகவினரிடம் நாம் விசாரித்த போது, "செந்தில் பாலாஜியின் உறவினர்தான் ஆசி தியாகராஜன். நேரடியாக அரசியல் களத்துக்கு வராதவர்தான்.. ஆனால் செந்தில் பாலாஜியின் தேர்தல் வரவு செலவு கணக்குகள் அனைத்தையும் முழுமையாக கவனித்தவர் ஆசி தியாகராஜன். அத்தனை கணக்குகளையும் துல்லியமாக செந்தில் பாலாஜியிடம் கொடுக்கிறவர். அதனால்தான் தேர்தலில் போட்டி போட அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்காரு செந்தில் பாலாஜி.. கோவையில ஜெயிச்சாலும் கூட உச்சநீதிமன்றம் ஏற்கனவே தடை விதிச்சிருக்கிறதால செந்தில் பாலாஜியால மறுபடியும் அமைச்சராக முடியுமாங்கிற சிக்கல் இருக்குது.. அதுதான் நிலைமைன்னா செந்தில் பாலாஜிக்கு பதில் ஆசி தியாகராஜன் அமைச்சரானாலும் ஆச்சரியப்படாதீங்க" என்கின்றனர்.
சவால்களை சந்திக்கும் செந்தில் பாலாஜி
பொதுவாக எந்த ஒரு அரசியல்வாதியும் தேர்தல் களத்தில் தாம் ஜெயிக்க ஏதுவான, பாதுகாப்பான ஒரு தொகுதியைத்தான் தேர்வு செய்வர்; ஒருமுறை வெற்றி பெற்றால் அதே தொகுதியை தக்க வைத்துக் கொள்ளத்தான் போராடுவர். ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு தொகுதி என மாற்றிக் கொள்ளக் கூடிய ரிஸ்க் எடுக்கமாட்டார்கள் அரசியல்வாதிகள். இதுதான் ஓட்டு அரசியல்.
ஆனால் செந்தில் பாலாஜிக்கு 'ரிஸ்க்' எடுப்பது எல்லாம் 'ரஸ்க்' சாப்பிடுவது என்பதைப் போல தொகுதிகளை மட்டுமல்ல மாவட்டமே மாறி இப்போது கோவைக்கு வந்துள்ளார்.
செந்தில் பாலாஜி 2006-ல் கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார். 2011-ம் ஆண்டும் கரூர் தொகுதியில் 2-வது முறையாக ஜெயித்தார். 2016-ம் ஆண்டு அரவக்குறிச்சியில் போட்டியிட்டு வென்றார். ஜெயலலிதா மறைவுக்கு அதிமுக பிளவுபட்ட நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களில் ஒருவராக செந்தில் பாலாஜி இருந்தார். இதனால் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் பின்னர் திமுகவில் செந்தில் பாலாஜி சேர்ந்தார். அப்போது நடந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார்.
ஆனால் 2021-ல் கரூர் தொகுதிக்கே மறுபடியும் வந்து வென்று அமைச்சரானார்.
3 முறை கரூர் தொகுதியிலும் 2 முறை அரவக்குறிச்சியிலும் வென்ற செந்தில் பாலாஜிக்கு கரூர் தொகுதி பாதுகாப்பானதுதான் என்றாலும் திமுக தலைமையின் கட்டளைக்காக கோவை மாவட்ட பொறுப்பாளராக இடம் பெயர்ந்து தற்போது கோவை தெற்கு தொகுதியிலேயே போட்டியிடுகிறார்.
தொகுதிகள் மாறி, கட்சிகள் மாறி மாறி.. என்ற போதும் 'வெற்றி'யை மட்டும் அறுவடை செய்து கொண்டே இருப்பதுதான் செந்தில் பாலாஜியின் ஆகப் பெரும் பலமாகவும் பார்க்கப்படுகிறது.
கோவையில் திமுக
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை திமுகவிற்கு எப்போதும் ஒரு சறுக்கல் இருந்து வருகிறது. 1996 அதிமுகவுக்கு எதிரான அலையின் போது மட்டுமே திமுகவால் 10 சட்டமன்ற தொகுதிகளைக் கைப்பற்ற முடிந்தது. அதன் பிறகான தேர்தலில் கூட திமுகவுக்கு ஓரிரு தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.
கடைசியாக நடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் திமுகவால் ஒரு இடத்தைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை.
செந்தில் பாலாஜி வருகைக்கு பின்..
இந்தச் சூழலில்தான், செந்தில் பாலாஜியை கோவையின் பொறுப்பாளராக திமுக தலைமை நியமித்தது. அவரது வருகைக்குப் பின் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலிலும் கோவையில் திமுக சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. நாடாளுமன்ற தேர்தலின் போது சிறையில் இருந்தாலும் செந்தில் பாலாஜியின் ஆதிக்கம் அந்த தேர்தலில் இருந்தது என்பது கள யதார்த்தம்.
சிறைவாசம், சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்று மீண்டும் நீதிமன்ற உத்தரவால் பதவியை இழந்த செந்தில் பாலாஜிக்கு, இந்தத் தேர்தல் ஒரு கௌரவப் போராட்டமாகும்.
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள இந்த தொகுதி. இங்கு ஜாதிக் கணக்குகள், கடந்த கால வாக்கு வங்கி மற்றும் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம் எனப் பல காரணிகள் வெற்றியைத் தீர்மானிக்கக் காத்திருக்கின்றன.
2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசன் 53,209 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் 51,481 வாக்குகளைப் பெற்று 2-ம் இடத்தைப் பிடித்தார்.
ஆனால், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் வேட்பாளர், 42,383 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இது திமுகவுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
இருப்பினும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. திமுக சுமார் 41.4% வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தது. அப்போது தனித்துப் போட்டியிட்ட பாஜக 32.8% வாக்குகளையும், அதிமுக 17.2% வாக்குகளையும் பெற்றன.
தற்போது 2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், இந்த இரு கட்சிகளின் வாக்குகளும் (32.8% + 17.2% = 50%) ஒன்றாகச் சேரும் பட்சத்தில், அது செந்தில் பாலாஜிக்கு சவாலாக இருக்கக் கூடும். ஆனால் கடந்த 2021-ல் கமலஹாசன் பெற்ற வாக்குகள் பெரும்பகுதி திமுகவிற்கு கிடைக்கும் என்பது திமுகவினர் எதிர்ப்பார்ப்பு.
அதிமுகவின் உள்ளூர் முகம் பிரசாரம்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இந்தத் தொகுதியின் 'மண்ணின் மைந்தன்'. 2016-ல் இதே தொகுதியில் வென்ற அனுபவம் கொண்டவர்.
செந்தில் பாலாஜியை "வெளியூர் வேட்பாளர்" என்று முன்னிறுத்தி அதிமுக தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும், கொங்கு மண்டல அதிமுகவின் பலமான தளபதியாகக் கருதப்படும் எஸ்.பி. வேலுமணி, இந்தத் தொகுதியைத் தனது தன்மானப் பிரச்சனையாகக் கருதி தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
தவெகவிற்கு போகும் வாக்குகள்
இந்தத் தேர்தலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
'எலக்ஷன் ஸ்பெஷலிஸ்ட்' செந்தில் பாலாஜி
திமுக அரசின் சாதனைகள், கோவைக்கான திட்டங்கள் ஆகியவற்றை முன்வைத்து பிரசாரம் என்கிற வழக்கமான உத்திகளுக்கு அப்பால் செந்தில் பாலாஜியின் மிக நுணுக்கமான தேர்தல் வியூகம் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாகவும் இருக்கிறது.
அதாவது செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகம் எப்போதுமே ஆச்சரியத்துடன் பார்க்க வைக்கும். இதை பற்றி திமுகவினர் கூறுகையில், "கரூரில் போன எலக்ஷன்ல அதிமுக விஜயபாஸ்கர் சைடுல வாக்குப் பதிவுக்கு முதல் நாள் இரவு பணம் கொடுத்துட்டாங்க.. இந்த தகவல் செந்தில் பாலாஜிக்கு வருது.. விடிஞ்சா ஓட்டு போட மக்கள் வந்துடுவாங்க.. அந்த நைட்ல கொஞ்ச டைம்தான் கேப்.. ஆனா செந்தில் பாலாஜி தன்னோட டீமை அசுரத்தனமாக இறக்கி எல்லா வீட்டுக்கும் கொலுசுகளை கொண்டு போய் சேர்த்துட்டாரு.. அதோட செந்தில் பாலாஜி நிற்கவும் இல்லை.. ஓட்டுப் போட வர்ற பெண்கள், தாம் வாங்கி கொடுத்த புது கொலுசுகளை போட்டுகிட்டு வர்றாங்களான்னு பார்க்கவும் ஒரு டீமை இறக்கி இருந்தாரு..
அந்த டீமும் உன்னிப்பாக கவனிச்சுகிட்டே இருந்துச்சு.. பகல் 11 மணிக்கு மேல புது கொலுசுகளுடன் பெண்கள் சாரை சாரையா ஓட்டு போட வர ஆரம்பிச்சாங்க.. இந்த மெசேஜ் செந்தில் பாலாஜிக்கு போகுது.. அப்ப , "நாம உறுதியா ஜெயிச்சுட்டோம்"னு நச்சுன்னு ரிசல்ட்டை கணிச்சு சொன்னாரு.. அந்த அளவுக்கு கிராஸ் ரூட் லெவல்ல நுட்பமாக எலக்ஷன் ஒர்க் பார்க்கிறதுல அவரை அடிச்சுக்கவே முடியாது.. அந்த டெக்னிக் எல்லாத்தையும் 'மொத்த வித்தையையும்' இங்கேயும் கோவை தெற்கில் களமிறக்குவாரு செந்தில் பாலாஜி" என்கின்றனர்.
சிறுபான்மை வாக்குகள்
இதே கோவை தெற்கு தொகுதியில், அதிமுக-பாஜக கூட்டணியின் வலுவான வாக்கு வங்கி மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளின் சிதறல் ஆகியவை வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன. சுமார் 15% உள்ள சிறுபான்மையினர் வாக்குகள் முழுமையாகத் திமுகவிற்கு விழுமா அல்லது தவெக அதில் கைவைக்குமா என்பதும் முக்கியம்.
தற்போதைய சூழலில் கோவை தெற்கில் அதிமுக-திமுக இடையே போட்டி கடுமையாகவே உள்ளது. யார் வென்றாலும் குறைந்த வாக்கு வித்தியாசமே வெற்றியைத் தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது.
அரசியலில் நுட்பமான முறையில் காய் நகர்த்தும் செந்தில் பாலாஜியின் வியூகம் ஜெயிக்குமா என்ற எதிர்பார்ப்பு கோவை தெற்கு தொகுதியை நட்சத்திர தொகுதியாக மாற்றி உள்ளதாக கூறலாம். சுருக்கமாகச் சொன்னால்: கோவை தெற்கு தொகுதி ஒரு சதுரங்கக் களமாக மாறியுள்ளது. செந்தில் பாலாஜியின் வியூகங்கள் அதிமுகவின் கோட்டையைத் தகர்க்குமா அல்லது அதிமுக-பாஜக கூட்டணி தனது பலத்தைத் தக்கவைக்குமா என்பது மே 4ல் வெளியாகும் மக்களின் தீர்ப்பில் தெரியும்.

